கர்ப்ப பையில் மாத்திரை வைத்து கருக்கலைப்பு - தருமபுரியில் சிக்கிய கும்பல்
கர்ப்ப பையில் மாத்திரை வைத்து கருக்கலைப்பில் ஈடுபட்ட பெண் கைது. கருக்கலைக்க முயன்ற பெண் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி.
பாப்பாரப்பட்டி அருகே சட்ட விரோதமாக வீட்டின் மேல் மாடியில் வைத்து கர்ப்பிணி பெண் ஒருவருக்கு, கர்ப்ப பையில் மாத்திரை வைத்து கருக்கலைப்பில் ஈடுபட்ட பெண் கைது செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
பதுங்கி பிடித்த மருத்துவத்துறையினர்
தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி அருகே கிட்டனஅள்ளியில் சட்ட விரோதமாக கர்ப்பிணிகளுக்கு கருவின் பாலினம் கண்டறிந்து, பெண் குழந்தைகளை கருக்கலைப்பு செய்வதாக மாவட்ட ஆட்சியர் கி.சாந்திக்கு, இரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் நேற்றிரவு இரவு சுமார் 10-மணிக்கு, ஊரக நலப்பணிகள் இணைஇயக்குநர் டாக்டர்.சாந்தி, தலைமையில் மருத்துவர் பாலசுப்ரமணியம், மருந்தாளுநர் முத்துசாமி உள்ளிட்ட குழுவினர் கிட்டன அள்ளி பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்கு சந்தேகத்திற்க்குரிய வகையில், கர்ப்பிணி பெண்ணுடன், ஒரு பெண் செல்வது தெரியவந்துள்ளது. இதனால் சிறிது நேரம் மருத்துவ குழு கண்காணித்து காத்திருந்துள்ளது. அதனை தொடர்ந்து திடீரென அந்த வீட்டிற்க்கு உள்ளே சென்று பார்த்த போது, அந்த கர்ப்பிணிக்கு சட்ட விரோதமாக கருக்கலைப்பு செய்வதற்காக கர்ப்ப பையில் கருக்கலைப்பு மாத்திரை வைத்திருந்ததும், கருக்கலைய சுமார் 5 மணி நேரம் ஆகும் என்பதால், காத்திருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து கர்ப்ப பையில் வைக்கப்பட்ட மாத்திரையை அப்புறப்புறப்படுத்தினர்.
பெங்களூருவை சேர்ந்த பெண்ணுக்கு கருக்கலைப்பு
இதனை கையும் களவுமாக பிடித்த இணை இயக்குநர் டாக்டர் சாந்தி, விசாரணை செய்ததில், பெங்களூரை சேர்ந்த கர்ப்பிணிக்கு 8 வருடத்திற்க்கு முன்னர் திருமனமாகி 2 பெண் குழந்தைகள் உள்ளதும், தற்போது கருத்தரித்த நிலையில், திரீப்பத்தூர் பகுதியில் கருவின் பாலினம் கண்டறியும் கும்பல் ஸ்கேன் செய்து, கருவில் உள்ள குழந்தையும் பெண் குழந்தை என தெரிந்ததால், இங்கு கருக்கலைப்பு செய்ய முயன்றது தெரிய வந்தது. இதில் கருவின் பாலினம் கண்டறிய ரூ.15,000 மற்றும் கருக்கலைப்பு செய்ய ரூ.30,000 பணம் பெற்றதாக தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து கருக்கலைப்பு செய்ய முயன்ற கர்ப்பிணி, தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும் சட்டவிரோதமாக கருக்கலைப்பில் ஈடுபட்ட சேலம் மாவட்டம் பனமரத்துபட்டியை அடுத்த குள்ளப்பநாயக்கனூரை சேர்ந்த சித்ராதேவி (42) என்பவரை பிடித்து பாப்பாரப்பட்டி காவல் துறையினரிடம் மருத்துவ குழுவினர் ஒப்படைத்தனர். மேலும் இந்த சித்ரா தேவி, செவிலியர் படித்துவிட்டு, தனியாக கிளினிக் நடத்துவதாக கர்ப்பிணிகளுக்கு விசிட்டிங் கார்டு கொடுத்து, கருக்கலைப்பு செய்ய வரவைழப்பதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும் தருமபுரி மாவட்டத்தில் வேறு இடத்தில், கர்ப்பிணி ஒருவருக்கு கருக்கலைப்பு செய்துவிட்டு, இங்கு வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இவர் சட்ட விரோதமாக கருவில் சிசுவின் பாலினம் கண்டறிந்து தெரிவிக்கும் கும்பலுடன் தொடர்பு வைத்துக் கொண்டு, இதுபோன்று வீடுகளுக்கே சென்று சட்ட விரோதமாக கருக்கலைப்பு செய்து வந்துள்ளார். இதனை தொடர்ந்து சித்ராதேவியை, பாப்பாரப்பட்டி காவல் துறையினர் கைது செய்து, மேலும் இதில் தொடர்புடையவர்கள் குறித்து தீவிர விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.
முதல் முறையாக கரு கலைப்பு கும்பல் சிக்கியது
மேலும் இதுவரை தருமபுரி மாவட்டத்தில் சட்ட விரோதமாக கருவில் உள்ள சிசுவின் பாலினம் கண்டறிந்து சொல்லும் கும்பல்கள் பிடிக்கப்பட்டு வந்த நிலையில், முதல் முறையாக கருக்கலைப்பு செய்தவரை பிடித்துள்ளனர். மேலும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நாமக்கல் மாவட்டத்தில் குழந்தை கடத்தி விற்பனை செய்த சம்பவத்தில், சித்ராதேவி கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. கடந்த மூன்று மாதத்தில், கருவில் உள்ள சிசுவின் பாலினம் கண்டறிந்த 3 சட்ட விரோத கும்பல் கைது செய்யப்பட்டு, 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்ய்யப்பட்டுள்ளனர்.
மேலும் இதுபோன்ற சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது குண்டர் சட்டம் பாயும் என மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி, நேற்று எச்சரிக்கை விடுத்திருந்தார். ஆனால் அதனை பொருட்படுத்தாமல், இரவில் வீட்டிற்கு சென்று கருக்கலைப்பு சம்பவத்தில், சித்ராதேவி ஈடுபட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.