பணத்தை திருப்பித்தராத காதலன்..! 2வது காதலனை வைத்து துண்டு, துண்டாக வெட்டிய காதலி..!
சென்னையில் கொடுத்த பணத்தை திருப்பித்தர மறுத்த காதலனை, மற்றொரு காதலனுடன் சேர்ந்து கொன்று துண்டு, துண்டாக வெட்டிய பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை, பூந்தமல்லியை அடுத்து அமைந்துள்ளது பாரிவாக்கம். இந்த பகுதியில் இருந்து கன்னப்பாளையம் செல்லும் வழியில் தலை மற்றும் கைகள் இல்லாமல் ஆணின் சடலம் கிடந்துள்ளது. இதைக்கண்ட சிலர் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். தலை மற்றும் கைகள் இல்லாத சடலத்தை கைப்பற்றிய திருவேற்காடு போலீசார் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
போலீசார் விசாரணையில் தலை மற்றும் கைகள் இல்லாமல் சடலமாக கிடந்தவர் ஆட்டோ டிரைவர் சிராஜூதின்( வயது 32) என்று தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் சிராஜூதினை பற்றி விசாரித்தபோது அவர் ஏற்கனவே கொலை வழக்கில் சிறைக்கு சென்றவர் என்றும், அவருடன் அவரது காதலி ஜூனத் என்பவரும் சிறைக்கு சென்றது தெரியவந்தது.
இதையடுத்து, சிராஜூதினின் கள்ளக்காதலி ஜூனத்திடம் போலீசார் விசாரணையில் ஈடுபட்டனர். போலீசார் விசாரணையில் ஜூனத் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்துள்ளார். மேலும், சிராஜூதின் தன்னுடைய ஆட்டோவில் கடைசியாக ஜூனத்தை பார்க்கத்தான் வந்துள்ளார் என்று தெரியவந்துள்ளது. இதையடுத்து, போலீசார் ஜூனத்திடம் விசாரணையை தீவிரப்படுத்தினர். போலீசாரின் விசாரணையில் தன்னுடைய காதலன் மகேஷ் என்பவருடன் சேர்ந்து சிராஜூதினை கொலை செய்ததை ஜூனத் ஒப்புக்கொண்டார்.
கொலை வழக்கில் இருந்து ஜாமீனில் வெளியே வந்த பிறகு சிராஜூதின் ஜூனத்திடம் அதிகளவில் பணம் வாங்கியுள்ளார். இந்த நிலையில், ஜூனத்திற்கு கடந்த சில வாரங்களாக உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. அப்போது, ஜூனத் சிகிச்சைக்காக பணத்தை திருப்பிக் கேட்டபோது சிராஜூதின் பணத்தை தராமல் இழுத்தடித்துள்ளார்.
ஜூனத் சிராஜூதினுடன் பழகிய காலகட்டத்தில் அந்த பகுதியில் தள்ளுவண்டியில் டிபன் கடை நடத்தி வந்த மகேஷ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியுள்ளது. சிராஜூதின் பணத்தை தராமல் இழுத்தடிப்பதால் மகேஷூம், ஜூனத்தும் சிராஜூதினை கொலை செய்ய திட்டமிட்டனர். இதன்படி, சம்பவத்தன்று சிராஜூதினும், மகேஷூம் ஒன்றாக மது அருந்தியுள்ளனர்.
அப்போது, ஜூனத்தின் வீட்டிற்கு சிராஜூதினும், மகேஷூம் ஒன்றாக சென்றுள்ளனர். அங்கே சிராஜூதின் ஜூனத்தின் மகள்களிடம் தவறாக நடக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதில், மகேஷ் சிராஜூதினை சரமாரியாக தாக்கியுள்ளார். இதில், சம்பவ இடத்திலே சிராஜூதின் உயிரிழந்துள்ளார். போலீசாரிடம் சிக்காமல் இருப்பதற்காக ஜூனத்தும், மகேஷூம் சிராஜூதின் உடலை துண்டு, துண்டாக வெட்டி எரிக்க முடிவு செய்துள்ளனர்.
மகேஷ் தான் வாங்கி வைத்திருந்த கத்தியால் சிராஜூதினின் தலை மற்றும் இரண்டு கைகளையும் துண்டு, துண்டாக வெட்டியுள்ளார். பின்னர், மகேஷ் தனது பைக்கில் வெட்டப்பட்ட உடல் பாகங்களை திருமழிசை பகுதியில் தீ வைத்து எரித்துள்ளார். சிராஜூதின் உடலை கன்னப்பாளையம் பகுதியில் உள்ள குப்பை மேட்டில் வீசி தீ வைத்து எரித்துள்ளார். ஆட்டோவின் நம்பரை அழித்துவிட்டு ஆவடியில் உள்ள ஒரு பகுதியில் விட்டுச்சென்றுள்ளார்.
கொலையாளிகளை கண்டுபிடித்தாலும் சிராஜூதினின் தலை மற்றும் கைகள் இன்னும் கிடைக்காததால் போலீசார் தடுமாறி வருகின்றனர். சிராஜூதினும், ஜூனத்தும் இணைந்து கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு விருகம்பாக்கத்தில் துணை நடிகை ஒருவரை நகைக்காக ஆசைப்பட்டு கொலை செய்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மகேஷ் மற்றும் ஜூனத்தை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்