Accident: லாரி மீது கார் மோதி பயங்கர விபத்து.. 2 வயது குழந்தை உட்பட 6 பேர் பரிதாப உயிரிழப்பு - பெரும் சோகம்
ஆந்திராவில் லாரி மீது கார் மோதிய விபத்தில் 2 வயது குழந்தை உட்பட 6 பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்
ஆந்திராவில் லாரி மீது கார் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 2 வயது குழந்தை உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.
கார் - லாரி மீது மோதல்:
ஆந்திரா மாநிலம் விஜயவாடாவில் இருந்து ராஜமுந்திரிக்கு கார் ஒன்று புறப்பட்டது. நல்லஜர்லா மண்டல் அனந்தபள்ளி என்ற இடத்தில் கார் சென்று கொண்டிருந்தது. அப்போது, எதிர்பாராத விதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலை ஓரம் நின்றிருந்த லாரி மீது பயங்கரமாக மோதியது. இதில், காரின் முன்பகுதி கடுமையாக நொறுங்கி. சேதமடைந்தது. இந்த விபத்தில் 2 வயது குழந்தை உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் நிகழ்விடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தனர்.
6 பேர் உயிரிழப்பு:
இந்த விபத்து தொடர்பாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர், லாரியின் அடியில் சிக்கிய காரை கிரேன் மூலம் மீட்டனர். உடல் நசுங்கி உயிரிழந்த 6 பேரின் உடல்கள் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இந்த விபத்து குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
முதற்கட்ட விசாரணையில் அனைவரும் ராஜமுந்திரியில் சுப நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க புறப்பட்டு சென்று கொண்டிருந்த போது விபத்து நடந்ததாகவும், அதிவேம் மற்றும் ஓட்டுநர் தூக்க கலக்கத்தில் இருந்ததே விபத்துக்கு முக்கிய காரணம் என்பதும் தெரிய வந்துள்ளது. ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
திருவண்ணாமலையில் விபத்து:
முன்னதாக அண்மையில் திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் தாலுக்கா, செ.நாச்சிபட்டு பகுதியைச் சேர்ந்தவர் ராம ஜெயம் டிராவல்ஸ் நடத்தி வருகிறார். இவரது மனைவி ரத்னா. இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளிட்ட 3 குழந்தைகள் இருந்தது. சென்னையில் உள்ள மாமனார் வீட்டில் தங்கி இருந்த மனைவி மற்றும் மகள்கள், குழந்தையை அழைத்து வர ராமஜெயம் முடிவு செய்தார். தனது உறவினருடன் காரில் சென்ற அவர் மனைவி ரத்னா, மகள்கள் ராஜலட்சுமி, தேஜாஸ்ரீ, மற்றும் 6 மாத கைக்குழந்தை ஆகியோரை அழைத்துக் கொண்டு திரும்பி வந்து கொண்டு இருந்தார்.
காஞ்சிபுரம் அருகே சென்னை- பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சித்தேரி மேடு பகுதியில் நள்ளிரவு 12 மணியளவில் வேகமாக சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரம் நின்றிருந்த லாரியின் மீது பயங்கரமாக மோதியது. இதில் காரின் முன்பகுதி முழுவதும் நொறுங்கியது. இதில் இடிபாடுகளில் சிக்கிய ராமஜெயத்தின் மனைவி ரத்னா, அவரது மகள்கள் ராஜலட்சுமி, தேஜாஸ்ரீ, மற்றும் 4 மாத கைக்குழந்தை மற்றும் ராஜேஷ், ஆகிய 5 பேரும் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்கள். காரை ஓட்டி வந்த ராம ஜெயம் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.