டெலிவரி பொருட்களை கொடுக்க வந்த இடத்தில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை - சென்னையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்
ஐ.டி நிறுவனத்தில் பணிபுரியும் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஆன்லைன் டெலிவரி நபர் கைது.

செல்போனில் சார்ஜ் இல்லை
சென்னை மடிப்பாக்கம் பகுதியில் 27 வயதுடைய பெண் ஒருவர் தனியார் ஐ.டி. நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். மேற்படி பெண் கடந்த 13.05.2025 அன்று மதியம் , ஆன்லைன் மூலம் பொருட்கள் ஆர்டர் செய்துள்ளார். பொருட்களை டெலிவரி செய்ய வந்த நபர் அப்பெண்ணிடம் தனது செல்போனில் சார்ஜ் இல்லை என கூறி சார்ஜ் போட்டு விட்டு, அப்பெண் வீட்டின் சமையல் அறைக்கு சென்ற போது அந்த நபர் அப்பெண்ணிடம் உதவி செய்யட்டுமா எனக் கேட்டுள்ளார்.
சந்தேகப்பட்ட அப்பெண் அவரின் செல்போனை பார்த்தபோது போனில் சார்ஜ் உள்ளதை பார்த்து டெலிவரி நபரை வீட்டை விட்டு வெளியே போக சொல்லியுள்ளார். ஆனால் அந்த நபர் அப்பெண்ணிடம் தவறாக பேசியும், அப்பெண்ணின் உடலை பற்றி பாலியல் ரீதியாக தவறாக கூறிவிட்டு அங்கிருந்து சென்றுள்ளார்.
காவல் நிலையத்தில் புகார்
இது குறித்து அவரது டெலிவரி நிர்வாகத்தில் கூறியும் அந்த நபர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காததால், இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் S-7 மடிப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததின் பேரில் , பாரதிய நியாய சன்ஹிதா சட்டம் (BNS Act) மற்றும் தமிழ்நாடு பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் (TNPHW Act) ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
S-7 மடிப்பாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் விசாரணை செய்து , மேற்படி குற்ற வழக்கில் சம்பந்தப்பட்ட மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த கோபிநாத் ( வயது 28 ) என்பவரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட கோபிநாத் விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு , நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்
கட்டுமான பணிக்காக வைத்திருந்த இரும்பு கம்பிகளை திருடிய நபர்
தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த அன்புகுமார் ( வயது 23 )என்பவர் 18.06.2025 அன்று H-3 தண்டையார்பேட்டை காவல் நிலைய குற்றப்பிரிவில் கொடுத்த புகாரில் , தான் தனியார் கட்டுமான நிறுவனத்தில் மேற்பார்வையாளராக பணி புரிந்து வருவதாகவும் , தான் பணிபுரியும் கட்டுமான நிறுவனம் , பெருநகர சென்னை மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் , தண்டையார் பேட்டை பகுதியில் மழைநீர் வடிகால்வாய் அமைக்கும் பணி மேற்கொண்டு வருவதாகவும் , இதற்கான கட்டுமான பணிக்காக தண்டையார்பேட்டை , சுனாமி குடியிருப்பில் உள்ள காலி இடத்தில் வைத்திருந்த சுமார் 75 கிலோ இரும்பு சுருள்கள் மற்றும் சுமார் 150 கிலோ எடை கொண்ட இரும்பு கம்பிகள் திருடு போயிருப்பதாக குறிப்பிட்டிருந்தார்.
இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். H-3 தண்டையார்பேட்டை காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் சம்பவ இடத்தில் விசாரணை செய்து , மேற்படி இரும்பு பொருட்களை திருடிய தண்டையார்பேட்டை சுனாமி குடியிருப்பு பகுதியை சேர்ந்த ராமு (வயது 49 ) என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து மேற்படி இடத்திலிருந்து திருடிய சுமார் 75 கிலோ எடை கொண்ட இரும்பு சுருள்கள் மீட்கப்பட்டது.
விசாரணையில் கைது செய்யப்பட்ட எதிரி ராமு மீது ஏற்கனவே ஒரு குட்கா வழக்கு உள்ளது தெரிய வந்தது.
கைது செய்யப்பட்ட எதிரி ராமு விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.





















