Marakkar Review: 3 மணிநேரம்... அமர்ந்து பார்க்கும் படியான படமா மரைக்காயர்? அலசி ஆராயும் நச் விமர்சனம்!
Marakar Review in Tamil: 2019-ம் ஆண்டு முதல் ரிலீஸுக்காக காத்திருந்து, ஓடிடியில் நேரடியாக வெளியாக இருக்கிறது என அறிவிக்கப்பட்டு பின்பு ஒரு வழியாக தியேட்டரில் வெளியாகி இருக்கிறது மரைக்காயர்.
Priyadharshan
Mohanlal, Suhasini, Nedumudi venu, Prabhu, Arjun, Ashok Selvan, Kalyani Priyadharshan, Pranav Mohanlal
2021-ம் ஆண்டில் பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட பெரிய பட்ஜெட் படங்களில் ஒன்று மரைக்காயர்: அரபிக் கடலின் சிங்கம். இந்த ஆண்டு வழங்கப்பட்ட திரைப்படங்களுக்கான தேசிய விருதுகளில், சிறந்த திரைப்படம், சிறந்த ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ், சிறந்த ஆடை வடிவமைப்பு போன்ற பிரிவுகளில் மூன்று விருதுகளை வென்றிருக்கிறது இத்திரைப்படம். 2019-ம் ஆண்டு முதல் ரிலீஸுக்காக காத்திருந்து, ஓடிடியில் நேரடியாக வெளியாக இருக்கிறது என அறிவிக்கப்பட்டு பின்பு ஒரு வழியாக தியேட்டரில் வெளியாகி இருக்கிறது.
16-ம் நூற்றாண்டில் கேரளாவில் போர்ச்சுகீசிய படைகளை எதிர்த்து போரிட்ட குஞ்சாலி மரைக்காயரின் கதைதான் இந்த மரைக்காயர்: அரபிக் கடலின் சிங்கம். பிறந்தது முதலே அம்மாவின் பிள்ளையாக வளரும் குஞ்சாலி மரைக்காயர், மக்களின் மன்னனாக, சாமுத்திரி சாம்ராஜ்யத்தின் கடற்படை தளபதியாக உயர்ந்து, வெள்ளையர்களை எதிர்த்து போரிட்டு உயிர் தியாகம் செய்த வரலாற்று கதையை பேசுகிறது இப்படம்.
இளம் வயது குஞ்சாலி மரைக்காயராக நடித்திருக்கும் பிரணாவ், மோகன்லாலின் நிஜ மகன். முகச்சாயல் ஒத்து போவதால் நம்பும்படியாக இருக்கிறார். குஞ்சாலியின் அம்மாவாக சுஹாசினி. தனது ஒரே மகனை மிகவும் பாசம் ஊட்டி வளர்க்கிறார். அவருக்கு திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. திருமணத்திற்கு முந்தைய நாள், போச்சுகீசியர்களால் குஞ்சாலியின் வாழ்க்கை கேள்விக்குறி ஆகிறது. அதில் இருந்து தப்பித்து மறைந்து வாழும் குஞ்சாலி, மக்கள் சேவகனாய், சாமுத்திரி ராஜ்யத்தின் கடற்படை தளபதியாக உயர்கிறார்.
சாமுத்திரி ராஜ்யத்தில் நிறைய கதாப்பாத்திரங்கள். மன்னனாக நெடுமுடி வேணு, ராணுவ தளபதியாக ஹரீஷ் பெராடி, அவரது மகன்களாக அர்ஜூன், அஷோக் செல்வன், குறுநில மன்னர்களாக முகேஷ், சுனில் ஷெட்டி, முகேஷின் மகள் ஆர்ஷாவாக கீர்த்தி சுரேஷ் என அத்தனை கதாப்பாத்திரங்களில் அர்ஜூனை தவிர மனதில் நிற்கும்படியான கதாப்பாத்திரங்கள் எழுதப்படவில்லை. அர்ஜூனும், தனது சிறந்த நடிப்பாலும், ஒரு முக்கிய காட்சியில் இடம் பெற்றிருந்தாலும் மட்டுமே படம் முடிந்தும் நினைவில் நிற்கிறார்.
சாமுத்திரி ராஜ்யத்தைச் சேர்ந்த ஆர்ஷாவுக்கும், குஞ்சாலியின் பாதுகாவலன் சின்னாலிக்கும் காதல் ஏற்படுகிறது. அதனால் ஏற்படும் விளைவுகளும், வெள்ளையர்களிடம் இருந்து கேரள மண்ணையும், மக்களையும் குஞ்சாலி காப்பற்றினாரா, போரில் என்ன நடந்தது என்பதே மீதிக்கதை.
இழுவையான முதல் பாதி, அடுத்து நடக்கப்போவது என்ன என யூகிக்கும் கதைக்களம் ஆகியவை படத்தின் மைனஸ். மோகன்லால், பிரபு, சுஹாசனி, நெடுமுடி வேணு மற்றும் சில முன்னணி நடிகர்களின் தேர்ந்த நடிப்பு படத்திற்கு மிகப்பெரிய ப்ளஸ். அவர்களுக்கு ஏற்ற காஸ்ட்யூம், செட், ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் மூலம் போர் களத்தை நம் கண் முன்னே கொண்டு வந்திருக்கின்றனர். எனினும், வரலாற்று படமாகவே இருந்தாலும் ஏற்றுக்கொள்ள முடியாத பெண்ணும் - மண்ணும் - ஆம்பள போன்ற வழக்கமான வசங்கள், இன்னும் பல இடங்களில் வரும் நீண்ட நீண்ட வசனங்கள் படத்தை ‘போர்’ என சொல்ல வைக்கிறது.
திரைப்படத்தின் மொத்த ரன் - டைம் 3 மணி நேரம். படத்தின் முழு நேரத்தை இன்னும் குறைத்திருக்கலாம். தியேட்டரில் வெளியாகி இருப்பதால், நேரம் இருப்பின், வரலாற்று திரைப்படங்களை காண ஆர்வம் இருப்பின் சலிக்காமல் ஒரு முறை பார்த்து வரலாம் இந்த மரைக்காயரை!
ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்