Andhagan Review: கம்பேக் கொடுத்தாரா டாப் ஸ்டார்! எப்படி இருக்கு பிரசாந்தின் அந்தகன்? முழு விமர்சனம் இங்கே!
Andhagan Review Tamil: பிரசாந்த் நடித்து இன்று திரையரங்குகளில் வெளியாகி இருக்கும் அந்தகன் படத்தின் விமர்சனத்தைப் பார்க்கலாம்
Thiyagarajan
Prashanth , Simran, Priya Anand , Karthik , Samuthirakani ,
Theatrical Release
அந்தகன்
ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் இந்தியில் வெளியான அந்தாதுன் படத்தின் தமிழ் ரீமேக்காக உருவாகியிருக்கும் படம் அந்தகன். பிரசாந்த் நாயகனாக நடித்துள்ள இப்படத்தில் சிம்ரன் , பிரியா ஆனந்த் , சமுத்திரகனி , கார்த்திக் , வனிதா விஜயகுமார் , ஊர்வசி , யோகிபாபு உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ளார்கள்.
பிரசாந்தின் 50 ஆவது படமாக உருவாகி இருக்கும் அந்தகன் படத்தின் முழு விமர்சனம் இதோ..
அந்தகன் கதை
பியானோ இசைக் கலைஞரான பிரசாந்த் ஒரு பரிசோதனை முயற்சியாக பார்வை இல்லாதவராக நடிக்கிறார். அவரை நிஜமாகவே பார்வை இல்லாதவர் என நினைத்துக் கொள்ளும் பிரியா ஆனந்த் தனது கஃபேவில் பியானோ வாசிக்கும் வேலை வாங்கி தருகிறார். பிரசாந்த் பியானோ வாசிப்பதை பார்த்து தனது திருமண நாளில் தன் மனைவிக்காக பிரசாந்தை பியானோ வாசிக்க சொல்கிறார் நடிகர் கார்த்திக். கார்த்திக் வீட்டிற்கு சென்றபோது அவரது மனைவி சிம்ரன் தனது காதலனான சமுத்திரகனியுடன் இருப்பதை பார்த்து விடுகிறார். இதனால் சிம்ரன் கார்த்திக்கை போட்டுத்தள்ளுகிறார்.
இதை பிரசாந்த் பார்த்த பிரசாந்த் கண் தெரியாதவர் போலவே அவர்களிடம் இருந்து தப்பிக்கிறார். ஆனால் பின் பிரசாந்திற்கு கண் தெரியும் என்கிற உண்மை தெரிய வர அவரையும் கொலை செய்ய திட்டமிடுகிறார்கள் சிம்ரனும் அவர் காதலனாக வரும் சமுத்திரகனியும். இவர்களிடம் இருந்து பிரசாந்த் எப்படி தப்பிக்கிறார் என்பதே அந்தகன் அல்லது அந்தாதுன் ஆகிய இரு படத்தின் கதையும்.
ரீமேக் எப்படி
இந்தியில் வெளியான அந்தாதுன் படத்தின் சிறப்பம்சமே அதன் திரைக்கதை நேர்த்திதான். எதிர்பாராமல் நடக்கும் அடுத்தடுத்த நிகழ்வுகள் , ஒரு பிரச்சனை முடிவதற்கு முன்பே வரும் இன்னொரு பிரச்சனை , யூகிக்க முடியாத கதாப்பாத்திரங்களின் இயல்புகள், திடீர் திருப்பங்கள் என முழு பேக்கேஜான ஒரு படம்தான் அந்தாதுன். இந்த மாதிரியான ஒரு படத்தை ரீமேக் செய்வதில் இருக்கும் சாதகமான அம்சம் என்னவென்றால் எதையும் மாற்றாமல் அப்படியே இருப்பதை எடுத்து வைத்தாலே படம் வொர்க் அவுட் ஆகிவிடும்.
இயக்குநர் தியாகராஜன் செய்திருப்பதும் அதுதான். தொடக்கத்தில் வரும் முயல்காட்சி முதல் கடைசியில் கோக் கேனை தட்டிவிடும் காட்சிவரை எந்த மாற்றமும் இல்லாமல் அந்தகன் எடுக்கப்பட்டிருப்பதால் இந்தியில் படம் பார்க்காதவர்களுக்கு சுவாரஸ்யமான ஒரு அனுபவமாக இருக்கும்.
பிரசாந்த் தொடங்கி கே.எஸ்.ரவிகுமார் வரை முழுவதும் நமக்கு தெரிந்த நடிகர்கள் என்பதால் நடிப்பில் குறையில்லாமல் படம் போகிறது.
நீண்ட நாட்களுக்குப் பிறகு திரையில் தோன்றினாலும் பிரசாந்த் நடிப்பில் மெச்சுரிட்டிக்கு பஞ்சமில்லை. பிரசாந்திற்கு அடுத்தபடியாக முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் நடிகை சிம்ரன் , பிரியா ஆனந்த் தங்கள் பங்கை சரியாக செய்திருக்கிறார்கள். இரண்டாம் பாதியில் ஊர்வசி மற்றும் யோகிபாபுவின் கெமிஸ்ட்ரி ஹ்யூமர் இல்லாத குறையை போக்குகிறது.
அந்தாதுன் படத்திற்கும் இப்படத்திற்கும் இருக்கும் ஒரு வித்தியாசம் என்னவென்றால் திரைக்கதையில் இருக்கும் தளர்வு. அந்தாதுன் படத்தின் மிகப்பெரிய பலம் என்றால் திரைக்கதையில் உள்ள இறுக்கம். தேவையற்ற காட்சிகள் இல்லாததால் அடுத்து என்ன என்கிற ஆர்வத்தை பார்வையாளர்களுக்கு கொடுத்துக்கொண்டே இருக்கும். அந்தகனைப் பொறுத்தவரை அந்த இறுக்கம் சற்று தளர்ந்துள்ளது என்றுதான் சொல்ல வேண்டும். ஒவ்வொரு காட்சியிலும் இருக்கும் செட் பிராபர்ட்டி முதல் சின்ன சின்ன டீடெயிலைக் கூட விட்டுவைக்காமல் எல்லாவற்றுக்கும் தனித்தனியாக ஷாட் வைப்பது சற்று சலிப்பை ஏற்படுத்துகிறது. அப்பா சைஸ் சட்டையை மகன் போட்டுக்கொண்டது போல் லொடலொடவென்று சில இடங்கள் இருப்பதால் அதே த்ரில் நமக்கு மிஸ் ஆவது போல் தோன்றுகிறது. மற்றபடி அந்தாதுன் பார்க்காதவர்களுக்கு இப்படம் ஹிட் தான். அதிலும் பிரசாந்த் ரசிகர்களுக்கு சொல்லவே வேண்டாம்.
பின்னணி இசை படத்திற்கு கைகொடுக்கிறது. ஆனால் பாடல்கள் பெரியவில் தாக்கம் ஏற்படுத்துவதில்லை.
தனது ஐம்பதாவது படமாக நடிகர் பிரசாந்த் மாஸான கம்பேக் படமாக அமைய வேண்டும் என்பதற்காக அறிமுக காட்சி , டூயட் என எதுவும் வைக்கவில்லை. கதைக்கு மரியாதை கொடுத்து தன்னை அதில் பொறுத்திக் கொள்ள எடுத்திருக்கும் அவரது முயற்சிக்கு பாராட்டுக்கள். மொத்தத்தில் அந்தகன் ஒரு அழகிய த்ரில் மூவி.