Terrorists: பயங்கர ஆயுதங்களுடன் தீவிரவாதிகள், 10 பேரை சுட்டுக்கொன்ற ராணுவம் - மியான்மர் பார்டரில் சம்பவம்
Manipur Militants: மியான்மர் எல்லை அருகே இந்திய பகுதிக்குள் ஆயுதங்களுடன் சுற்றி திரிந்த 10 பேரை, ராணுவம் சுட்டுக் கொன்றதாக அறிவித்துள்ளது.

Manipur Militants: மியான்மர் எல்லை அருகே இந்திய பகுதிக்குள் ராணுவத்தின் தேடுதல் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
மியான்மர் எல்லையில் தீவிரவாதிகள்:
இந்திய ராணுவத்தின் கிழக்கு கமேண்ட் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், “இந்திய-மியான்மர் எல்லைக்கு அருகிலுள்ள மணிப்பூரின் சந்டெல் மாவட்டம், கெங்ஜாய் தெஹ்சில், நியூ சாம்தால் கிராமத்திற்கு அருகில் ஆயுதமேந்திய நபர்களின் நடமாட்டம் குறித்த உளவுத்துறை தகவலின் பேரில், ஸ்பியர் கார்ப்ஸின் கீழ் உள்ள அசாம் ரைபிள்ஸ் பிரிவு, மே 14, 2025 அன்று தேடுதல் நடவடிக்கையைத் தொடங்கியது. இந்த நடவடிக்கையின் போது, சந்தேகத்திற்கிடமான நபர்கள் ராணுவ வீரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்த, அவர்கள் மீது உடனடியாக ராணுவத்தினரால் பதில் தாக்குதல் தொடரப்பட்டது.
Eastern Command, Indian Army tweets, "Acting on specific intelligence on movement of armed cadres nearby New Samtal village, Khengjoy Tehsil, Chandel District near the Indo-Myanmar Border, Assam Rifles unit under Spear Corps launched an operation on 14 May 2025. During the… pic.twitter.com/AErNdVSDb3
— ANI (@ANI) May 14, 2025
10 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை:
இருதரப்பின்ருக்கும் இடையேயான துப்பாக்கிச் சூடு தீவிரமடைந்ததால், கூடுதல் வீரர்கள் குவிக்கப்பட்டு ஆயுதப்போராளிகள் சுற்றி வளைக்கப்பட்டனர். அதன் முடிவில் எதிர்தரப்பினர் 10 பேர் சுட்டு வீழ்த்தப்பட்டனர். அவர்களிடமிருந்து கணிசமான அளவு ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் கைப்பற்றப்பட்டன. அந்த குழுவைச் சேர்ந்த மேலும் சிலர் மறைந்து இருக்கின்றனரா? என்ற நோக்கில் தேடுதல் நடவடிக்கை இன்னும் நடந்து கொண்டிருக்கிறது”என கிழக்கு கமேண்ட் பிரிவு விளக்கமளித்துள்ளது.
மணிப்பூரில் அடங்காத பதற்றம்:
மணிப்பூரில் இருதரப்பினர் இடையேயான மோதல் கட்டுகடங்காமல் தொடரும் சூழலில் தான் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. கடந்த வாரம் போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் சேர்ந்து நடத்திய தேடுதல் வேட்டையில்,13 ஆயுதப்போராளிகள் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. அவர்கள் அனைவருமே தடை செய்யப்பட்ட கிளர்ச்சிக் குழுவை சேர்ந்தவர்கள் எனவும் ,மிரட்டி பணம் பறிக்கும் பணியில் ஈடுபட்டு இருந்ததாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. குர்கி மற்றும் மெய்தி இன மக்களிடையே வெடித்த வன்முறை காரணமாக, மணிப்பூரில் பாஜக தலைமயில் நடைபெற்று வந்த ஆட்சி கலைக்கப்பட்டு,குடியரசு தலைவர் ஆட்சி அமலில் இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் மெல்ல மெல்ல தணிந்து இயல்பு நிலை, திரும்பி வரும் சூழலில் மியான்மர் எல்லையில் இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் அரங்கேறியுள்ளது.





















