Bhabanipur Bypoll 2021 : மம்தா பானர்ஜிக்கு எதிரான களமிறங்கும் பா.ஜ.கவின் பிரியங்கா திபெர்வால்.. யார் இவர்?
மேற்கு வங்காளத்தில் பபானிபூர் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் மம்தா பானர்ஜிக்கு எதிராக பா.ஜ.க. சார்பில் பிரியங்கா திபெர்வால் போட்டியிடுகிறார்.
மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள பபானிபூர் தொகுதிக்கான இடைத்தேர்தலில், தனது முதல்வர் பதவியை தக்கவைப்பதற்காக மம்தா பானர்ஜி போட்டியிட உள்ளார். அவருக்கு போட்டியாக அந்த மாநில எதிர்க்கட்சியான பா.ஜ.க. பிரியங்கா திபெர்வால் என்ற பெண்ணை வேட்பாளராக களமிறக்கியுள்ளது.
பிரியங்கா திபெர்வால் கடந்த 1981-ஆம் ஆண்டு ஜூலை 7-ஆம் தேதி பிறந்தவர். அவர் தனது பள்ளிப்படிப்பை கொல்கத்தாவில் நிறைவு செய்துள்ளார். அவர் தனது பட்டப்படிப்பை டெல்லியில் நிறைவு செய்தார். பின்னர், கொல்கத்தா பல்கலைகழகத்தின் கீழ் உள்ள ஹசாரா சட்டக்கல்லூரியில் தனது சட்டப்படிப்பையும் நிறைவு செய்துள்ளார். தாய்லாந்து பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ. படிப்பையும் நிறைவு செய்துள்ளார். நீதிமன்றத்தில் வழக்கறிஞராகவும் பொறுப்பு வகித்து வருகிறார்.
இதையடுத்து, கடந்த 2014-ஆம் ஆண்டு பிரியங்கா திபெர்வால் பா.ஜ.க.வில் இணைந்தார். முன்னதாக, அவர் பா.ஜ.க.வின் மக்களவை உறுப்பினரான பாபூல் சுப்ரியோவிற்கு சட்ட ஆலோசகராகவும் செயல்பட்டார். பின்னர், 2015-ஆம் ஆண்டு அவர் கொல்கத்தா மாநகராட்சி தேர்தலில் 58-வது வார்டில் போட்டியிட்டார். ஆனால், அவர் திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளரிடம் தோல்வியை தழுவினார்.
அவரது சிறப்பான செயல்பாட்டை கண்ட கட்சித் தலைமை அவருக்கு கடந்த 2020-ஆம் ஆண்டு மேற்கு வங்க மாநிலத்தின் பா.ஜ.க. யுவ மோர்சா அணியின் துணைத்தலைவர் பதவியை அளித்தது. தற்போது, பா.ஜ.க.வின் தேசிய செய்தித்தொடர்பாளர்களில் ஒருவராக பிரியங்கா திபெர்வால் பொறுப்பு வகித்து வருகிறார்.
கடந்த ஏப்ரல் மாதம் மேற்கு வங்கத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் என்டலி தொகுதியில் பிரியங்கா திபெர்வால் போட்டியிட்டார். ஆனால், தன்னை எதிர்த்து போட்டியிட்ட திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வேட்பாளரிடம் 58 ஆயிரத்து 257 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினார்.
பபானிபூர் தொகுதியில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள பிரியங்கா திபெர்வால் தன்னை வேட்பாளராக தேர்வு செய்தது தொடர்பாக அளித்துள்ள பேட்டியில், ”கட்சித் தலைமை என்னிடம் பபானிபூர் தொகுதியில் போட்டியிடுவது பற்றி கருத்து கேட்டனர். பலரது பெயர் பட்டியலில் இருந்தன. யாரை தேர்வு செய்வார்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை. என்னை தேர்வு செய்தததற்கும், எனக்கு ஆதரவு அளித்ததற்கும் எனது கட்சியின் மூத்த தலைவர்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன் என்றார்.
முன்னதாக, தமிழ்நாடு, கேரளம், புதுச்சேரி ஆகிய மாநில சட்டசபை தேர்தலுடன் இணைந்து மேற்கு வங்க மாநில சட்டசபை தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்றது. மேற்குவங்க மாநிலத்தில் உள்ள நந்திகிராம் தொகுதியில் மம்தா பானர்ஜி போட்டியிட்டார். ஆனால், அதிர்ச்சிதரும் தகவலாக அவர் பா.ஜ.க. வேட்பாளரிடம் தோல்வியை தழுவினார்.
இருப்பினும், மேற்கு வங்க மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அபார வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடித்தது. நந்திகிராமில் தோல்வியடைந்தாலும் மம்தா பானர்ஜியே மீண்டும் முதல்-அமைச்சராக பொறுப்பு ஏற்றுக்கொண்டார். இருப்பினும் தேர்தல் விதிப்படி, மம்தா பானர்ஜி தனது பதவியை தக்க வைப்பதற்காக 6 மாதங்களுக்குள் எம்.எல்.ஏ-வாக வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.
இதற்காக, அவரது கட்சி எம்.எல்.ஏ.வான ஷோபந்தேவ் சட்டோபாத்பாய், தான் சட்டமன்ற உறுப்பினராக பொறுப்பு வகிக்கும் பபானிபூர் தொகுதி எம்.எல்.ஏ. பொறுப்பை ராஜினாமா செய்தார். இதையடுத்து, அனைவரும் எதிர்பார்த்தபடி மம்தா பானர்ஜி பபானிபூர் தொகுதியில் போட்டியிடுவார் என்று நேற்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. பபானிபூர் தொகுதிக்கு வரும் 30-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.