Crime : மிஸ்டுகால் மூலம் இளம்பெண்களுக்கு வலை! நிர்வாணப்படம் காட்டி பணம் மோசடி! சிக்கிய இளைஞர்!
கர்நாடகாவில் இளம்பெண்ணின் நிர்வாண புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பரப்பிவிடுவதாக கூறி பணம் கேட்டு மிரட்டிய இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கர்நாடகா மாநிலத்தில் அமைந்துள்ளது விஜயபுரம். இந்த பகுதியில் வசிப்பவர் பிரசாந்த். 31 வயதான அவர் இந்த பகுதியில் விவசாயம் செய்து வருகிறார். அவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது செல்போனில் இருந்து பெங்களூரில் வசித்து வந்த ஒரு பெண்ணின் எண்ணுக்கு தொடர்ந்து குறுஞ்செய்தியும், மிஸ்டு காலும் அளித்து வந்தார்.
இதனால், கோபமடைந்த அந்த பெண் பிரசாந்திற்கு போன் செய்து திட்டியுள்ளார். பின்னர். அந்த பெண்ணிடம் மன்னிப்பு கேட்ட பிரசாந்த் அந்த பெண்ணிடம் நட்பாக பேசியுள்ளார். அந்த பெண்ணும் பிரசாந்தை மன்னித்து அவருடன் நட்பாக பழகியுள்ளார். நாளடைவில் இவர்களது நட்பு காதலாகியுள்ளது. செல்போனில் தொடர்ந்து இருவரும் பேசிக்கொண்டும், குறுஞ்செய்தி அனுப்பிக் கொண்டும் இருந்தனர்.
பின்னர், பிரசாந்த் அந்த பெண்ணிடம் அவரது அந்தரங்க புகைப்படங்களை அனுப்பச் சொல்லி வற்புறுத்தியுள்ளார். பிரசாந்த் அந்த பெண்ணை திருமணம் செய்வதாக உத்தரவாதம் அளித்திருந்ததால், அந்த பெண்ணும் பிரசாந்திற்கு அவரது நிர்வாண புகைப்படங்களையும், வீடியோக்களையும் அனுப்பி வைத்தார்.
இளம்பெண்ணின் நிர்வாண புகைப்படங்களும், வீடியோக்களும் கிடைத்த உடனே பிரசாந்த் அந்த இளம்பெண்ணை மிரட்டத் தொடங்கியுள்ளார். இந்த புகைப்படத்தை வெளியில் விடாமல் இருக்க வேண்டும் என்றால் பணம் அளிக்க வேண்டும் என்றும், பணம் தராவிட்டால் சமூக வலைதளங்களில் வெளியிடுவேன் என்றும் மிரட்டியுள்ளார். இதனால், அந்த இளம்பெண் அதிர்ச்சியடைந்துள்ளார்.
அந்த பெண்ணை மேலும் பயமுறுத்த வேண்டும் என்பதற்காக அந்த பெண்ணின் பேஸ்புக் பாஸ்வேர்டை கட்டாயப்படுத்தி வாங்கி அதில் அந்த பெண்ணின் ஆபாச புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். பின்னர், அந்த படத்தை நீக்க வேண்டும் என்றால் 7 ஆயிரம் அளிக்க வேண்டும் என்று கூறி அந்த பணத்தையும் பெற்றுள்ளார். இதுபோன்று பல சமயங்களில் அந்த பெண்ணை மிரட்டி ரூபாய் 50 ஆயிரம் வரை பெற்றுள்ளார்.
இதனால், ஒரு கட்டத்திற்கு மேல் அந்த இளம்பெண் பெங்களூரில் உள்ள சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து, போலீசார் பிரசாந்தை கைது செய்து அவரது செல்போனை பறிமுதல் செய்தனர். போலீஸ் விசாரணையில் பிரசாந்த் பள்ளிப்படிப்பை பாதியிலே கைவிட்டவர் என்பதும், இதபோல பெண்களுக்கு மிஸ்ட் கால் அளிப்பதும் பின்னர் அவர்களிடம் நெருக்கமாக பேசி பழகி அவர்களது ஆபாச படங்களை காட்டி மிரட்டி பணம் பறிப்பதை வழக்கமாக கொண்டிருப்பவர் என்பதும் தெரியவந்தது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்