பஞ்சாப் தேர்தல்: பாஜக வியூகம்... பேரத்தை தொடங்கிய அமரீந்தர்- ஆட்டம் காணுமா காங்கிரஸ்?
பஞ்சாப் தேர்தல் நெருங்குவதையொட்டி அம்மாநில முன்னாள் முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங் டெல்லி சென்றுள்ளார். அங்கு பாஜக தலைவர்களை சந்தித்து சீட் பகிர்வு குறித்து விவாதிக்க இருக்கிறார்.
பஞ்சாப் தேர்தல் நெருங்குவதையொட்டி அம்மாநில முன்னாள் முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங் டெல்லி சென்றுள்ளார். அங்கு பாஜக தலைவர்களை சந்தித்து சீட் பகிர்வு குறித்து விவாதிக்க இருக்கிறார்.
பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் முதலமைச்சராக இருந்தவர் கேப்டன் அமரீந்தர் சிங். அங்கு அவருக்கும் காங்கிரஸ் கமிட்டி தலைவர் நவ்ஜோத் சிங் சித்துவுக்கும் இடையே பல மாதங்களாக பனிப்போர் நீடித்து வந்தது. இதனால் அமரீந்தர் சிங்கை முதல்வர் பதவியிலிருந்து எப்படியாவது இறக்க வேண்டும் என நவ்ஜோத் சிங் சித்து திட்டமிட்டு வந்தார். அதன்படி சுமார் 60க்கும் மேற்பட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள், அமரீந்தர் சிங்கை முதல்வர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என சோனியா காந்திக்கு கடிதம் எழுதினர்.
அதன்படி அமரீந்தர் சிங் முதல்வர் பதவியில் இருந்து நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக சரண்ஜித் சிங் முதலமைச்சராக நியமனம் செய்யப்பட்டார். காங்கிரஸ் தலைமையில் இந்த நடவடிக்கையால் கோபமடைந்த அமரீந்தர் சிங், காங்கிரஸ் தலைமை தன்னை அவமானப்படுத்திவிட்டதாகவும் தனது உழைப்பைப் புறம் தள்ளிவிட்டதாகவும் அதிருப்தியை வெளிப்படுத்தினார்.
அதற்கு முன்னதாக உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அமரீந்தர் சிங் சந்தித்ததால் பஞ்சாப் காங்கிரஸில் பெரும் குழப்பம் நிலவியது. இதையடுத்து அமரீந்தர் சிங் குறித்து காங்கிரஸுக்கு கலக்கம் வந்து அவரை பதவியில் இருந்து நீக்கியதாக கூறப்படுகிறது. அதையடுத்து அவர் காங்கிரஸ் கட்சியில் விலகினார். சோனியா காந்திக்கு 7 பக்க கடிதம் எழுதியதோடு, ராகுல்காந்தியையும் பிரியங்கா காந்தியையும் கடுமையாக விமர்சித்திருந்தார்.
இதனிடையே பஞ்சாப் மாநிலத்தில் தலித் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரைக் காங்கிரஸ் முதல்வராக நியமித்துள்ளது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. ஏனென்றால் அங்குள்ள மக்கள்தொகையில் சுமார் 33% பேர் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். அடுத்த ஆண்டு பஞ்சாப்பில் தேர்தல் வருவதே இத்தகைய அதிரடி மாற்றங்களுக்கு காரணமாக இருந்தது.
இதையடுத்து பாஜகவில் அமரீந்தர் சிங் இணைவார் என கூறப்பட்டு வந்த நிலையில் 'பஞ்சாப் லோக் காங்கிரஸ்' என்ற புதிய கட்சியை தொடங்கினார் அமரீந்தர் சிங். அதோடு பாஜகவுடன் கூட்டணி என்ற அறிவிப்பையும் வெளியிட்டு காங்கிரஸ் கட்சிக்கு ஷாக் கொடுத்தார். இதை காங்கிரஸ் கட்சி கடுமையாக விமர்சித்திருந்தது.
தற்போது அமரீந்தர் சிங் 2022 பஞ்சாப் தேர்தலுக்கு தேவையான ஆயத்த பணிகளை மேற்கொண்டு வருகிறார். அதன்படி கடந்த டிசம்பர் 7 ஆம் தேதி அமரீந்தர் சிங், பஞ்சாப் சட்டசபை தேர்தல் பாஜக பொறுப்பாளரும், மத்திய ஜல் சக்தி துறை அமைச்சருமான கஜேந்திர ஷெகாவத்தை சந்தித்து பேசினார்.
அதைத்தொடர்ந்து கடந்த டிசம்பர் 14 ஆம் தேதி பேசிய கஜேந்திர ஷெகாவத் “சிங்கின் கட்சியான பஞ்சாப் லோக் காங்கிரஸும், பாஜகவும் தேர்தலுக்காக கைகோர்க்க வாய்ப்புள்ளது. இரு தரப்பினரும் ஒரே எண்ணம் மற்றும் பல விஷயங்களில் ஒரே மாதிரியான கருத்துக்களைக் கொண்டுள்ளோம்” எனத் தெரிவித்தார்.
ஷேகாவத்துக்கு முன் டிசம்பர் 4 ஆம் தேதி பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக அமரீந்தர் சிங் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகக் கூறினார்.
2022 ஆம் ஆண்டு பஞ்சாபில் 117 சட்டமன்ற இடங்களுக்கு தேர்தல் நடக்க உள்ளது. 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் 77 இடங்களை வென்று அறுதிப் பெரும்பான்மையை வென்றது. மேலும் பத்தாண்டுகளுக்குப் பிறகு சிரோமணி அகாலி தளம் - பாஜக அரசாங்கத்தை அகற்றியது. மறுபுறம், ஆம் ஆத்மி கட்சி பஞ்சாபில் மொத்த இடங்களில் 20 இடங்களில் வெற்றி பெற்று இரண்டாவது பெரிய கட்சியாக உருவெடுத்தது. இதனிடையே வரும் தேர்தலில் சிரோமணி அகாலி தளம் மாயாவதி கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இதனால் பாஜக அமரீந்தருடன் சேர்ந்து இழந்த அரசை மீட்குமா? காங்கிரஸ் கிடைத்த இடத்தை தக்கவைக்குமா? சிரோமணி அகாலி தளம் மீண்டு எழுமா? என்ற பல்வேறு கேள்விகளுக்கும் தேர்தலில் முடிவு தெரியும்.