ABP CVoter Opinion Poll: I.N.D.I.A கூட்டணிக்கு அதிர்ச்சி.. மக்களிடம் எடுபட்டதா மோடி மேஜிக்.. சர்வே சொல்வது என்ன?
ABP CVoter survey: நாடு முழுவதும் 155 இடங்களில் இந்தியா கூட்டணி வெல்லும் என கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில், காங்கிரஸ் மட்டும் 67 இடங்களை கைப்பற்றும் என சொல்லப்பட்டுள்ளது.
நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கு இன்னும் 2 நாள்களே உள்ளன. கடந்த முறை போன்று இந்த முறையும் மொத்தம் 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடக்க உள்ளது. முதற்கட்டமாக, தமிழ்நாடு உள்பட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 தொகுதிகளுக்கு வரும் 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
I.N.D.I.A கூட்டணிக்கு அதிர்ச்சி தந்த கருத்துக்கணிப்பு:
இந்த நிலையில், ஏபிபி நியூஸ் மற்றும் சி வோட்டர் இணைந்து நடத்திய கருத்துக்கணிப்பு முடிவுகள் கடந்த 14ஆம் தேதியில் இருந்து வெளியிடப்பட்டு வருகிறது. தேர்தலுக்கு முந்தைய கடைசி கருத்துக்கணிப்பு முடிவுகள் என்பதால் இது முக்கியத்துவம் பெறுகிறது.
தென்னிந்தியாவில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடக, ஆந்திர பிரதேசம், தெலங்கானா ஆகிய மாநிலங்களுக்கு நேற்று முன்தினமும் உத்தரப் பிரதேசம், பீகார், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் உள்ளிட்ட வட இந்திய மாநிலங்களுக்கு இன்றும் கருத்துக்கணிப்பு வெளியிடப்பட்டது.
பிராந்திய வாரியாக கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியிடப்பட்ட நிலையில், நாடு தழுவிய கருத்துக்கணிப்பு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, தேசிய அளவில் இந்தியா கூட்டணி 39.8 சதவிகித வாக்குகளை பெறும் என கணிக்கப்பட்டுள்ளது. 46.6 சதவிகித வாக்குகளை பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி பெறும் என சொல்லப்பட்டுள்ளது.
தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தும் பாஜக:
தொகுதிகள் வாரியாக பார்த்தால், நாடு முழுவதும் 155 இடங்களில் இந்தியா கூட்டணி வெல்லும் என கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில், காங்கிரஸ் மட்டும் 67 இடங்களை கைப்பற்றும் என சொல்லப்பட்டுள்ளது.
பாஜக தலைமையிலான கூட்டணியை பொறுத்தவரையில், மொத்தம் 373 இடங்களில் வெற்றி பெறும் என கூறப்பட்டுள்ளது. அதில் பாஜக மட்டும் 324 இடங்களை பெறும் என கணிக்கப்பட்டுள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணி, இந்தியா கூட்டணியில் இடம்பெறாத கட்சிகள் 13.7 சதவிகித வாக்குகளை பெற்று 15 தொகுதிகளில் வெற்றி பெறும் என கூறப்பட்டுள்ளது.
கடந்த 2019ஆம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் 45.1 சதவிகித வாக்குகளை பெற்ற பாஜக கூட்டணி 353 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது. அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த மாநிலங்களான உத்தர பிரதேசம், பீகார் ஆகியவற்றில் பாஜக கூட்டணி அபார வெற்றி பெறும் என கணிக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிராவில் கடும் போட்டி நிலவும் என்றும் தமிழ்நாட்டில் மாபெரும் வெற்றியை இந்தியா கூட்டணி பதிவு செய்யும் என்றும் கூறப்பட்டுள்ளது. அதேபோல, கேரளா, தெலங்கானா, பஞ்சாபில் இந்தியா கூட்டணி சிறப்பான வெற்றியை பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மற்றபடி, கர்நாடகா, மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான், குஜராத், ஹரியானா, இமாச்சல பிரதேசம், அஸ்ஸாம் ஆகிய மாநிலங்களில் பாஜகவின் ஆதிக்கமே தொடர்வதாக கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளது. மேற்குவங்கத்தில் 20 தொகுதிகளை பாஜகவும் 20 தொகுதிகளை திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும் 2 தொகுதிகளை காங்கிரஸ் பெறும் என கணிக்கப்பட்டுள்ளது.