மும்பையில் லிவ் இன் பார்ட்னரை நண்பருடன் சேர்ந்து கொலை செய்த இளம் பெண்
மும்பையில் 27 வயது இளம் பெண் ஒருவர் மற்றும் அவரது ஆண் நண்பர் நேற்று போலீஸாரால் கைது செய்யப்பட்டனர்.
மும்பையில் 27 வயது இளம் பெண் ஒருவர் மற்றும் அவரது ஆண் நண்பர் நேற்று போலீஸாரால் கைது செய்யப்பட்டனர். டோம்பிவிலி பகுதியில் 55 வயது நபர் கொலை தொடர்பாக இருவரும் கைது செய்யப்பட்டனர். விசாரணையில் அந்த இளம் பெண்ணும் 55 வயது நபரும் லிவ் இன் பார்ட்னராக வாழ்ந்துள்ளனர். இதில் முறிவு ஏற்படவே அந்தப் பெண் தனது ஆண் நண்பருடன் இணைந்து லிவ் இன் பார்ட்னரை கொலை செய்துள்ளார்.
இது தொடர்பாக போலீஸ் தரப்பில், "சனிக்கிழமை இரவு 55 வயதான மாருதி ஹண்டேவுக்கும் அவரது லிவ் இன் பார்டனரான 27 வயது இளம் பெண் குட்டு ஷெட்டிக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது அங்கு குட்டுவின் நண்பர் சிங்கும் இருந்துள்ளார். ஒரு கட்டத்தில் குட்டுவும், சிங்கும் சேர்ந்து ஹண்டேவின் தலையில் ஓங்கி பேட்டால் அடித்துள்ளனர். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்தார். அவரை அப்படியே அங்கேயே விட்டுவிட்டு குட்டுவும், சிங்கும் தப்பி ஓடினர். அவர்கள் ஓடுவதைப் பார்த்த அண்டை வீட்டார் ஒருவர் எங்களுக்கு தகவல் கொடுத்தார். நாங்கள் வந்து பார்த்தபோது மாருதி ஹண்டே ரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார். அவரை மீட்டு கல்வா மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தோம். மருத்துவர்கள் அவரை ஜெஜெ மருத்துவமனைக்கு கொண்டு செல்ல பரிந்துரைத்தனர். உடனே அவர் ஜெஜெ மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
இதற்கிடையே குட்டு ஷெட்டி மற்றும் அவரது நண்பர் சிங் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது இந்திய தண்டனை சட்டப் பிரிவு 302ன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் இருவரும் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகின்றனர். கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்படுகிறது" இவ்வாறு போலீஸ் தரப்பு தெரிவித்துள்ளது.
லிவ் இன் கொலைகள்...
டெல்லியில் நடந்த கொலை வழக்கு நாட்டையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்த ஷ்ரத்தாவை அவரது காதலன் ஆப்தாப் கொலை செய்து, அவரின் உடலை 35 பாகங்களாக வெட்டி எறிந்த சம்பவம் நாட்டையே பதற வைத்தது. அப்தாப் அமீன் பூனவல்லா என்பவருக்கும் அவரது லிவ்-இன் காதலி ஷ்ரத்தாவுக்கும் கடந்த மே 18ஆம் தேதி சண்டை ஏற்பட்டுள்ளது. அதன் பிறகு, ஷ்ரத்தாவின் கழுத்தை நெரித்து அவர் கொலை செய்துள்ளார். பின்னர், அவரின் உடலை 35 துண்டுகளாக வெட்டி அவற்றை வைக்க குளிர்சாதன பெட்டியை வாங்கி உள்ளார். வேறு யாருக்கும் தெரிந்து விடக் கூடாது என்பதற்காக ஒவ்வொரு உடல் பாகத்தையும் ஒவ்வொரு நாள் இரவு எடுத்து சென்று காட்டில் எறிந்துள்ளார். இதற்காக, தினமும் அதிகாலை 2 மணியளவில் வீட்டை விட்டு வெளியேறி வெட்டப்பட்ட உடல் பாகங்களை அவர் அப்புறப்படுத்தி இருப்பது விசாரணையில் தெரிய வந்தது.
சமீபத்தில், லிவ் இன் உறவுகள் தனிநபர் சார்ந்தது. அதை இரு தனிநபர்களின் சுதந்திரம் சார்ந்தே பார்க்க வேண்டும். அதில் சமூகப் பார்வையை திணிக்கக் கூடாது என அலகாபாத் உயர் நீதிமன்றம் தெரிவித்திருந்தது. இந்தியாவில் இந்த உறவில் எந்தவித சட்ட ரீதியிலான தடையும் இல்லை. அதனால் இந்த உறவில் இருப்பவர்களுக்கு, எல்லோருக்கும் இருப்பது போலவே சம அளவிலான பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும்.இந்தியாவில் இந்த உறவுமுறை இப்போது பெருநகரங்களையும் கடந்தும் பிரபலம் அடைந்து வருகிறது என்றும் தெரிவித்திருந்தது.