இறந்தபின் பயன்படும் உடல்; எடுத்துக்காட்டாக திகழ்ந்த முதியவர் - காஞ்சியில் நெகிழ்ச்சி
இறந்த பின் உடலை மருத்துவ மாணவர்கள் ஆராய்ச்சிக்காக மருத்துவ கல்லூரிக்கு வழங்க வேண்டும் என்ற காஞ்சிபுரத்தை சேர்ந்த முதியவரின் கடைசி ஆசையை நிறைவேற்றிய குடும்பத்தினர்
இறந்த பின் உடலை மருத்துவ மாணவர்கள் ஆராய்ச்சிக்காக மருத்துவ கல்லூரிக்கு வழங்க வேண்டும் என்ற காஞ்சிபுரத்தை சேர்ந்த முதியவரின் கடைசி ஆசையை நிறைவேற்றிய குடும்பத்தினர், சம்பிரதாய முறைப்படி ஈமைக்கிரியைகள் செய்து மருத்துவக் கல்லூரிக்கு வழங்கினார்கள்.
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாநகராட்சி சின்ன காஞ்சிபுரம் திருச்சோலை தெரு பகுதியைச் சேர்ந்தவர் திருவேங்கடம் வயது 75. திருவேங்கடத்திற்கு முரளிதரன் என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர். சமுதாய கரையோடு வாழ்ந்தவரான திருவேங்கடம், தான் இறந்து போனால் தனது உடலை மருத்துவ கல்லூரி மாணவர்கள் ஆராய்ச்சிக்கு தானமாக வழங்கிட வேண்டும் என தனது மகன் முரளிதரன் மற்றும் குடும்பத்தாரிடம், நண்பர்களிடமும் தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில் கடந்த ஒரு வார காலமாக உடல்நிலை சரியில்லாமல் சிகிச்சை பெற்று வந்த நிலையில் திருவேங்கடம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
திருவேங்கடத்தின் கடைசி ஆசையை நிறைவேற்றிடும் வகையில் உறவினர்களுடனும், நண்பர்களுடனும், கலந்து ஆலோசனை செய்த குடும்பத்தினர் முதியவர் திருவேங்கடத்தின் உடலை வேலூர் கிறிஸ்தவ மருத்துவ கல்லூரிக்கு தானம் வழங்க முடிவு செய்து, தகவல் தெரிவித்து அதற்குண்டான ஆவணங்களில் கையெழுத்திட்டனர்.
அதன்படி, திருவேங்கடத்தின் உடலுக்கு உறவினர்கள் நண்பர்கள் முன்னிலையில் குடும்பத்தினர் சம்பிரதாயம் முறைப்படி இறுதி சடங்குகளை செய்த பின்னர் சிறிது தூரம் முதியவர் திருவேங்கடத்தின் உடலை எடுத்துச் சென்று தயாராக இருந்த வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி ஆம்புலன்சில் ஒப்படைத்தனர்.
சமூக அக்கறையோடு வாழ்ந்த முதியவரின் கடைசி ஆசைப்படி, மருத்துவக் கல்லூரிக்கு முதியவரின் உடலை குடும்பத்தினர் தானமாக வழங்கிய சம்பவம் காஞ்சிபுரம் பகுதியில் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.