Adeno Virus : குழந்தைகளை அதிகம் தாக்கும் அடினோ வைரஸ்; அறிகுறிகள், பாதிப்புகள் என்ன? தற்காப்பது எப்படி?
Adeno Virus : கொல்கத்தாவில் பரவி வரும் அடினோ வைரஸ் அறிகுறிகள், பாதிப்புகள் பற்றிய முழு விவரத்தை இங்கே காணலாம்.
கொல்கத்தாவில் உள்ள சுகாதார அதிகாரிகள் கவனமுடன் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்கள். என்ன காரணம்? கடந்த மாதத்தில் (ஜனவரி) இருந்து குழந்தைகள் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் காயச்சல் உள்ளிட்ட சுவாச பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். சிலர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கொல்கத்தாவில் அடினோ வைரஸ் (Adeno viruses) பரவி வருகிறது. இதனால் கண், சிறுநீரக பாதை, சுவாச பாதைகள் உள்ளிட்டவற்றை கடுமையாக பாதிக்கப்படுகிறது. குறிப்பாக, இது குழந்தைகளிடம் மிகவும் எளிதாக பரவக்கூடியது என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
கொல்கத்தாவில் 500-க்கும் மேற்பட்டவர்களிடன் எடுக்கப்பட்ட பரிசோதனை முடிவில் அதில் ’Para influenza’ வைரஸ் இருப்பதாகவும் விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர். மிகவும் கவனமுடன் இருக்க வேண்டும் என்று கேட்டுகொள்ளப்பட்டுள்ளது.
அடினோ வைரஸ் :
அடினோ வைரஸ் என்பது சுவாச பிரச்சனை, லேசான சளித்தொல்லை, உடல் சோர்வு உள்ளிட்டவைகளை ஏற்படுத்தும். இது இன்ஃபுளுயன்சா, பாரா இன்ஃபுளூயன்சா, ரினோவைரஸ், நிமோனிகோசி ஆகிய வைரஸ் தொற்றால் ஏற்படுவது.
அறிகுறிகள் என்னென்ன?
- அடினோ வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டவர்களிடம் தோன்றும் பொதுவான அறிகுறிகளாக மருத்துவத்துறை கூறியிருப்பவற்றை கீழே காணலாம்.
- மூன்று நாட்களுக்கு மேலாக தொடரும் காய்ச்சல்
- இருமல் மற்றும் தொண்டை எரிச்சல்
- மூக்கிலிருந்து சளி ஒழுகுதல்
- வயிற்றுப் போக்கு, வாந்தி
- உடல் வலி
- வேகமாக மூச்சு விடுவது
- மூச்சு திணறல் (மூச்சு விடுவதில் சிரமம்)
யாரெல்லாம் பாதிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது?
இது குறிப்பிட்ட வயதினரையோ அல்லது இவர்களுக்கு மட்டும்தான் இதன் பாதிப்புகள் ஏற்படும் என்றில்லை. யாருக்கும் வேண்டுமானாலும் வரலாம். குறிப்பாக, குழந்தைகளை அதிகம் தாக்கக்கூடியது. மேலும், ஏற்கனவே வேறு ஏதாவதுநோயால் பாதிக்கப்பட்டவர்கள், சுவாச பிரச்சனைகள் இருப்பவர்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுரை கூறியுள்ளனர்.
சிகிச்சை என்ன?
- அடினோ வைரஸ் தொற்றினை தடுப்பதற்கு என்று தனி சிகிச்சை முறைகள் இல்லை.
- உடல்நிலை மிகவும் மோசமாக இல்லையென்ற நிலையில், வீட்டிலேயே மேற்கொள்ளப்பட வேண்டிய மருத்துவ வழிமுறைகள் பற்றி காணலாம்.
- காயச்சனை குறைப்பதற்கு பாராசிட்டமால் மாத்திரை எடுத்து கொள்ளலாம். ஆனால், 5 முறைகளுக்கு மேல் சாப்பிடக் கூடாது.
- நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும்.
- வயிற்றுப் போக்கு இருப்பின், நீர் சத்து மிகுந்த ஆகாரங்களை உண்ண வேண்டும். ORS (oral rehydration solution ) டிரிங்க் குடிக்கலாம்.
- உடலின் வெப்பநிலையை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். வெப்பநிலை அதிகரித்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.
- மூச்சு விடுதல் சீராக உள்ளதாக என்பதையும் கண்காணிக்க வேண்டும்.
- சிறுநீர் வெளியேற்றம் குறித்தும் கண்காணிக்க வேண்டும்.
- மேலே குறிப்பிட்டுள்ளவற்றில், வழக்கத்திற்கு மாறாக உடல் செயல்பாடுகளை உணர்ந்தால் உடனடியாக மருத்துவரிடம் செல்ல வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
எந்த நிலையில் மருத்துவரை அணுக வேண்டும்?
- மூன்று முதல் ஐந்து நாட்களுக்கு மேல் காயச்சல் நீடிப்பது..
- மூச்சு விடுவதில் சிரமம் / வேகமாக மூச்சு விடுதல்
- அறை வெப்பநிலையில், ஆக்ஸிஜன் சாச்சுரேன் 92 சதவீதத்திற்கு கீழே குறைந்தால்..
- பசியின்மை..
- எப்போதும் இல்லாத அளவுக்கு உட்கொள்ளும் உணவின் அளவு பாதியாக குறைதல்
- ஒரு நாளைக்கு சிறுநீர் கழித்தல் ஐந்து முறைக்கு குறைவாக இருத்தல்..
- இப்படியான பிரச்சனைகளை எதிர்கொண்டால் உடனடியாக மருத்துவரிடம் செல்ல வேண்டும்.
அடினோ வைரஸ் தொற்றில் இருந்து தற்காத்துகொள்ளுதல் எப்படி?
- காய்ச்சல் மற்றும் சுவாச பிரச்சனை இருந்தால் அவர்கள் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும்.
- சுவாச பிரச்சனை இருந்தால் வீட்டிலேயே முகக்கவசம் அணிந்து கொள்ளுதல் நலம்.
- அடிக்கடி கைகளை கழுவுதல் மற்றும் சானிடைசர் பயன்படுத்துவது பரிந்துரைக்கப்படுகிறது.
- உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்தால், அவர்கள் பயன்படுத்தும் மாஸ்க், டிஷ்யூ உள்ளிட்டவற்றை முறையாக அப்புறப்படுத்த வேண்டும்.
- குழந்தைகளுக்கு இருமல், மற்றும் சளி இருப்பின் பள்ளிகளுக்கு அனுப்பக் கூடாது.
- கூட்ட நெரிசல் உள்ள பகுதிகளுக்கு செல்வதை தவிர்ப்பது நல்லது.