"காவல்துறை அராஜகம் ஒழிக" கழிவறையில் சோதனை செய்து பெண்கள் கைது !! கொந்தளித்த ஆர்ப்பாட்டகாரர்கள்
பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் - சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட பல்நோக்கு மருத்துவமனைப் பணியாளர்கள் குண்டுக்கட்டாகக் கைது

"துரத்துச் சென்று கைது"
தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் பல்நோக்கு மருத்துவமனைப் பணியாளர்கள் அனைவரையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் , மாதத்திற்கு ஒரு நாள் ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்க வேண்டும் , அனைத்து அரசு பொது விடுமுறை நாட்களிலும் விடுமுறை அளிக்க வேண்டும் , பணி மாறுதல் கலந்தாய்வு நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி , பல்நோக்கு மருத்துவமனைப் பணியாளர் மேம்பாட்டுச் சங்கத்தினர் போராட்டம் நடத்தத் திட்டமிட்டிருந்தனர்.
இதற்காக சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே திரண்ட பணியாளர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். தொடர்ந்து, போராட்டத்தில் பங்கேற்க வந்தவர்களைத் துரத்திச் சென்று கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
எழும்பூர் ருக்மணி லட்சுமிபதி சாலையில் அமர்ந்து பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்களைக் காவல்துறையினர் குண்டுக்கட்டாகத் தூக்கிக் கைது செய்து பேருந்துகளில் அழைத்துச் சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
போராட்டத்தில் பங்கேற்க வந்த பெண்களை காவல் துறையினர் தாக்கியதாகப் போராட்டக்காரர்கள் குற்றம் சாட்டினர். மேலும், காவல் துறையின் நடவடிக்கையைக் கண்டித்து, “காவல்துறை அராஜகம் ஒழிக” என முழக்கங்களை எழுப்பினர்.
இது குறித்து பல்நோக்கு மருத்துவமனைப் பணியாளர் மேம்பாட்டுச் சங்கத்தின் சிறப்புத் தலைவர் பாரதி செய்தியாளர்களிடம் பேசியதாவது ;
தேர்தல் வாக்குறுதியின்படி தங்களைப் பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டம் நடத்தத் திட்டமிட்டு இருந்தோம்.
உண்ணாவிரதப் போராட்டம் மட்டுமே நடத்துவோம் எனக் காவல் துறையிடம் உறுதியாகத் தெரிவித்திருந்த நிலையில் , அமைச்சருக்கு எதிராகப் பேசியதாகக் கூறி போராட்டத்திற்கான அனுமதி ரத்து செய்யப்பட்டதாக காவல் துறை கூறுகின்றனர்.
தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து போராட்டத்தில் பங்கேற்க வந்த பணியாளர்கள் தடுத்து நிறுத்தப்பட்டு , கைது செய்யப்பட்டுள்ளனர்.
போராட்டத்தில் பங்கேற்க வந்த பெண்கள் பேருந்து நிலையத்திற்குக்கூட வர முடியாத வகையில் காவல் துறையினர் தடுப்பதாகவும் , வீடுகளுக்குச் சென்று கைது செய்கின்றனர்.
உண்ணாவிரத போராட்டம் நடத்த கூட உரிமையில்லையா ?
கழிவறைக்குச் சென்ற பெண் பணியாளர்களைக் கூட கழிவறைக்குள் சென்று சோதனை செய்து கைது செய்துள்ளனர். உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவதற்குக்கூட உரிமை இல்லையா ? எதற்காகக் காவல்துறை போராட்டத்தைக் கண்டு அஞ்சுகிறது ?
போராட்டத்தில் ஈடுபட்ட சங்கத்தின் சிறப்புத் தலைவர் பாரதி உள்ளிட்ட பணியாளர்களைக் காவல் துறையினர் கைது செய்து பேருந்துகளில் அழைத்துச் சென்றனர்.
Before You Go
"எங்க அப்பா பார்த்துப்பாரு"வேகமாக வந்து மோதிய கார்.. பறிபோன 3 உயிர்கள்
ட்ரெண்டிங் செய்திகள்





















