Rathnam Movie Review: விறுவிறுப்பாக கெட் அப்பை மாற்றிய விஷால்; தாமிரபரணி அளவு வொர்த்தா? ரத்னம் படத்தின் விமர்சனம்!
Rathnam Movie Review in Tamil: ஸ்டோன் பெஞ்ச் புரொடெக்ஷன் தயாரிப்பில் இயக்குநர் ஹரி இயக்கி விஷால் நடிப்பில் வெளியாகியுள்ள ரத்னம் திரைப்படத்தின் விமர்சனத்தை இங்கு காணலாம்.
Hari
Vishal, Priya Bhavani Shankar, Samuthirakani, Yogibabu and Gautham Vasudev Menon,
Amazon Prime
ஸ்டோன் பெஞ்ச் புரொடெக்ஷன் தயாரிப்பில் இயக்குநர் ஹரி இயக்கத்தில் நடிகர்கள் விஷால், சமுத்திரக்கனி, ப்ரியா பவானி சங்கர், யோகி பாபு, கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட பல்வேறு உச்சநட்சத்திரங்கள் நடிப்பில் முழுக்க முழுக்க ஆக்ஷன் திரைப்படமாக வெளியாகியுள்ளது ரத்னம்.
படத்தின் கதை
சிறுவயதில் தாயை இழந்த பின்னர், தன்னை அரவணைத்த சமுத்திரக்கனியை காப்பாற்றுவதற்காக கொலை செய்துவிட்டு சிறுவர் சீர்திருத்தப்பள்ளிக்குச் செல்கின்றார் விஷால். இந்த இடைவெளியில் எம்.எல்.ஏ.,வாக சமுத்திரக்கனி ஆகிவிடுகின்றார். அதைத்தொடர்ந்தும் சமுத்திரக்கனி அரவணைப்பால் வளரும் விஷால், சமுத்திரக்கனியின் அடியாளாக இருக்கின்றார். நற்குணம் கொண்ட அரசியல்வாதியிடம் அடியாளாக இருக்கும் விஷால், “ கொள்கைக்காக கொலையே செய்வேன்” என்ற மனநிலையில்தான் இருக்கின்றார்.
இப்படியான நிலையில் கதாநாயகி ப்ரியா பவானி சங்கரை விஷால், சந்திக்கின்றார். அப்போது வில்லன்கள் கதாநாயகியை தாக்குகின்றனர். அதிலிருந்து நாயகியைக் காப்பாற்றும் விஷால், வில்லன்களை எப்படி சமாளிக்கின்றார். கதாநாயகியை வில்லன்கள் தாக்குவதற்கு காரணம் என்ன? இறுதியில் என்ன நடந்தது என்பது மீதிக் கதை.
படத்தின் பலம்
வேலூர் மற்றும் ஆந்திராவை மைய்யமாக கொண்டு கதை நகர்கின்றது. வேலூர் தமிழ் பேசி ரசிக்கவும் செய்கின்றது படக்குழு. பரபரப்பாக நகரும் ஹரியின் படத்திற்கு பலம் என்றால் அது படத்தின் திரைக்கதையாக இருக்கும், ஆனால் இந்த படத்தில் திரைக்கதையை விடவும் மிகவும் பலமானது என்றால் சுகுமாரின் ஒளிப்பதிவு. அதேபோல் படத்தொகுப்பும் கதைக்கு பெரும் தூணாக அமைந்துள்ளது. படம் முழுக்க வரும் கனல் கண்ணன், திலீப் சுப்புராயனின் சண்டைக்காட்சிகள் பில்டப் காட்சிகளாக இல்லாமல், படத்தின் கதையோட்டத்திற்கு ஏற்றவாறே, அமைந்துள்ளது. படத்திற்கு இன்னொரு பலம் என்றால் அது தேவிஸ்ரீ பிரசாந்தின் இசை. படத்தில் இரண்டு பாடல்கள் மட்டும் இருந்தாலும் பின்னணி இசையில் ஸ்கோர் செய்துள்ளார் தேவிஸ்ரீ பிரசாந்த்.
மைனஸ்
திரைக்கதையில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம். முழுக்க முழுக்க ஆக்ஷன் படம் எடுப்பதில் குறிக்கோளாக இருந்து, திரைக்கதையில் கோட்டைவிட்டுள்ளார் ஹரி. நாளுக்கு நாள் வளர்ந்து வரும், புது ட்ரெண்டை உருவாக்கும் பல படங்கள் தொடர்ந்து வெளியாகிவரும் காலகட்டத்திலும், வம்படியாக தனது திரைக்கதை பாணியை மாற்றிக்கொள்ளமாட்டேன் என ரத்னத்தை இயக்கியுள்ளார் ஹரி. ப்ரீ க்ளைமேக்ஸில் வரும் ஒரு சில காட்சிகள் வலிந்து திணத்துது போல் உள்ளது. படம் பார்க்கும் ரசிகர்களுக்கு வலிந்து திணித்த காட்சிகள் இல்லை என்றாலும் கதையோட்டம் புரிந்திருக்கும். ஆனால், ஹரி வம்படியாக காட்சிகளை திணித்துள்ளார். படம் முழுக்க வரும் வெட்டு, குத்து, ரத்தம் என ஒரு கட்டத்தில் சலிப்பையும் ஏற்படுத்துகின்றது. கதை நகர்வதற்கு காரணமாக நாயகி ப்ரியா பவானி சங்கர் இருந்தாலும், கதையில் அவரது கதாப்பாத்திரம் ரசிகர்கள் மனதில் நிலைத்து நிற்கும்படியாக இல்லை.
மொத்தத்தில் படம் எப்படி
ஏற்கும்படியான ஒன் - லைன், கொஞ்சம் சொதப்பலான திரைக்கதை, ரசிக்கும்படியாக ஒளிப்பதிவு, பொருத்தமான பின்னணி இசை என ரத்னம் ஏற்கனவே தமிழ் சினிமாவில் வெளியான ஓ.கே ரக படங்களில் இணைவதற்கு அனைத்து தகுதிகளையும் பெற்றுள்ளது.