காற்றின் தரத்தை மேம்படுத்துவதில் சிறப்பாக செயல்பட்ட நகரங்களின் பட்டியல்.. டாப்பாக வந்த சென்னை, மதுரை
தேசிய சுற்றுப்புற காற்று தரநிலை இலக்குகளை அடைவதில் சிறந்த முயற்சிகளை எடுத்த நகரங்களின் பட்டியலில் சென்னை, மதுரை, திருச்சி ஆகியவை இடம்பெற்றுள்ளது.
காற்றின் தரத்தை மேம்படுத்துவதில் சிறப்பாக செயல்பட்ட நகரங்களுக்கு மத்திய அமைச்சர் பூபேந்தர் யாதவ் பாராட்டு தெரிவித்துள்ளார். கடந்த 2023-24ஆம் ஆண்டில், தேசிய சுற்றுப்புற காற்று தரநிலை இலக்குகளை அடைவதில் சிறந்த முயற்சிகளை எடுத்த நகரங்களின் பட்டியலில் சென்னை, மதுரை, திருச்சி ஆகியவை இடம்பெற்றுள்ளது.
சிறப்பாக செயல்பட்ட நகரங்கள்:
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் தூய்மையான காற்று தினத்தை முன்னிட்டு தேசிய தூய்மையான காற்று திட்டத்தின் (என்.சி.ஏ.பி) உயர்மட்டக் குழுவின் 4-வது கூட்டத்திற்கு மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத்துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ் தலைமை தாங்கினார்.
24 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் மற்றும் 131 நகரங்களில் தேசிய, மாநில மற்றும் நகர அளவில் தூய்மையான காற்று திட்டத்தின் செயல்பாட்டை அவர் ஆய்வு செய்தார். இந்த திட்டத்தின் கீழ், 2019-20 முதல் 2025-26 வரை நகர செயல் திட்டங்களை செயல்படுத்துவதற்காக 131 நகரங்களுக்கு செயல்பாட்டு அடிப்படையிலான மானியமாக 19,612 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.
2025-26 ஆம் ஆண்டிற்குள் பி.எம் 10 நிலைகளில் 40% குறைப்பு அல்லது தேசிய சுற்றுப்புற காற்று தரநிலைகளை அடைவதற்கான இலக்குகளை அடைய இந்த நகரங்களுக்கு இதுவரை ரூ.11,211 கோடி வழங்கப்பட்டுள்ளது.
தேசிய தூய்மையான காற்று திட்டம்:
என்.சி.ஏ.பி.யின் 64 நகரங்களில் மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத்துறை அமைச்சகத்தின் நகர வன திட்டத்தின் கீழ் ரூ .142 கோடியுடன் 3776 ஹெக்டேர் நகர வனம் / தோட்டங்கள் உருவாக்கப்பட்டதை மத்திய அமைச்சர் பூபேந்தர் யாதவ் எடுத்துரைத்தார்.
மீதமுள்ள நகரங்கள் தங்கள் பகுதிகளில் பசுமை இடங்களை உருவாக்க திட்டத்தின் கீழ் வளங்களைப் பெற வேண்டும் என்று வலியுறுத்தினார். 2023-24 ஆம் ஆண்டில் பி.எம் 10 நிலைகளில் தேசிய சுற்றுப்புற காற்று தரநிலைகளை பூர்த்தி செய்யும் வகையில் 95 நகரங்கள் மற்றும் 18 நகரங்களில் காற்றின் தரத்தை மேம்படுத்துவதற்காக திட்டத்தின் கீழ் முயற்சிகளை எடுத்தன.
95 நகரங்களில் சென்னை, மதுரை, திருச்சி ஆகியவை இடம்பெற்றுள்ளது. இந்த நகரங்களை மத்திய அமைச்சர் பாராட்டினார். 51 நகரங்கள் 20% குறைப்பையும், 21 நகரங்கள் ஏற்கனவே பி.எம் 10 அளவுகளில் 40% குறைப்பையும் எட்டியுள்ளன என்று அவர் தெரிவித்தார்.
பிரதமர் மோடியால் தொடங்கப்பட்ட உலகளாவிய பிரச்சாரமான ‘தாயின் பெயரில் ஒரு மரம்’ திட்டத்தின் கீழ் 131 நகரங்களில் நடத்தப்பட்ட விரிவான மரம் நடும் இயக்கங்களை மத்திய அமைச்சர் பாராட்டினார். மத்திய மற்றும் மாநில அரசுகளின் திட்டங்களை ஒருங்கிணைக்க அனைத்து மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களுக்கு வழிகாட்டுதலை வழங்கிய அவர், காற்று மாசுபாட்டை எதிர்கொள்ள இந்தத் திட்டங்களின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்.