திருவாரூரில் வங்கி ஊழியர்கள் 2நாள் வேலை நிறுத்தம் - வங்கிகளை தனியார்மயம் ஆக்குவதற்கு எதிர்ப்பு
வங்கிகள் தனியார் மயமாக்கப்பட்ட தனிநபருக்கு மட்டுமே பலளிக்குமே தவிர, பொது மக்களுக்கு பயன் தராது என வங்கி ஊழியர்கள் கருத்து
மத்திய அரசு நடப்பு குளிர்கால நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அறிமுகப்படுத்த இருக்கும் வங்கிகள் தனியார்மயம் மசோதாவை கைவிட வேண்டும், அரசு பொதுத்துறை வங்கிகளை தனியாருக்கு தாரைவார்க்க கூடாது என்கிற கோரிக்கைகளை வலியுறுத்தி இன்றும் நாளையும் இரண்டு நாள் நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்க கூடாது, சீர்திருத்தம் என்ற பெயரில் வங்கி தொழிலை முடக்கக் கூடாது, வங்கிகள் சட்டத் திருத்த மசோதாவை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ந்து வங்கி ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அரசு கொண்டு வரும் இந்த சட்டத்தின் காரணமாக 10 லட்சத்திற்கும் மேற்பட்ட வங்கி ஊழியர்கள் பாதிக்கப்படுவார்கள் என கூறப்படுகிறது. குறிப்பாக மத்திய அரசு கொண்டு வரும் இந்த சட்டத்தினால் குக்கிராமங்களுக்கு வங்கி திட்டங்கள் சென்றடைய வாய்ப்பு மிகக் குறைவு, லாப நோக்கம் இல்லாமல் வங்கியின் திட்டங்களை கொண்டு செல்வது அரசு நிறுவனமும், பொதுத்துறை நிறுவனமும் தான். அதே நேரத்தில் பொதுத்துறை வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகள் அனைத்தும் மக்களுக்காக சேவை செய்வதற்கான வாய்ப்புகள் இருக்காது. அது மட்டுமன்றி பயிர் காப்பீடு திட்டம், மாணவர்களுக்கான கல்விக் கடன் உள்ளிட்ட திட்டங்கள் அனைத்தும் ரத்து செய்வதற்கான வாய்ப்புகள் இருக்கும்.
மேலும் பொதுத்துறை வங்கிகள் நஷ்டத்தில் இயங்குகிறது என்ற பெயரில் தற்போது மத்திய அரசு இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது. அதே நேரத்தில் வாராக்கடன் கொடுப்பதெல்லாம் பெரு முதலாளிகளுக்கு அரசு கொடுக்க சொல்வதின் மூலமாக தான் வங்கிகள் வாராக் கடன் கொடுக்கப்படுகிறது. ஆகையால் இது தவறான முடிவு. வாராக் கடனை வசூலிக்க சரியான வரைமுறைகள் வகுக்கப்படவில்லை. அந்த அதிகாரம் கொடுக்கும் பட்சத்தில் இது சரி செய்யப்படும் என வங்கி ஊழியர்கள் தெரிவிக்கின்றனர். வங்கிகள் தனியார் மயமாக்கப்பட்ட தனிநபருக்கு மட்டுமே பலனளிக்குமே தவிர, பொது மக்களுக்கு பயன் தராது. மேலும் இந்த இரண்டு நாள் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தின் காரணமாக நாடு முழுவதும் பணப் பரிவர்த்தனைகள் முழுவதுமாக நிறுத்தப்படுகிறது. இதனால் அரசுக்கு பெரிய அளவில் பொருளாதார பாதிப்பு ஏற்படும். உடனடியாக வங்கி ஊழியர்களின் கோரிக்கைகளை ஏற்று மத்திய அரசு உடனடியாக வங்கிகளை தனியார் மயமாக்கும் சட்டத்தை நிறுத்த வேண்டும். இல்லை என்றால் வங்கி ஊழியர்களின் போராட்டம் தொடர்ந்து நடைபெறும் என தெரிவித்து முதல்கட்டமாக இந்த 2 நாள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக வங்கி ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக திருவாரூர் மாவட்டத்தில் 20க்கும் மேற்பட்ட வங்கி கிளைகள் இன்று மூடப் பட்டிருப்பதால் சிறு குறு தொழிலில் ஈடுபட்டுள்ள தொழில் முனைவோர் மிகப் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். அதுமட்டுமின்றி கிராமப்புறங்களிலிருந்து வங்கிக்கு பணம் செலுத்தவும், பணம் எடுக்கவும் வரும் நபர்கள் வங்கிகள் மூடி உள்ளதால் மிகப் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆகவே மத்திய அரசு உடனடியாக வங்கி ஊழியர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி உரிய தீர்வு காண வேண்டுமென பொதுமக்களும் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.