VIRAL PHOTO | பின்னிப் பிணைந்திருக்கும் மூன்று நாகப் பாம்புகள்.. இணையத்தில் பரவும் வைரல் படம்!
ஐ.எஃப்.எஸ் அதிகாரி சுஷாந்தா நந்தா தன் ட்விட்டரில் ஹரிசல் வனப் பகுதியில் மூன்று நாகப் பாம்புகள் அமர்ந்திருக்கும் படத்தைப் பதிவிட்டுள்ளார். இது தற்போது வைரலாகி வருகிறது.
பாம்புகள் அவற்றின் கம்பீரத்திற்காகவும், சில சமயங்களில் தொல்லைக்காகவும் முக்கியமாகக் கருதப்படுகின்றன. இந்தியத் துணைக் கண்டத்தின் பரந்துபட்ட காடுகளில் பல்வேறு வகையான கானுயிர்களுள் பாம்பு வகைகளும் அடங்கியுள்ளன. டிஜிட்டல் உலகில் நாம் வாழ்ந்து வரும் தற்காலச் சூழலில் விலங்குகள், பறவைகள் முதலான கானுயிர்களின் படங்கள், வீடியோக்கள் ஆகியவற்றிற்கு மவுசு அதிகமாக இருக்கிறது.
மகாராஷ்ட்ராவில் மூன்று நாகப் பாம்புகளின் படங்கள் நெட்டிசன்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளன. இந்திய வனப் பணி அதிகாரி சுஷாந்தா நந்தா தன் ட்விட்டர் பக்கத்தில் மகாராஷ்ட்ராவின் அமராவதி மாவட்டத்தில் உள்ள ஹரிசல் வனப் பகுதியில் உள்ள மரம் ஒன்றில் மூன்று நாகப் பாம்புகள் சூழ்ந்து அமர்ந்திருக்கும் படம் ஒன்றைப் பதிவிட்டுள்ளார். இந்தப் படம் தற்போது வைரலாகி வருகிறது.
சில வட இந்திய ஊடகங்கல் வெளியிட்டுள்ள தகவல்களின் படி, இந்தப் படங்கள் ஃபேஸ்புக் தளத்தின் `இந்தியன் வைல்ட்லைஃப்’ என்ற பக்கத்தில் முதலில் பதிவிடப்பட்டிருந்தன. இந்தப் பாம்புகள் ஏதோ ஒரு இடத்தில் காப்பாற்றப்பட்டு, அந்த வனப் பகுதியில் சுதந்திரமாக விடப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்தப் படங்களை முதலில் ராஜேந்திர செமால்கர் என்பவர் படம் எடுத்து இந்தப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவை வைரலாகி இந்திய வனப் பணி அதிகாரி வரை சென்று சேர்ந்துள்ளன.
இந்தப் படங்களுள் ஒன்றைப் பகிர்ந்த இந்திய வனப் பணி அதிகாரி சுஷாந்தா நந்தா தன் ட்விட்டர் பக்கத்தில், `வணக்கங்கள்.. உங்களிடம் மூன்று நாகப் பாம்புகள் ஒரே நேரத்தில் வாழ்த்துகள் பகிர்கின்றன’ என்று குறிப்பிட்டிருந்தார்.
Blessings...
— Susanta Nanda IFS (@susantananda3) November 16, 2021
When three cobras bless you at the same time.
🎬:Rajendra Semalkar. pic.twitter.com/EZCQTumTwT
அவர் பதிவிட்ட சில மணி நேரங்களில் இந்த ட்வீட் வைரலாகியதோடு, தற்போது வரை சுமார் 3.6 ஆயிரம் லைக்களையும், 352 ரீட்வீட்களையும் பெற்றுள்ளது.
மூன்று நாகப் பாம்புகள் ஒன்றாகப் பின்னிப் பிணைந்திருப்பதைப் பார்த்து ஆச்சரியம் கொண்ட நெட்டிசன்கள் பலரும் தங்கள் கமெண்ட்களைப் பதிவு செய்து வருகின்றனர். `வாவ்! இவை பார்ப்பதற்கு அழகாகவும், அதே நேரம் பயம் அளிப்பதாகவும் இருப்பதோடு, மொத்தமாக தெய்வீகத்தோடு இருக்கிறது’ என்று ஒரு நெட்டிசன் பதிவிட்டிருக்க, மற்றொருவரோ, `இது படம் எடுப்பதற்காக இவ்வாறு வைக்கப்பட்டிருப்பது போன்று இருக்கிறதே’ என்று தனது சந்தேகத்தையும் கிளப்பியுள்ளார். மேலும் பலரும் இந்தப் படங்கள் குறித்த தங்கள் ரியாக்ஷன்களைத் தொடர்ந்து தங்கள் சமூக வலைத்தளப் பக்கங்களில் பதிவிட்டு வருகின்றனர்.