Actress Namitha: மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் புகார்.. குற்றம்சாட்டப்பட்டவருக்கு வாய்ப்பு தரணும்.. நமீதா பேச்சு
பாலியல் குற்றச்சாட்டு விவகாரத்தில் பிரிஜ் பூஷனுக்கு விளக்கம் அளிக்க வாய்ப்பு தர வேண்டும் நடிகை நமீதா தெரிவித்துள்ளார்.
செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் மல்யுத்த வீராங்கனைகள் போராட்டம் குறித்த கேள்விக்கு பதில் அளித்த நடிகை நமீதா பேசியதாவது: ”குற்றம்சாட்டப்பட்ட நபர் உண்மையை கண்டறியும் சோதனை உள்ளிட்டவற்றிற்கு தயாராக இருப்பதாகவும், ஆனால் குற்றம் சாட்டியவர்கள் எந்த பரிசோதனைக்கும் தயாராக இல்லை. நேரடியாக அவரை சிறையில் அடையுங்கள் என்று சொல்கின்றார்கள். அது சரி அல்ல.குற்றம்சாட்டப்பட்டவர் தான் குற்றமற்றவர் என்பதை நிரூபிக்க வாய்ப்பு தர வேண்டும்”. இவ்வாறு நமீதா தனது பேட்டியில் தெரிவித்தார்.
இந்திய மல்யுத்த சம்மேளன தலைவரும், பாஜக எம்.பி.யுமான பிரிஜ் பூஷண் சரண் சிங் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகவும், எனவே அவரை கைது செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற மல்யுத்த வீராங்கனைகள் சாக்சி மாலிக், வினேஷ்போகத், மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா ஆகியோர் கடந்த ஏப்ரல் 23-ஆம் தேதி முதல் போாரட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடந்த 28-ஆம் தேதி, புதிய நாடாளுமன்றம் நோக்கி பேரணி செல்ல முயன்றபோது, போலீசார் இவர்களை கைது செய்து பின்னர் விடுவித்தனர். டெல்லியில் போராட்டத்துக்காக போடப்பட்ட கூடாரங்கள் அகற்றப்பட்டன.
இதையடுத்து தாங்கள் பெற்ற பதக்கங்களை கடந்த மே 30-ஆம் தேதி மாலை 6 மணிக்கு கங்கையில் வீசப்போவதாக சாக்சி மாலிக், வினேஷ் போகத், பஜ்ரங் புனியா ஆகியோர் ட்விட்டரில் தெரிவித்திருந்தனர். இதன்படி மல்யுத்த வீராங்கனைகள், தாங்கள் பெற்ற பதக்கங்களை கங்கையில் ஹரித்துவார் சென்றனர். கண்ணீருடன் கங்கைக் கரைக்கு சென்ற வீரர்களை உள்ளூர் மக்களும், விவசாய சங்கத்தினரும் சமாதானப்படுத்தினர். கடின உழைப்பால் கிடைத்த பதக்கங்களை பதக்கங்களை கங்கையில் வீச வேண்டாம் என அவர்கள் கேட்டுக் கொண்டனர். இதையடுத்து பதக்கங்களை கங்கையில் வீசும் முடிவை மல்யுத்த வீராங்கனைகள் கைவிட்டனர். மல்யுத்த சம்மேளனத் தலைவர் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்க அவர்கள் 5 நாள் கெடு விதித்தனர். மல்யுத்த வீரர் வீராங்கனைகளுக்கு ஆதராவாக அரசியல் மற்றும் சினிமா பிரபலங்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகை நமீதா குற்றம்சாட்டப்பட்ட இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங்கிற்கு தான் குற்றமற்றவர் என்பதை நிரூபிக்க வாய்ப்பு தர வேண்டும் என்று தனது பேட்டியில் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க