Chennai ; கொளத்தூரில் மலக்குழி மரணம் , விஷவாயு தாக்கி ஒருவர் உயிரிழப்பு
சென்னை கொளத்தூரில் கழிவுநீர் மலக்குழியில் இறங்கி சுத்தம் செய்த போது விஷவாயு தாக்கி ஒருவர் உயிரிழப்பு. 2 பேர் மருத்துவமனையில் அனுமதி

சென்னை மாநகராட்சி ஒப்பந்த பணி
சென்னை கொளத்தூர் திருப்பதி நகர் முதல் பிரதான சாலையில் கழிவு நீர் கால்வாய் உள்ளது. இந்த கால்வாயில் கடந்த 2 நாட்களாக அடைப்பு ஏற்பட்டு உள்ளது. இதை சரி செய்வதற்காக சென்னை மாநகராட்சி ஒப்பந்த அடிப்படையில் மேற்பார்வையாளர் சுரேஷ் குமார் தலைமையில் , கள்ளக் குறிச்சி மாவட்டம் , சங்கராபுரம் ரங்கப்பனூர் கிராமத்தைச் சேர்ந்த குப்பன் ( வயது 37 ) , பூட்டை கிராமத்தைச் சேர்ந்த சங்கர் ( வயது 40 ) சென்னை வானகரம் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த ஹரிஹரன் ( வயது 28 ) ஆகிய மூன்று பேரும் கழிவு நீர் கால்வாய் அடைப்பை சரி செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
மலக்குழிக்குள் இறங்கி சுத்தம் செய்த தொழிலாளர்கள்
குப்பன் கழிவுநீர் மலக்குழிக்குள் இறங்கி சுத்தம் செய்த போது விஷவாயு தாக்கி மயங்கி மலக் குழிக்குள் விழுந்துள்ளார். இதை பார்த்த சங்கர் , ஹரிகரன் ஆகிய இருவரும் குப்பனை காப்பாற்றுவதற்காக மலக்குழிக்குள் இறங்கியுள்ளனர். அவர்களும் விஷவாயு தாக்கி உள்ளே மயங்கி விழுந்துள்ளனர்.
நீண்ட போராட்டத்திற்கு பிறகு உடல் மீட்பு
சக தொழிலார்கள் சங்கர் , ஹரிஹரன் ஆகிய இரண்டு பேரையும் மலக் குழியிலிருந்து வெளியே மீட்டு கொண்டு வந்தனர். விஷவாயு தாக்கி குப்பன் மூச்சு திணறி மலக்குழிக்குள் விழுந்த குப்பன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடல் மலக் குழியிலேயே சிக்கிக் கொண்டது. தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்து அவர்கள் வந்து நீண்ட போராட்டத்திற்கு பிறகு குப்பனின் உடலை மலக் குழியிலிருந்து மீட்டனர்.
போலீசார் வழக்கு பதிவு
சங்கர் , ஹரிஹரன் ஆகியோர் சென்னை பெரியார் நகர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கு இருவருக்கும் சிகிச்சை அளித்து வந்த நிலையில் ஹரிஹரன் உடல் நிலை மோசமடைந்ததால் பெரியார் நகர் அரசு மருத்துவமனையிலிருந்து ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து கொளத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் கொளத்தூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2013 ஆம் ஆண்டு கையால் மலம் அள்ளும் தொழிலுக்குத் தடை மற்றும் மறுவாழ்வுச் சட்டம் நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்டு நடைமுறைக்கு வந்த பிறகும் கூட இது போன்ற சம்பவங்கள் மீண்டும் தொடர் நிகழ்வாகவே தமிழகத்தில் உள்ளது.




















