திருமாவளவன் இனிமேல்தான் பல அதிர்ச்சிகளை தாங்க வேண்டியது வரும் - தமிழிசை
அண்ணன் திருமாவளவனுக்கு சொல்கிறேன், இன்னும் உங்களை பலப்படுத்திக் கொள்ளுங்கள், இன்னும் நீங்கள் நிறைய அதிர்ச்சிகளை தாங்க வேண்டும் - தமிழிசை செளந்தரராஜன்

பாஜகவினர் கொண்டாட்டம்
டெல்லி சட்டசபை தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதை ஒட்டி சென்னை கமலாலயத்தில் பாஜகவினர் மேள தாளங்கள் முழங்க ஆடி பாடி பட்டாசுகள் வெடித்தும் இனிப்புகளை வழங்கியும் உற்சாகமாக வெற்றியை கொண்டாடினர்.
இந்த கொண்டாட்டத்தில் பாஜக மூத்த தலைவரும் முன்னாள் ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் கலந்து கொண்டு பாஜக தொண்டர்களுக்கும் இனிப்புகளை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை சௌந்தரராஜன்,
பாஜக தலைநகரில் வெற்றி பெற்றதை நாங்கள் மகிழ்ச்சியோடு எங்கள் பாரத பிரதமருக்கும் டெல்லியை சார்ந்த தலைவர்களுக்கும் அகில பாரத தலைவர்கள் & தொண்டர்களுக்கும் நாங்கள் இந்த வெற்றிக்காக எங்கள் வாழ்த்துக்களை சமர்ப்பிக்கிறோம்.
தலைநகரில் பாஜக தலை நிமிர்கிறது
ஆம் ஆத்மி தலை குனிகிறது. காங்கிரஸ் நிலை குலைகிறது. டில்லி தேர்தலுக்காக தமிழகத்தில் இருந்து நிறைய தலைவர்கள் அங்கே சென்று பிரச்சாரம் செய்தார்கள். என்னைப் பொறுத்தவரை இது மிகப்பெரிய வெற்றி. பாஜக வளர்ச்சிக்கான திட்டங்களை முன்னெடுத்துச் செல்லும் என்பதற்காக தலைநகரில் மக்கள் பாஜகவுக்கு வாக்களித்திருக்கிறார்கள்.
தலைநகரிலேயே தாமரை மலரும் போது தமிழகத்திலும் தாமரை மலரும் என்ற நம்பிக்கை இருக்கிறது. தலைநகரில் தாமரை மலர்ந்ததை கொண்டாடுவதைப் போல 2026 ல், தமிழகத்திலும் தாமரை மலர்வதை கொண்டாடுவோம்.
மக்கள் கண்ணீரில் தான் தத்தளித்தார்கள்
ஊழலை ஒழிப்போம் என்று சொல்லி ஆட்சிக்கு வந்த கெஜ்ரிவால் ஊழல் குற்றச்சாட்டால் சிறைக்கு சென்றார்.
டில்லியில் எந்த இடத்திலும் கெஜ்ரிவால் வளர்ச்சியை தரவில்லை. மின்சாரம் , தண்ணீர் வசதி போன்ற எதையும் முறைப்படுத்தவில்லை. மக்கள் கண்ணீரில் தான் தத்தளித்தார்கள். டில்லி மக்கள் உறுதியான முடிவை தந்திருக்கிறார்கள். தற்போது 46 ஐ தாண்டி பாஜக வெற்றி பெற்றிருக்கிறது. கெஜ்ரிவால் நிலை குலைந்து போயிருக்கிறார். அவர்களின் இந்தியா கூட்டணி தேர்தலை கூட முறையாக எதிர் கொள்ளவில்லை என்றும், காங்கிரஸோ ஜீரோ. பாஜக வெற்றி பெற்றிருக்கிறது.
திமுக அங்கம் வகிக்கும் இந்தியா கூட்டணி தேர்தலை முறையாக எதிர் கொள்ள முடியவில்லை. இங்குள்ள வெற்றியை கூட கொண்டாட முடியாத சூழ்நிலையில் திமுக இருக்கிறது. பிற்படுத்தப்பட்ட மக்கள் அதிகம் வாழும் இடங்களில் பாஜக பெரும்பான்மை பெற்றுள்ளது.
பட்டியலின மக்களுக்கு எதிரானவர்கள் என்று பாஜகவை சித்தரித்த போதும் அங்கெல்லாம் பாஜக வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றியை நாங்கள் கொண்டாடுகிறோம். ஈரோட்டை பொருத்தவரை திமுகவுக்கு தோல்விகரயமான வெற்றி தான். அவர்கள் வெற்றி வெற்றி அல்ல. பாஜக இந்த வெற்றியை கொண்டாடுகிறது. 2026 ல் எங்கள் வெற்றியை நாங்கள் கொண்டாடுவோம் என்று கூறினார்.
நிறைய அதிர்ச்சிகளை தாங்க வேண்டும்
வேங்கை வயலில் இன்னும் நியாயம் கிடைக்கவில்லை. முதலில் நியாயம் கிடைப்பதை பார்க்க வேண்டும் தலைநகரை நாங்கள் பார்த்துக் கொள்வோம் என்றும் , திருமாவளவனுக்கு, பாஜகவின் வெற்றி அதிர்ச்சி அல்ல. காங்கிரஸின் தோல்வி தான் அதிர்ச்சி. அண்ணன் திருமாவளவனுக்கு சொல்கிறேன், இன்னும் உங்களை பலப்படுத்திக் கொள்ளுங்கள் இன்னும் நீங்கள் நிறைய அதிர்ச்சிகளை தாங்க வேண்டும்.
டெல்லியில் வாக்குகளை பெற பிரதமரின் திட்டங்களும் தலைவர்களின் செயல்பாடுகளும் காரணம் எனவும், பாரத பிரதமரின் ஆட்சியும் நல்ல திட்டங்களும் எங்களுக்கு ஆதரவாக இருக்கிறது. எங்களுக்கான சவால், நாங்கள் குறிப்பிட்ட இனத்திற்கு எதிரானவர்கள் என்று கூறுவது தான். டில்லி தேர்தலை கொண்டாடுவோம் என்று கூறினார்.
மத்திய பட்ஜெட் தொடர்பாக கம்யூ. ஆர்ப்பாட்டம் குறித்து பேசியவர் , 12 லட்சம் உச்சவரம்பு இருக்கும்போது 6 கோடி மக்கள் பலன் பெறுவார்கள். அப்படியென்றால் 6 கோடி மக்களின் லாபத்தை அவர்கள் எதிர்க்கிறார்களா ?
பட்ஜெட் நல்ல பட்ஜெட் என்று சாமானியர்கள் கொண்டாடுகிறார்கள் ஆனால் கம்யூனிஸ்ட் கொண்டாட மாட்டார்கள் எனவும் , தமிழகத்திற்கு பிரதமர் மோடி வருவாரா என்ற கேள்விக்கு , பிரதமர் நிச்சயம் தமிழகம் வருவார் ஆனால் எப்போது என்று உறுதியாக சொல்ல இயலாது என்று கூறினார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

