"தலித் மக்களில் 42 சதவிகிதத்தினர் ஏழ்மையில் வாடுகின்றனர்" - பிகார் சாதிவாரி கணக்கெடுப்பில் பகீர் தகவல்
சாதிவாரி பொருளாதார, கல்வி நிலை குறித்த தகவல்கள் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
பிகார் மாநிலத்தில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த நிதிஷ் குமார் தலைமையிலான அரசு முடிவெடுத்து, இரண்டு கட்டங்களாக அதற்கான பணிகளை மேற்கொண்டது. சட்ட ரீதியாக பல்வேறு சவால்களை கடந்து, கடந்த அக்டோபர் மாதம் 2ஆம் தேதி, சாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பான முதற்கட்ட விவரங்களை பிகார் அரசு வெளியிட்டது.
சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு:
அதன்படி, பிகார் மக்கள் தொகையில் 60 சதவிகிதத்திற்கும் மேற்பட்டோர் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர்கள் என்றும் 20 சதவிகிதத்திற்கும் மேற்பட்டோர் பட்டியலின, பழங்குடியின வகுப்பை சேர்ந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டது. மாநில மக்கள் தொகையில் 15.5 சதவகிதத்தினர் பொது பிரிவினர் என கண்டறியப்பட்டது.
இந்த நிலையில், சாதிவாரி பொருளாதார, கல்வி நிலை குறித்த தகவல்கள் இன்று வெளியிடப்பட்டுள்ளது. பிகார் சட்டப்பேரவையில் வெளியிட்ட தகவல்களின் அடிப்படையில், பட்டியலின, பழங்குடியினர் குடும்பங்களில் 42 சதவீதத்திற்கும் அதிகமானோர் ஏழைகளாக உள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர்களில் 33 சதவிகிதத்திற்கும் அதிகமானோர் ஏழைகள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. பட்டியல் சாதியினரில் ஆறு சதவீதத்திற்கும் குறைவானவர்களே பள்ளிப்படிப்பை முடித்திருக்கின்றனர். மொத்தமாக, மாநிலத்தில் உள்ள 34.13 சதவீத குடும்பங்களின் மாத வருமானம், 6,000 ரூபாய் என கணக்கிடப்பட்டுள்ளது.
"42.93 சதவிகித பட்டியல் சாதி மக்கள் வறுமையில் வாடுகின்றனர்"
29.61 சதவீத குடும்பங்களின் மாத வருமானம், 10,000 ரூபாய் அல்லது குறைவானதாக இருக்கிறது என கூறப்பட்டுள்ளது. 28 சதவீத குடும்பங்கள், 10,000 ரூபாயில் இருந்து 50,000 ரூபாய் வரை சம்பாதிக்கிறார்கள். மாநில மக்கள் தொகையில் வெறும் 4 சதவிகிதத்தினர் மட்டுமே 50,000 ரூபாய்க்கு மேல் மாத வருமானம் ஈட்டுகின்றனர்.
மொத்த மக்கள் தொகையில், 42.93 சதவிகிதம் பட்டியல் சாதி மக்கள், 42.70 சதவிகித பழங்குடியின மக்கள் வறுமையில் வாடுகின்றனர். அதேபோல, 33.16 சதவிகித பிற்படுத்தப்பட்ட வகுப்பினரும் 33.58 சதவகித மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரும் வறுமையில் வாடுகின்றனர். மற்ற சாதிகளில், 23.72 சதவகித மக்கள் வறுமையில் வாடுகின்றனர் என கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது. 25.09 சதவிகித பொது பிரிவினர், வறுமையில் வாடுவதாக கூறப்பட்டுள்ளது.
பொது பிரிவினரில் உள்ள பூமிஹார்ஸ் சமூக மக்களில் 25.32 சதவிகிதத்தினர் ஏழைகளாக உள்ளனர் என கண்டறியப்பட்டுள்ளது. பிராமண சமூகத்தை சேர்ந்தவர்களில் 25.3 சதவிகிதத்தினரும் ராஜ்புத் சமூகத்தை சேர்ந்தவர்களில் 24.89 சதவிகிதத்தினரும் ஏழைகளாக உள்ளனர் என குறிப்பிடப்பட்டுள்ளது.
மாநில மக்கள் தொகையில் பிராமண, ராஜ்புத் சமூக மக்கள் 7.11 சதவகிதத்தினர் உள்ளனர். பூமிஹார்ஸ் சமூக மக்கள், 2.86 சதவிகிதமாக உள்ளனர். பிற்படுத்தப்பட்ட வகுப்பினரில், 35.87 சதவீத யாதவ சமூக மக்கள் ஏழைகளாக உள்ளனர். 34.32 சதவீத குஷ்வாஹா சமூக மக்களும் 29.9 சதவீத குர்மி சமூக மக்களும் ஏழைகளாக உள்ளனர்.