பதைபதைக்க வைத்த சம்பவம்.. புனித நீராடும்போது, 37 குழந்தைகள் உட்பட 43 பேர் உயிரிழப்பு.. 3 பேர் மாயம்..
பீகாரில் ஜிவித்புத்ரிகா விழாவில் ஆற்றில் மூழ்கி 43 பேர் உயிரிழந்தனர். விழாவின் ஒரு பகுதியாக 15 மாவட்டங்களில் ஆற்றில் புனித நீராடும்போது இந்த சோக சம்பவம் நடந்துள்ளது.
பீகார் மாநிலத்தில் ஆற்றில் மூழ்கி 43 பேர் உயிரிழந்தனர். 3 பேர் மாயமாகியுள்ளனர். ஜிவித்புத்ரிகா விழாவின் ஒரு பகுதியாக புனித நீராடும்போது இந்த சம்பவம் நடந்துள்ளது. 37 குழந்தைகள் உட்பட 43 பேர் மரணம் அடைந்துள்ளதாக பீகார் அரசு தகவல் வெளியிட்டுள்ளது.
37 குழந்தைகளின் உயிரை பறித்த சம்பவம்:
'ஜிவித்புத்ரிகா' விழாவின் போது, பெண்கள் தங்கள் குழந்தைகளின் நலனுக்காக விரதம் மேற்கொள்கின்றனர். இதில், உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு 4 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் அறிவித்துள்ளார்.
STORY | 43 die, 3 missing while taking holy dip during ‘Jivitputrika’ festival in 15 #Bihar districts
— Press Trust of India (@PTI_News) September 26, 2024
READ: https://t.co/uOvAhFD5df pic.twitter.com/TgFGxjjdIv
கிழக்கு மற்றும் மேற்கு சம்பாரன், நாளந்தா, அவுரங்காபாத், கைமூர், பக்சர், சிவன், ரோஹ்தாஸ், சரண், பாட்னா, வைஷாலி, முசாபர்பூர், சமஸ்திபூர், கோபால்கஞ்ச், அர்வால் ஆகிய மாவட்டங்களில் புனித நீராடும்போது மக்கள் ஆற்றில் மூழ்கியுள்ளனர்.
இம்மாதிரியான திருவிழாவின்போது அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பது வழக்கம். ஆனால், பீகாரில் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருவது பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது. கடந்த சில நாள்களாகவே பாலங்கள் இடிந்து விழுந்து வருகிறது.
கடந்த ஜூன் 18ஆம் தேதி முதல், மாநிலம் முழுவதும் கிஷன்கஞ்ச், அராரியா, மதுபானி, கிழக்கு சம்பாரண், சிவன் மற்றும் சரண் ஆகிய இடங்களில் 10க்கும் மேற்பட்ட பாலங்கள் இடிந்து விழுந்தன. சிவானில் மட்டும் ஒன்பது பாலங்கள் இடிந்து விழுந்தன.
அலட்சியமாக செயல்பட்டதாக நீர்வளம் மற்றும் ஊரகப் பணிகள் துறையைச் சேர்ந்த 15 பொறியாளர்களை பீகார் அரசு, கடந்த ஜூலை 5ஆம் தேதி இடைநீக்கம் செய்தது.