பென்னாகரம் அருகே ஓடை புறம்போக்கை வளைத்துப் போட்ட தனிநபர் - வழி கேட்டு வெயிலில் உட்கார்ந்த குடும்பத்தினர்
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே ஓடை புறம்போக்கை வளைத்துப் போட்ட தனிநபர் - வழி கேட்டு வெயிலில் உட்கார்ந்த குடும்பத்தினர்
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த மூங்கில்மடுவு பகுதியில் மணிகண்டன் என்பவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். தங்களது விவசாய நிலத்திலேயே வீடு கட்டி பல ஆண்டுகளாக வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் தங்களது வீட்டிற்கு செல்லும் பாதை ஓடை புறம்போக்கு. இந்த ஓடை புறம்போக்கு வழியாக மணிகண்டன் குடும்பத்தினர் சென்று வந்துள்ளனர். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த ஒருவரின் விவசாய நிலமும் ஓடை புறம்போக்கு அருகே உள்ளது. தொடர்ந்து அந்த ஓடை புறம்போக்கு நிலத்தை, அவருடைய விவசாய நிலம் என கூறி, மணிகண்டன் குடும்பத்தினரிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனைத் தொடர்ந்து ஓடை புறம்போக்கை நிலத்தை தனது எனக் கூறி ஆக்கிரமித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் மணிகண்டன் குடும்பத்தினர் அந்த வழியாக வரக் கூடாது என தடுப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், வீட்டிற்கு செல்ல வழியில்லாமல் தவித்து வந்துள்ளனர். தொடர்ந்து ஓடை புறம்போக்கை ஆக்கிரமித்தவரிடம் இருந்து மீட்டு தரக்கோரி அரசு அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர். ஆனால் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
ஆக்கிரமிப்பை அகற்ற வலியுறுத்தி ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா
இதனைத் தொடர்ந்து ஓடை புறம்போக்கு ஆக்கிரமிப்பை அகற்ற கோரி, கடந்த ஜனவரி, 23 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது மணிகண்டன் குடும்பத்தினரிடம் பேச்சுவார்த்தை நடத்திய அதிகாரிகள் ஓடை புறம்போக்கு ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளனர். ஆனால் இதுவரை ஆக்கிரமிப்பு அகற்றப்படவில்லை இதனால் வீட்டிற்கு செல்ல வழியில்லாமல் மணிகண்டன் குடும்பத்தினர் தவித்து வருகின்றனர். இதனால் ஆத்திரமடைந்த மணிகண்டன் குடும்பத்தினர், இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மீண்டும் மனு கொடுக்க வந்திருந்தனர். அப்பொழுது தனி நபரிடம் இருந்து ஓடை புறம்போக்கு ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்காத, அதிகாரிகளின் கண்டித்து மணிகண்டன் குடும்பத்தினர், குழந்தைகளுடன் ஆட்சியர் அலுவலக மெத்தன போக்கை வளாகத்தில், வெயிலையும் பொருட்படுத்தாமல் திடீரென தர்ணாவில் ஈடுபட்டனர்.
பேச்சுவார்த்தை நடத்திய அதிகாரி
அப்போது அங்கு வந்த மாவட்ட வருவாய் அலுவலர் டாக்டர்.பால் பிரின்சிலி ராஜ்குமார், கோட்டாட்சியர் விராசனைக்கு உத்தரவிட்டு ஓடை புறம்போக்கு நில ஆக்கிரமிப்பை மீட்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். அதனை அடுத்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட மணிகண்டன் குடும்பத்தினர் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். தொடர்ந்து ஆட்சியர் அலுவலகத்தில் ஓடை புறம்போக்கு ஆக்கிரமிப்பை அகற்ற வலியுறுத்தி குடும்பத்தினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவத்தால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.