39 நாட்களுக்கு பிறகு ஒகேனக்கல் சுற்றுலா பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்
ஒகேனக்கல்லில் குளிப்பதற்கு சுற்றுலா பயணிகளுக்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி-சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி.
காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்ததால், கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளுக்கான நீர்வரத்து அதிகரித்து இரண்டு அணைகளும் முழு கொள்ளளவை எட்டியது. இதனால் அணைகளின் பாதுகாப்பு கருதி, இரண்டு அணைகளுக்கும் வரும் நீரை உபரியாக காவிரி ஆற்றில் தமிழகத்திற்கு, கடந்த ஜூலை 15-ஆம் தேதி முதல் திறக்கப்பட்டது.
இதனால் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து, அதிகபட்சமாக வினாடிக்கு 2.30 இலட்சம் கன அடி வரை உயர்ந்து, காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இந்த நிலையில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மாவட்ட நிர்வாக கடந்த ஜூலை 15ஆம் தேதி முதல் ஒகேனக்கல் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கும், பரிசல் இயக்கவும் தடை விதித்தது. தொடர்ந்து காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால், கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு படிப்படியாக குறைக்கப்பட்டது.
இந்த நிலையில் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 10,000 கன அடியாக இருந்து மீண்டும் குறைந்து வினாடிக்கு 8,000 கன அடியாக குறைந்துள்ளது.
மேலும் நீர்வரத்து குறைந்தாலும், மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளதால், தண்ணீர் ஒகேனக்கல்லில் தேங்கி நின்று, மெயனருவி, சினியருவி, ஐந்தருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி பார்ப்பதற்கு ரம்மியமாக காட்சியளித்து வருகிறது.
கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக நீர்வரத்து தொடர்ந்து சரிந்து வருகிறது. மேலும் காவிரி நீர்பிடிப்பு பகுதியில் மழை குறைந்ததாலும், கர்நாடக அணைகளில் நீர் திறப்பு குறைக்கப்பட்டுள்ளதால், இந்த நீர்வரத்து படிப்படியாக குறையும் என மத்திய நீர் வள ஆணைய அலுவலர்கள் தெரிவிக்கின்றனர்.
கடந்த 40 நாட்களுக்கு பிறகு காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 10,000 கன அடிக்கு கீழ் குறைந்துள்ளது.
இந்த நிலையில் நீர்வரத்து குறைந்ததால், ஒகேனக்கல்லில் சுற்றுலாப் பயணிகள் அருவியில் குளிப்பதற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது. தொடர்ந்து 39 நாட்களுக்குப் பிறகு இன்று முதல் அருவிகளில் குளிக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது.
மேலும் மேட்டூர் அணை நிரம்பியுள்ளதால் ஒகேனக்கலில் தண்ணீர் தேங்கி வருகிறது. அதேப்போல் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட போது, ஆங்காங்கே சேதங்கள் ஏற்பட்டுள்ளதாலும், ஒரு சில இடங்களில் பள்ளங்கள் இருப்பதாலும், சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பாக அருவியில் மட்டும் குளிக்க வேண்டும்.
மேலும் அனுமதி வழங்கிய இடங்களை தவிர வேறு எங்கும் குளிக்க வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது. இதனால் ஏற்கனவே ஒகேனக்கல்லில் பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கிய நிலையில், இன்று முதல் அருவியில் குளிக்கவும் அனுமதி வழங்கி உள்ளதால், சுற்றுலாப் பயணிகளும், ஒகேனக்கல்லில் உள்ள சுற்றுலா தொழிலாளர்களும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.