Sanatan Dharma: "இந்து மத வெறுப்பு.. கலாசாரம் மீதான தாக்குதல்".. உதயநிதியை அட்டாக் செய்த அமித் ஷா
அமைச்சர் உதயநிதி கருத்தை கடுமையாக சாடியுள்ள மத்திய அமைச்சர் அமித் ஷா, இந்து மதத்தை I.N.D.I.A கூட்டணி வெறுப்பதாகவும் கலாசாரம் மீது தாக்குதல் தொடுக்கப்பட்டதாகவும் கூறியுள்ளார்.
சென்னை காமராஜர் அரங்கில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கம் சார்பில் நேற்று சனாதன ஒழிப்பு மாநாடு நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்துகொண்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சனாதனத்தை எதிர்த்து கடுமையாக பேசியிருந்தார்.
உதயநிதி பேசியது என்ன?
"சனாதனம் என்றால் என்ன? சனாதனம் என்கிற பெயரே சமஸ்கிருதத்திலிருந்து வந்ததுதான். சனாதனம் சமத்துவத்திற்கும் சமூக நீதிக்கும் எதிரானது. யாரும் கேள்வி கேட்க முடியாது அப்படி என்பதுதான் சனாதனத்திற்குரிய அர்த்தம். எல்லாவற்றையும் மாற்ற வேண்டும். எதுவுமே நிலையானது கிடையாது எல்லாவற்றையும் நாம் கேள்வி கேட்க வேண்டும் என்பதற்காக உருவான இயக்கம்தான் இந்த கம்யூனிஸ்ட் இயக்கமும், திராவிட முன்னேற்ற கழகமும்தான். டெங்கு, மலேரியா நோயை போல் சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும் ” என உதயநிதி பேசியிருந்தார்.
ஆனால், இனப்படுகொலை செய்ய வேண்டும் என அமைச்சர் உதயநிதி அழைப்பு விடுப்பதாக பாஜக ஐடி பிரிவு பொறுப்பாளர் எக்ஸ் (ட்விட்டர்) வலைதளத்தில் பதிவிட, இந்த விவகாரம் பெரும் சர்ச்சையானது. இந்து மக்களுக்கு எதிராக அமைச்சர் உதயநிதி பேசுவதாக கருத்து பரவியது.
"இந்து மதத்தை வெறுக்கும் I.N.D.I.A கூட்டணி"
இந்த நிலையில், அமைச்சர் உதயநிதி கருத்தை கடுமையாக சாடியுள்ள மத்திய அமைச்சர் அமித் ஷா, இந்து மதத்தை I.N.D.I.A கூட்டணி வெறுப்பதாகவும் கலாசாரம் மீது தாக்குதல் தொடுக்கப்பட்டதாகவும் கூறியுள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம் துங்கர்பூரில் பாஜகவின் மாற்றத்திற்கான பயணத்தை தொடங்கி வைத்து பேசிய அவர், "உதயநிதி ஸ்டாலினின் கருத்துக்கள் இந்திய கூட்டணியின் வாக்கு வங்கி அரசியலை குறிக்கிறது. குறிப்பிட்ட பிரிவை திருப்திப்படுத்தும் தந்திரத்தின் ஒரு பகுதியாகும். வாக்கு வங்கி மற்றும் திருப்திப்படுத்தும் அரசியலுக்காக காங்கிரஸ் எந்த எல்லைக்கும் செல்லலாம்" என்றார்.
கடந்த 2010ஆம் ஆண்டு, ராகுல் காந்தி தெரிவித்த கருத்தை குறிப்பிட்டு பேசிய அவர், "தீவிரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பாவை விட தீவிர இந்து அமைப்புகள் மிகப்பெரிய அச்சுறுத்தல் என ராகுல் காந்தி கூறியிருந்தார். ராகுல், நீங்கள் இந்து அமைப்புகளை லஷ்கர்-இ-தொய்பாவுடன் ஒப்பிட்டு பேசுனீர்கள்" என்றார்.
உதயநிதி விளக்கம்:
முன்னாள் உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே கருத்தை மேற்கோள் காட்டி பேசிய அமித் ஷா, "நாட்டில் இந்து பயங்கரவாதம் இருப்பதாக உங்கள் உள்துறை அமைச்சர் கூறினார்" என்றார்.
சனாதனம் குறித்து தான் பேசிய கருத்துக்கு விளக்கம் அளித்துள்ள உதயநிதி ஸ்டாலின், "சனாதன தர்மம் சாதி மற்றும் மதத்தின் பெயரால் மக்களை பிரிக்கும் கொள்கை. சனாதன தர்மத்தை பின்பற்றும் மக்களை இனப்படுகொலை செய்ய நான் ஒருபோதும் அழைப்பு விடுக்கவில்லை. சனாதன தர்மத்தை வேரோடு பிடுங்குவது மனிதநேயத்தையும் மனித சமத்துவத்தையும் நிலைநிறுத்துவதாகும். நான் பேசும் ஒவ்வொரு வார்த்தையிலும் உறுதியாக நிற்கிறேன். ஒடுக்கப்பட்ட மற்றும் விளிம்புநிலை மக்களின் சார்பாக நான் பேசினேன்" என்றார்.