(Source: Poll of Polls)
சென்னை அருகே சோகம்.. ரயில் மோதி கர்ப்பிணி பெண் உயிரிழப்பு
Train Accident : சென்னை பொத்தேரி அருகே ரயில் மோதியதில் இருவர் உயிரிழந்துள்ளனர்
செங்கல்பட்டு மாவட்டம் பொத்தேரியில் ரயில் விபத்தில், கர்ப்பிணிப் பெண் மற்றும் அவருடைய ஆண் நண்பர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கேரள நண்பர்கள்
கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியை சேர்ந்தவர் ஐஸ்வர்யா (28). கேரளா மாநிலம் மலப்புரம் பகுதியை சேர்ந்தவர் முகமது ஷரீப் (35). இருவரும் நண்பர்களாக பழகி வந்துள்ளனர் . இந்தநிலையில் இருவரும் கேரளாவில் இருந்து சென்னைக்கு வேலை தேடி வந்துள்ளனர். சென்னை கூடுவாஞ்சேரி அருகே உள்ள நண்பர் ஒருவரின் உதவியுடன், வேலை தேடுவதற்காக இருவரும் வந்திருந்ததாக கூறப்படுகிறது .
ரயில் மோதி விபத்து
இந்தநிலையில் நேற்று இரவு 8 மணி அளவில் பொத்தேரி கூடுவாஞ்சேரிக்கு இடையே சென்னை கடற்கரை - செங்கல்பட்டு ரயில் தண்டவாளத்தில் கூடுவாஞ்சேரி அருகே உள்ள தனது நண்பர் வீட்டுக்குச் செல்ல, பேசியபடி நடந்து சென்றுள்ளனர். அச்சமயம் அவ்வழியாக வந்த சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு வரை செல்லும் மின்சார ரயிலில் அடிபட்டு, இருவருக்கும் தலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
கர்ப்பிணிப் பெண்
இந்த விபத்து நடந்த சில நிமிடங்களில், முகமது ஷரீஃப் சம்பவ இடத்திலேயே துடி துடித்து உயிரிழந்துள்ளார். உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ஐஸ்வர்யாவை அருகில் இருந்த, தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. தீவிர சிகிச்சை பிரிவிலிருந்த ஐஸ்வர்யா சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார். உயிரிழந்த ஐஸ்வர்யா நான்கு மாதம் கர்ப்பமாக இருப்பது குறிப்பிடத்தக்கது. கொடூர விபத்து அப்பகுதியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
விபத்தா ? தற்கொலையா ?
இந்த விபத்து தொடர்பாக ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து, தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இருவரும் தற்செயலாக செல்லும் பொழுது விபத்து ஏற்பட்டதா ? அல்லது தற்கொலை செய்து கொண்டார்களா ? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காவல்துறை நடத்திய விசாரணையில், தற்கொலையாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக தெரிவித்தனர். இருவர் உயிரிழந்த தொடர்பாக, இருதரப்பு பெற்றோர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த இரண்டு பேரின் உடலும், உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
Suicidal Trigger Warning..
வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் வந்து கொண்டுதான் இருக்கும். அவைகளை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம் கையாளும் விதத்தில் தான் உள்ளது. தற்கொலை என்பது எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலும் அதனை மாற்ற கீழ்காணும் எங்களுக்கு அழைக்கவும். மாநில உதவி மையம் :104.
சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண்
- (+91 44 2464 0050, +91 44 2464 0060)