"வெற்று மிரட்டல்கள் என்கிட்ட பலிக்காது" - பறிக்கப்படுகிறதா எம்பி பதவி? ஓவைசி பதிலடி!
மக்களவையில் எம்.பி.ஆக பதவியேற்கும்போது, ஜெய் பாலஸ்தீனம் என முழங்கிய ஏஐஎம்ஐஎம் கட்சி தலைவர் அசாதுதீன் ஓவைசி. இதற்கு பாஜக எம்பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
18ஆவது மக்களவையின் முதல் அமர்வு நேற்றுமுன்தினம் தொடங்கிய நிலையில், புதிதாக தேர்வு செய்யப்பட்ட எம்.பி.க்கள் இரண்டு நாள்களாக பதியவேற்றனர். அருணாச்சல பிரதேசம், ஆந்திர பிரதேசம், பிகார் மாநில எம்.பி.க்கள் முதல்நாளும் தமிழ்நாடு, தெலங்கானா, உத்தரப் பிரதேசம் மாநில எம்.பி.க்கள் இரண்டாவது நாளான நேற்றும் பதவியேற்றனர்.
ஓவைசியின் 'சர்ச்சை' முழக்கம்: அந்த வகையில், ஹைதராபாத் மக்களவை உறுப்பினராக ஏஐஎம்ஐஎம் கட்சியின் அசாதுதீன் ஓவைசி நேற்று உறுதி மொழி ஏற்றார். இறுதியாக, ஜெய் பீம், ஜெய் MIM (கட்சி பெயர்), ஜெய் தெலங்கானா, ஜெய் பாலஸ்தீனம், அல்லாஹு அக்பர் என முழக்கங்களை எழுப்பினார்.
பதவியேற்பின்போது, 'ஜெய் பாலஸ்தீனம்' என ஓவைசி முழங்கியதற்கு பாஜக எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில், இந்த காரணத்தை முன்வைத்து மக்களவை உறுப்பினர் பதவியில் இருந்து ஓவைசி இடைநீக்கம் செய்யப்பட வேண்டும் என பாஜக கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து தெலங்கானா பாஜகவின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர் என்.வி. சுபாஷ் கூறுகையில், "இந்திய மண்ணில் பிறந்து வளர்ந்த அசாதுதீன் ஓவைசி, இந்திய நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்கும் போது எப்படி அவரால் வெளிநாட்டின் பெயரை உச்சரிக்க முடியும்?
Delhi: AIMIM leader Asaduddin Owaisi takes oath as a Member of Parliament pic.twitter.com/2eqaraa4Fa
— IANS (@ians_india) June 25, 2024
பறிக்கப்படுகிறதா எம்.பி. பதவி? மற்ற நாட்டு முஸ்லீம்களுக்காக வேறு மன்றத்தில் ஓவைசி தனது ஆதரவை தெரிவித்திருக்க வேண்டும். நாடாளுமன்றத்தில் பதவியேற்பு விழா ஒரு புனிதமான நிகழ்வாகும். ஏனெனில், தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்கள் அரசியலமைப்பை பாதுகாப்பதற்கான உறுதிமொழியையும் விருப்பத்தையும் வெளிப்படுத்தி சத்தியப்பிரமாணம் செய்கிறார்கள்.
அந்நிய நாட்டின் பெயரை உச்சரிப்பது எதிரி நாட்டுக்கு ஆதரவாக கோஷம் எழுப்புவது போன்றது. ஓவைசி, தனது சொந்த நாட்டில் உள்ள தனது சொந்த சமூக மக்களின் நலனில் சிறிதும் கவலைப்படவில்லை. ஆனால், இந்திய ஜனநாயகத்தின் கோவிலான நாடாளுமன்றத்தை பயன்படுத்தி மலிவான பிரபலத்தைப் பெறுவதற்காகவே பிற நாட்டு மக்களைப் பற்றி அவர் கவலைப்படுகிறார். எனவே, மக்களவை எம்.பி.யாக அவர் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும்" என்றார்.
இதற்கு பதிலடி அளித்த ஓவைசி, "அவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்யட்டும். எனக்கும் அரசியலமைப்புச் சட்டம் பற்றி ஓரளவு தெரியும். இந்த வெற்று மிரட்டல்கள் என்கிட்ட பலிக்காது" என்றார்.
இதுகுறித்து நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ கூறுகையில், "பாலஸ்தீனத்துடனோ அல்லது வேறு எந்த நாட்டுடனோ எங்களுக்கு பகை இல்லை. சத்தியப்பிரமாணம் செய்யும்போது, எந்த உறுப்பினரும் மற்றொரு நாட்டைப் புகழ்ந்து கோஷம் எழுப்புவது முறையா என்பதுதான் பிரச்னை" என்றார்.