Indian Armed Forces: இந்தியாவை நீர், நிலம், ஆகாயத்தில் அரணாக காக்கும் பாதுகாப்பு படைகள் பற்றி தெரிந்துகொள்வோம்
75வது சுதந்திர தினத்தையொட்டி, நாம் சுதந்திரமாக இருப்பதற்கு காரணமான பாதுகாப்பு படைகள் குறித்து தெரிந்து கொள்வோம்
இந்திய ராணுவப் படை மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. அவை தரைப்படை, விமானப்படை மற்றும் கடற்படை. இப்படைகளுக்கு உதவுவதற்காக துணை ராணுவப் படைகள் மற்றும் இந்திய கடலோர காவல் படைகள் உள்ளிட்டவைகள் செயல்பட்டு வருகின்றன. இந்திய ராணுவத்திற்கு கட்டளை இடுபவராக குடியரசுத் தலைவர் செயல்படுகிறார். இந்திய ராணுவம் மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது. இந்திய ராணுவத்திற்கு தலைவராக முப்படைகளின் தலைமை தளபதி செயல்படுகிறார். பிபின் ராவத் மறைந்த நிலையில், இப்பகுதி காலியாகவுள்ளது. இந்திய ராணுவம் உலகின் தலை சிறந்த ராணுவங்களில் ஒன்றாக உள்ளது.
தரைப்படை:
இந்திய தரைப்படை நாட்டின் எல்லைப் பகுதிகளை பாதுகாப்பது, உள்நாட்டு பாதுகாப்பில் ஈடுவது, பயங்கரவாதத்தை எதிர்கொள்வது, உள்ளிட்டவைகளை குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருகிறது. மேலும் இயற்கை சீற்றங்களின் போது மக்களை பாதுகாப்பதற்காகவும் களத்தில் இறங்குகிறது. வங்காள தேசத்தை பாகிஸ்தானிலிருந்து பிரித்து புதிய நாடாக உருவாக்கியதில், தரைப்படைக்கும் பங்கு உண்டு.
கோவாவில் ஆட்சி செய்த போர்ச்சுக்கீசியரை விரட்டியடித்து கைப்பற்றியதிலும் மிகப் பெரிய பங்கு உள்ளது. இந்திய-சீன போர், இந்திய-பாகிஸ்தான் போர் உள்ளிட்ட போர்கள் ராணுவத்தின் பங்கு குறிப்பிடத்தக்கவையாகும். ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 15 ஆம் நாள் தரைப்படை தினம் கொண்டாடப்படுகிறது. தரைப்படையின் உயர்ந்த பதவியாக ஜெனரல் கருதப்படுகிறது. தற்போதைய தரைப்படையின் ஜெனராக மனோஜ் பாண்டே செயல்படுகிறார்.
இந்த வருடத்திற்கான கருப்பொருள்: "எதிர்காலத்திற்கு ஏற்ற முன்னேற்றம்"
விமானப்படை:
இந்திய விமானப்படை, இந்திய வான் எல்லையை பாதுகாப்பதை முதல் கடமையாக கொண்டு செயல்படுகிறது. 1932 ஆம் ஆண்டு அக்டோபர் 8 ஆம் நாள் இந்திய விமானப்படை உருவாக்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 8 ஆம் நாள் இந்திய விமானப்படை தினம் கொண்டாடப்படுகிறது. இமய மலை தொடர் போன்ற உயரமான பகுதிகளில் தளவாடங்களை எடுத்துச் செல்வதிலும், உணவுப் பொருட்களை கொண்டு செல்வதிலும் விமானப்படையானது, உயிரையும் பொருட்படுத்தாது, கடுமையான இயற்கை விளைவுகளை எதிர்கொண்டு செயல்படுகிறது.
மேலும் நாட்டில் செல்ல முடியாத பகுதிகளுக்கு இந்திய விமானப்படை சென்று தனது வலிமையை நிலை நிறுத்துகிறது. ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் 8 ஆம் தேதி விமானப்படை தினம் கொண்டாடப்படுகிறது. இந்திய விமானப்படையின் உயர்ந்த பதவியாக ஏர் சீஃப் மார்ஷல் கருதப்படுகிறது. தற்போதைய ஏர் சீஃப் மார்ஷலாக வி.ஆர்.சௌத்ரி செயல்பட்டு வருகிறார்.
”மகிமையுடன் வானத்தை தொடலாம்” என்ற மேற்கோளுடன் செயல்பட்டு வருகிறது.
கடற்படை:
இந்தியாவின் கடல் எல்லைகளை பாதுகாப்பதை நோக்கமாக கொண்டு செயல்படுகிறது. அதுமட்டுமன்றி இந்திய துறைமுகங்களை பாதுகாத்தல் ,சர்வதேச உறவுகளை மேம்படுத்துதல் மற்றும் அண்டை நாடுகளுக்கு நிவாரணம் வழங்குதல் உள்ளிட்ட பணிகளையும் மேற்கொள்கிறது.
1971-பாகிஸ்தானுடனான போரில், பாகிஸ்தானின் கராச்சி துறைமுகத்தில், இந்திய கடற்படை குண்டு வீசி தாக்கி அழித்தது. இந்த நிகழ்வானது, போரில் இந்தியா வெற்றி பெறுவதற்கு பெரிதும் உதவியது. இந்த வெற்றியை குறிக்கும் வகையில் ஆண்டுதோறும் டிசம்பர் 4ஆம் தேதி கடற்படை தினம் கொண்டாடப்படுகிறது. இந்திய கடற்படையில் உயர்ந்த பதவியாக அட்மிரல் கருதப்படுகிறது. இந்திய கடற்படையின் அட்மிரலாக ஆர். ஹரிக்குமார் செயல்படுகிறார்.
2021 ஆம் ஆண்டுக்கான கருப்பொருள்: பொன் வெற்றி வருடம்( 1971 போர் வெற்றி குறிக்கும் வகையில் )
கடலோர காவல்படை:
இந்தியாவிலுள்ள கடல் வளங்களை பாதுகாக்கும் பொருட்டு, 1978 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இது துணை ராணுவப்படைக்கு ஒத்ததாக கருதப்படுகிறது. ஆனால் பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது. இது கடல் வழி குடியேற்றம், கடல் வழியாக போதைப் பொருட்களை தடுப்பது உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வருகிறது. கடலோர காவல் படை 4 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. கிழக்கு மண்டலத்தின் தலைமையிடம் சென்னையிலும், மேற்கு மண்டலத்தின் தலைமையிடம் மும்பையிலும். வட மேற்கு மண்டலத்தின் தலைமையிடம் காந்தி நகரிலும், அந்தமான் நிகோபர் மண்டலத்தின் தலைமையிடம் போர்ட் பிளேரிலும் செயல்பட்டு வருகிறது.
இவை அவ்வப்போது ரோந்து படகுகள் மூலம் கடலை வலம் வந்து பாதுகாப்பில் ஈடுபட்டு கொண்டிருக்கும். ”நாங்கள் பாதுகாக்கிறோம்” என்ற கருப்பொருளுடன் செயல்பட்டு வருகிறது.
நாட்டு மக்கள் சுதந்திரமாக இருக்க வேண்டும் என்பதற்காக, உயிரையும் பொருட்படுத்தாது நாட்டை பாதுகாக்கும் பாதுகாப்பு படைகளுக்கு சல்யூட்...