அம்பேத்கர் ஜெயந்தி 2023: இந்திய அரசியல் சாசனத்தின் தந்தையான அண்ணலின் பொன்மொழிகள்
அம்பேத்கரின் 133வது பிறந்தநாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. டாக்டர் பி ஆர் அம்பேத்கரின் நினைவு தினம் நாடு முழுவதும் மகாபரிநிர்வாண் என அனுசரிக்கப்படுகிறது.

அம்பேத்கரின் 133வது பிறந்தநாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. டாக்டர் பி ஆர் அம்பேத்கரின் நினைவு தினம் நாடு முழுவதும் மகாபரிநிர்வாண் என அனுசரிக்கப்படுகிறது.
அம்பேத்கரின் வாழ்க்கைப் பயணம்
பாபா சாஹேப் அம்பேத்கர், 1891 ஆம் ஆண்டு ஏப்ரல் 14 ஆம் தேதி பிறந்தார். பெற்றோருக்கு இவர் 14 ஆவது மற்றும் கடைசி குழந்தையாவார். சுபேதார் ராம்ஜி மலோஜி சக்பாலின் மகனாவார். அம்பேத்கரின் தந்தை பிரிட்டிஷ் ராணுவத்தில் சுபேதாரராகப் பணிபுரிந்தார்.
பாபா சாஹேபின் தந்தை, துறவி கபீரை பின்பற்றுபவராகவும் நன்கு படித்தவராகவும் திகழ்ந்தார். அம்பேத்கரின் தந்தை பணியிலிருந்து ஓய்வு பெற்ற போது அவருக்கு இரண்டு வயதாகியிருந்தது. ஆறு வயதாக இருந்த போது அவரது தாயார் காலமானார். அவர் தனது தொடக்கக் கல்வியை பம்பாயில் பயின்றார். இந்தியாவில் தீண்டாமை என்பதை தமது பள்ளி நாட்களிலிருந்தே அவர் கடும் அதிர்ச்சியுடன் உணரத் தொடங்கினார்.
டாக்டர் அம்பேத்கர் தனது பள்ளிக் கல்வியை சத்தாராவில் பயின்றார். துரதிருஷ்டவசமாக தமது தாயாரை இழந்ததால், அத்தையின் பராமரிப்பில் அவர் வாழ்ந்தார். பின்னர் அவர்கள் பம்பாய் இடம் பெயர்ந்தனர். பள்ளிக் காலம் முழுவதும் தீண்டாமைக் கொடுமையால் அவர் அவதியுற்றார். பள்ளி இறுதி வகுப்பு (மெட்ரிகுலேஷன்) முடித்த பின்னர் 1907 ஆம் ஆண்டு அவருக்கு திருமணம் நடைபெற்றது.
அம்பேத்கர் தமது பட்டப்படிப்பை பம்பாய் எல்ஃபின்ஸ்டன் கல்லூரியில் பயின்றார். இந்தப் படிப்பிற்காக அவர் பரோடாவின் மன்னர் சாயாஜி ராவ் கெய்க்வாட்டின் உதவித்தொகையை பெற்றார். பட்டப்படிப்பு முடித்த பின்னர் பரோடா சமஸ்தானத்தில் பணியாற்ற வேண்டும் என்ற உடன்படிக்கையின் அடிப்படையில் அவருக்கு உதவித்தொகை வழங்கப்பட்டது. பரோடாவில் பணியாற்றிய போது அவரது தந்தையை இழந்தார். 1913 ஆம் ஆண்டில் மேற்படிப்புக்காக அமெரிக்கா செல்ல டாக்டர் அம்பேத்கர் தேர்வு செய்யப்பட்டார். இது அவரது கல்வியில் திருப்புமுனையாக அமைந்தது.
இந்தியாவின் அரசியல் சட்ட வரைவில் அவரது பணிக்கு அங்கீகாரம் அளிக்கும் விதமாக 1952-ல் ஒலிம்பிய பல்கலைக்கழகம் அவருக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியது. 1955-ல் மொழிவழி மாநிலங்கள் குறித்த எண்ணங்கள் என்ற நமது புத்தகத்தை வெளியிட்டார்.
953 ஜனவரி 12 அன்று உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் இருந்து டாக்டர் பி ஆர் அம்பேத்கர் டாக்டர் பட்டம் பெற்றார். அதேசமயம், “நான் இந்துவாக இறக்கமாட்டேன்” என்று 1935-ல் யேலாவில் அறிவித்ததை 21 ஆண்டுகளுக்கு பின், உண்மை என நிரூபித்தார். 1956 அக்டோபர் 15-ம் தேதி அன்று நாக்பூரில் நடைபெற்ற வரலாற்று சிறப்புமிக்க விழாவில் அவர் புத்த மதத்தை தழுவினார். 1956 டிசம்பர் 6 அன்று அவர் உயிரிழந்தார்.
தலைவர்கள் மரியாதை:
பாரத ரத்னா பாபாசாகேப் டாக்டர் பி.ஆர். அம்பேத்கரின் 133வது பிறந்தநாளில் அவருக்கு மரியாதை செலுத்துவதில் குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு தேசத்தை வழிநடத்தினார். நாடாளுமன்ற வளாகத்தில் சன்சத் பவன் புல்வெளியில் நிறுவப்பட்டுள்ள பாபாசாகேப் சிலைக்கு இன்று காலை குடியரசுத்தலைவர் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர், பிரதமர் நரேந்திர மோடி, மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா ஆகியோரும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிதாமகர் டாக்டர் அம்பேத்கருக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார் மற்றும் மத்திய அமைச்சர்கள், தலைவர்கள், பிரமுகர்கள் மரியாதை செலுத்தினர்.
பிரதமர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், "சமூகத்தில் ஒடுக்கப்பட்ட மற்றும் சுரண்டப்பட்ட மக்களின் அதிகாரத்திற்காக தமது வாழ்க்கையை அர்ப்பணித்த மேதகு அண்ணல் பாபாசாகேப் அவர்களுக்கு அவரது பிறந்தநாளில் மரியாதை . ஜெய் பீம்!" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நாளில் அம்பேத்கரின் சில பொன்மொழிகளை அறிவோம்:
1. ஒரு சமூகத்தின் முன்னேற்றத்தை பெண்களின் முன்னேற்றத்தின் அடிப்படையிலேயே நான் மதிப்பிடுவேன்.
2. நீ என்னை உன் அடிமை என்று நினைக்கும் போது.. உன்னை அழிக்கும் ஆயுதமாக நான் மாறிவிடுவது என் கடமை.
3. சமத்துவம், சுதந்திரம், சகோதரத்துவத்தை போதிக்கும் மதமே எனக்குப் பிரியமானது
4. கற்றி, ஒன்றுசேர், புரட்சி செய்
5. மனதை பண்படுத்துவதே மனிதராய் வாழ்வதின் உச்சபட்ச இலக்கு
6. அறிவு நன்னடத்தை சுயமரியாதை இவையே நான் வணங்கும் தெய்வங்கள் இவற்றை தவிர வேறு தெய்வங்கள் எனக்கு இல்லை.
7. மகாத்மாக்கள் வந்தார்கள் மகாத்மாக்கள் மறைந்தார்கள் ஆனால் தீண்டாமை இன்னும் அப்படியே தான் இருக்கிறது.
8. மனதின் சுதந்திரமே உண்மையான சுதந்திரம்.
9. வாழ்க்கை நீண்டதாக இருப்பதைவிட உன்னதமானதாக இருக்க வேண்டும்
10.இந்த சமூகம் உங்களுக்கு சுதந்திரமான உணர்வைத் தராத வரை.. சட்டம் எத்தகைய விடுதலையை உங்களுக்கு அளித்தாலும் அதனால் பயன் இல்லை.
11. சட்டமும் ஒழுங்கும் தான் அரசியலெனும் உடலுக்கு மருந்து. உடல் நோய்வாய்ப்பட்டால் மருந்தைக் கொடுக்க வேண்டும்.
12. நான் என் தேசத்தை நினைத்து பெருமிதம் கொள்கிறேன். என் நாட்டின் அரசியல் சாசனத்தில் ஜனநாயகம், மதச்சார்பின்மை. பொதுநலம் இருக்கின்றது.
13. ஒரு மதம் விலங்குகளை தொடுவதை புனிதமாகவும் சக மனிதர்களை தொடுவதை தீட்டாகவும் கருத்துமாயின் அது மதம் அல்ல. அது கேலிக்கூத்து.!
14. ஒரு மனிதனின் சிறந்த அடையாளம் சுயமரியாதை. இதை இழந்து வாழ்வது தான் பெரிய அவமானம்.
15. கடவுளுக்கு கொடுக்கும் காணிக்கையை விட ஏழைகளுக்கு கொடுக்கும் கல்வி மேலானது.






















