Independence Day 2022: 750 சதுர அடியில் பிரம்மாண்டமாக... ஓராண்டு பயணித்து ஸ்ரீநகரில் காட்சிப்படுத்தப்பட்ட தேசியக்கொடி!
அதன் ஒரு பகுதியாக 750 சதுர அடியில் தயாரிக்கப்பட்ட பிரமாண்ட தேசியக் கொடி சிக்கிம் மாநிலத்தில் இருந்து அன்டார்டிக்கா கண்டம் வரை சென்று வந்தது.
நாடு முழுவதும் இன்று சுதந்திர தின விழா கோலகாலமாகக் கொண்டாடப்பட்டுள்ளது. 1947ஆம் ஆண்டு இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த நிலையில், இன்றுடன் சுதந்திரம் கிடைத்து 75 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளன.
காஷ்மீரில் ஏற்றப்பட்ட பிரம்மாண்ட கொடி
இதைக் கொண்டாடும் வகையில் கடந்த ஆண்டு முதல் மத்திய அரசு பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வந்தது. ’அசாதி கா அமிர்த் மஹோத்சவ்’ என்ற பெயரில் பல்வேறு கொண்டாட்டங்கள் நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வந்தன.
அதன் ஒரு பகுதியாக 750 சதுர அடியில் தயாரிக்கப்பட்ட பிரமாண்ட தேசியக் கொடி சிக்கிம் மாநிலத்தில் இருந்து அன்டார்டிக்கா கண்டம் வரை சென்று வந்தது. அந்த தேசியக் கொடி இன்று (ஆக.15) காஷ்மீரில் ஸ்ரீநகரில் உள்ள லால் சவுக் பகுதியில் மக்கள் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட்டது.
30 ஆண்டுகளுக்கு முன்னர் பாஜக மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷி ஸ்ரீநகரில் முதன்முதலில் தேசியக் கொடியை ஏற்றினார்.
J&K | A 750-square feet national flag that has travelled from Sikkim to Antarctica was displayed at Lal Chowk in Srinagar#IndiaAt75 pic.twitter.com/J8mRNh43Mw
— ANI (@ANI) August 15, 2022
இந்நிலையில் இன்று 76ஆவது சுதந்திர தினத்தை ஒட்டி நான்கு பெண் சமூக ஆர்வலர்கள், சில செயற்பாட்டாளர்கள் இணைந்து லால் சவுக்கில் தேசியக் கொடி ஏற்றினர். அங்கு திரண்டிருந்தவர்களில் ஒருவர் தன் உடல் முழுவதும் மூவர்ணத்தால் ஆன தேசியக் கொடியை வரைந்திருந்தார்.
இந்த 750 அடி தேசியக் கொடியை ஏற்ற சுமார் ஒரு மணி நேரம் செலவிடப்பட்டுள்ளது.
பிரதமரின் 5 உறுதிமொழிகள்
முன்னதாக இன்று காலை டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசிய கொடியை ஏற்றினார். தொடர்ந்து முப்படையினரின் மரியாதையை அவர் ஏற்றுக் கொண்டார். அதனைத் தொடர்ந்து பிரதமர் மோடி ஆற்றிய உரை பின்வருமாறு:
“நம் நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவு அடைந்ததற்கு நாட்டு மக்கள் அனைவருக்கும் வாழ்த்துகள். 75 ஆண்டுகள் நிறைவை முன்னிட்டு நம் நாட்டிலுள்ள அனைத்து வீடுகளிலும் தேசியக்கோடி பறக்கவிடப்பட்டுள்ளது.
இன்றைய நாள் மிகவும் முக்கியமான நாள். இன்று புதிய பாதையில் புதிய உறுதியுடன் நாம் பயணத்தை தொடர வேண்டும். நாட்டின் சுதந்திரத்திற்காக போராடி உயிர் நீத்த மகாத்மா காந்தி, அம்பேத்கர் உள்ளிட்ட தலைவர்களுக்கு நாம் அனைவரும் நன்றிக்கடன் பட்டிருக்கிறோம்.
நாட்டிலுள்ள பெண்களின் சக்தியை பார்த்து நாம் அனைவரும் பெருமிதம் கொள்ள வேண்டும். குறிப்பாக ராணி லக்ஷ்மிபாய், வேலு நாச்சியார் போன்றவர்களின் பங்களிப்பை நினைத்து நாம் பெருமிதம் கொள்ள வேண்டும்.
ஜனநாயகத்தின் தாய் நாடாக இந்தியா சிறந்து விளங்கி வருகிறது. இந்த 75 ஆண்டுகளில் ஜனநாயகத்திற்கு எதிராக சவால்கள் எழுந்தாலும் அதை நாம் சிறப்பாக கையாண்டு ஜனநாயகத்தை போற்றி காப்பாற்றி வருகிறோம். நாட்டின் சுந்திரத்திற்காக மக்கள் அனைவரும் முக்கியப்பங்கு ஆற்றியுள்ளனர்.
குறிப்பாக பழங்குடியின மக்கள் மற்றும் அவர்களின் தலைவர்களான பிர்சா முண்டா, கோவிந்த் குரு உள்ளிட்ட பலரும் முக்கிய பங்கு ஆற்றியுள்ளனர்.
நம்முடைய நாடு சுதந்திரம் அடைந்தபோது பலரும் நம்முடைய வளர்ச்சி தொடர்பாக கேள்வியை எழுப்பினர். ஆனால் அவர்களுக்கு நம்முடைய நாடு வித்தியாசமான ஒன்று என்று தெரியாது. மேலும் இந்த மண் புனிதமான மண் என்பது அவர்களுக்குத் தெரியவில்லை.
இன்று 75ஆவது ஆண்டில் இருக்கும் நாம் அடுத்த 25 ஆண்டுகள் மிகவும் கவனத்துடன் செயல்பட்டு முன்னேற வேண்டும். சுதந்திரம் அடைந்த 100ஆவது ஆண்டுக்குள் நம்முடைய சுதந்திரப் போராட்ட தியாகிகள் நினைத்தை நாம் அடைய வேண்டும்.
அடுத்த 25 ஆண்டுகளில் நாம் 5 முக்கிய உறுதி மொழிகளை எடுக்க வேண்டும். அதாவது வளர்ந்த பாரதம், ஒற்றுமை, கடமையைச் செய்தல், பாரம்பரியத்தில் பெருமை கொள்ளுதல் உள்ளிட்டவற்றை எடுக்க வேண்டும்.
அடுத்த 25 ஆண்டுகள் நாட்டின் வளர்ச்சிக்காக இளைஞர்கள் நிச்சயம் பாடுபட வேண்டும். நாம் இந்தியாவின் வளர்ச்சியுடன் ஒட்டு மொத்த மனித குலத்தின் வளர்ச்சிக்காகவும் பாடுபட வேண்டும். அது தான் நம்முடைய பலம்” எனக் கூறியுள்ளார்.