மேலும் அறிய
Advertisement
குடியிருப்புகளுக்கு மத்தியில் ரயில் பாதை..50 ஆண்டாக பாலம் கேட்டு போராடும் கிராம மக்கள்..தேர்தலை புறக்கணிக்க முடிவு
இந்த கிராமத்தின் இரண்டு பகுதிகளையும் இணைக்கும் வகையில் 50 ஆண்டு காலமாக கிராம மக்கள் மனு கொடுத்து தரைப்பாலம் கேட்டு போராடி வருகின்றனர்.
பாலக்கோடு அருகே குடியிருப்புகளுக்கு மத்தியில் ரயில் பாதை அமைந்திருப்பதால், தினந்தோறும் ஆபத்தான முறையில் தண்டவாளத்தை கடந்து செல்லும் கிராம மக்கள்-பள்ளி மாணவ, மாணவிகள், அவசர தேவைக்கு மருத்துவ வசதி பெற முடியாமல் கிராம மக்கள் தவிப்பு-8 கிலோமீட்டர் சுற்றி வர வேண்டிய நிலை இருப்பதால், 50 ஆண்டுகளாக தரைப்பாலம் கேட்டு போராடி வரும் நிலையில் தேர்தலை புறக்கணிப்பதாக கிராம மக்கள் முடிவு.
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த ஜோதி அல்லி கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த கிராமத்தின் நடுவே பெங்களூர்-கோவை மார்க்கமாக ரயில் பாதை அமைந்துள்ளது. இதனால் கிராமத்தில் குடியிருப்புகள் இரண்டாக பிரிந்த நிலையில் இருந்து வருகிறது. இதில் தண்டவாளத்திற்கு ஒரு புறம் அரசு பள்ளி செயல்பட்டு வருகிறது. அதே போல் தண்டவாளத்தின் மறுபுறம், பேருந்து வசதி, மருத்துவ வசதி, விவசாய நிலங்கள் உள்ளிட்டவற்றுக்கு கிராம மக்கள் செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் தினந்தோறும் பள்ளி செல்லும் குழந்தைகள், பொதுமக்கள், கால்நடைகள் ரயில் தண்டவாளத்தை கடந்து ஆபத்தான முறையில் காலை, மாலை வேலைகளில் சென்று வருகின்றனர். அதேபோல் பேருந்து வசதி கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள் அத்தியாவசிய தேவைகளுக்கு செல்லும் பொதுமக்கள், மருத்துவ வசதி செல்லும் கர்ப்பிணிகள் உள்ளிட்டோர் தினமும் ஆபத்தான முறையில் ரயில் தண்டவாளத்தை கடந்து 3 கிலோமீட்டர் நடந்து செல்ல வேண்டிய நிலை இருந்து வருகிறது. இதனால் மனிதர்களும் கால்நடைகளும் அடிக்கடி ரயில் விபத்தில் சிக்கி உயிரிழக்கின்ற அபாயமும் இருந்து வருகிறது.
இதனால் இந்தப் பகுதியில் உள்ள மக்கள் அருகில் உள்ள ரயில் தண்டவாளத்திற்கு அடியில் நீர்வழிப் பாதை செல்கின்ற சிறு பாலத்தினை பயன்படுத்தி வருகின்றனர். இதில் இரு சக்கர வாகனம் மட்டுமே செல்ல முடியும். ஆனால் நான்கு சக்கர வாகனங்கள் செல்ல முடியாத நிலை இருந்து வருகிறது. இதனால் அவசர தேவைக்கு உடல்நிலை சரியில்லாதவர்கள், கர்ப்பிணிகள் போன்றோரை 108 மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்றால், ரயில் தண்டவாளம் வரை 108 வந்து நிற்கும். அந்த தண்டவாளத்தை கடந்து அழைத்துச் செல்ல வேண்டும். அவ்வாறு இல்லை என்றால் சுமார் 10 கிலோமீட்டர் சுற்றி உடல்நிலை சரியில்லாதவர்களை அழைத்துச் செல்ல வேண்டிய நிலை இருந்து வருகிறது. இதனால் இந்த கிராமத்தில் உள்ள மக்களால் எளிதில் மருத்துவ வசதி பெற முடியாத சூழல் இருந்து வருகிறது.
இந்த கிராமத்தின் இரண்டு பகுதிகளையும் இணைக்கு வகையில் தரைப்பாலம் அமைத்துக் கொடுக்க வேண்டும் என ரயில்வே துறை அமைச்சர், அதிகாரிகள், நாடாளுமன்ற உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர், மாவட்ட ஆட்சியர் என கடந்த 50 ஆண்டு காலமாக இந்த கிராம மக்கள் மனு கொடுத்து, தரைப்பாலம் கேட்டு போராடி வருகின்றனர். ஆனால் இந்த மக்களின் கோரிக்கை இதுவரையிலும் நிறைவேற்றப்படாமல் இருந்து வருகிறது. இதனால் 50 ஆண்டு காலமாக ரயில்வே தரைப்பாலம் கேட்டு போராடிவரும் கிராம மக்கள் தங்களுக்கு ரயில்வே தரைப்பாலம் அமைத்துக் கொடுக்கும் வரை தேர்தலில் வாக்களிக்காமல் தேர்தலை புறக்கணித்து போவதாக முடிவு செய்து, அதிகாரிகளுக்கு தகவலை தெரிவித்து, கிராமத்தில் பதாகைகளை வைத்துள்ளனர். மேலும் வருகின்ற நாடாளுமன்றத் தேர்தல் மட்டுமல்லாமல், தங்களுக்கு தரைப்பாலம் எப்பொழுது அமைகிறதோ அதுவரை வாக்களிக்கப் போவதில்லை எனவும் முடிவு செய்துள்ளனர். எனவே கிராம மக்கள் நலம் கருதி ஜோதிஅள்ளி கிராமத்தில் 2 குடியிருப்புகளுக்கும் இணைக்கும் வகையில் தரைப்பாலம் அமைத்துக் கொடுக்க வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
சென்னை
பொழுதுபோக்கு
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion