நீலகிரியில் அடுத்தடுத்து மண் சரிவு; மலை ரயில் சேவை மீண்டும் இரத்து!
குன்னூர் - உதகை இடையேயான மலை ரயில் சேவை வருகின்ற 30 ம் தேதி வரையும், மேட்டுப்பாளையம் - உதகை இடையேயான மலை ரயில் சேவை வருகின்ற டிசம்பர் 7 ம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது.

வடகிழக்கு பருவமழை வலுபெற்று வரும் நிலையில் தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை சற்று தாமதமாக தொடங்கிய நிலையில், நவம்பர் மாதம் துவங்கியது முதல் தமிழ்நாட்டில் அனேக பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது. கடந்த சில நாட்களாக மழை ஓய்ந்திருந்த நிலையில், தமிழ்நாட்டில் கடந்த இரண்டு நாட்களுக்கு மேலாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனிடையே வடகிழக்கு பருவமழை துவங்கியது முதல் நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் பரவலாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நீலகிரி எல்லை மற்றும் மேட்டுப்பாளையம் பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது.

இதனால் மேட்டுப்பாளையம் - ஊட்டி இடையேயான மலை ரயில் பாதையில் மண் சரிவு ஏற்படுவதும், இதனால் நீலகிரி மலை ரயில் சேவை நிறுத்தப்படுவதும் தொடர்ந்து நடந்து வருகிறது. கனமழை காரணமாக மேட்டுப்பாளையம் ஊட்டி மலை ரயில் பாதையில் மண் சரிவு ஏற்பட்டு, கடந்த 4 ஆம் தேதி முதல் 7ஆம் தேதி வரையும், மீண்டும் 9 ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரையும் மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டது. மலை ரெயில் பாதையில் சீரமைக்கும் பணி முழுவதும் முடிவடைந்த நிலையில், 10 நாட்களுக்குப் பின்னர் கடந்த 19ஆம் தேதி முதல் மீண்டும் மலை ரெயில் சேவை தொடங்கியது. இந்த நிலையில் கடந்த 21ம் தேதி இரவு பெய்த திடீர் கனமழை காரணமாக மேட்டுப்பாளையம் - ஊட்டி மலை ரயில் பாதையில் மீண்டும் மண் சரிவு ஏற்பட்டது. அடர்லி, ஹில்குரோவ் ரயில் நிலையங்கள் இடையே உள்ள ரயில் தண்டவாளத்தில் பாறாங்கற்கள் உருண்டு விழுந்தன. மேலும் மண் சரிந்து ரயில் பாதையை மூடியது. இதன் காரணமாக மேட்டுப்பாளையம் - ஊட்டி இடையேயான மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக மலை ரயிலில் பயணம் செய்ய வந்த வெளிநாடு மற்றும் உள்நாட்டு சுற்றுலா பயணிகள் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

இந்நிலையில் நேற்று நீலகிரி மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக உதகை - குன்னூர் மலை ரயில் பாதையிலும் பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது. ரயில் தண்டவாளத்தில் பாறைகள், மண் மற்றும் முறிந்து விழுந்த மரங்கள் கிடக்கின்றன. இதன் காரணமாக உதகை - குன்னூர் இடையேயான நீலகிரி மலை ரயில் சேவை இன்று இரத்து செய்யப்பட்டது. ரயில் பாதையை சீரமைக்கும் பணிகளில் இரயில்வே துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். ரயில் பாதையை சீரமைக்கும் பணிகள் நிறைவடையாததாலும், நீலகிரி மாவட்டத்தில் வரும் நாட்களிலும் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருப்பதாலும் குன்னூர் - உதகை இடையேயான மலை ரயில் சேவை வருகின்ற 30 ம் தேதி வரை இரத்து செய்யப்பட்டுள்ளது. இதேபோல மேட்டுப்பாளையம் - உதகை இடையேயான மலை ரயில் சேவை வருகின்ற டிசம்பர் 7 ம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது. ரயிலில் பயணிக்க முன்பதிவு செய்த பயணிகளுக்கு டிக்கெட் கட்டணம் முழுமையாக திரும்ப வழங்கப்படும் எனவும் ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
Before You Go
Thanjavur Viral Video : ”உன்ன DISMISS பண்ணியாச்சே நீ எப்படி வேலை செய்ற” ரணகளமான அரசு அலுவலகம்
ட்ரெண்டிங் செய்திகள்






















