Incendies 2010 Movie Review | அம்மா கொடுக்கும் டாஸ்க்.. வெளிவரும் அதிர்ச்சிகள் - ட்விஸ்டுக்கு பெயர் போன ''இன்செண்டீஸ்'
இந்தப் படத்தின் க்ளைமேக்ஸை உங்களால் உடனே நம்பிவிட முடியாது. இப்படியுமா நடக்கும்? என்று தோன்றலாம். ஆனால் அந்த முடிவு சாத்தியமில்லாத ஒன்றல்ல
Denis Villeneuve
Lubna Azabal Mélissa Mustafa Kamel
இப்படியுமா நடக்கும் என்ற ஒரு கதையை உலக சினிமாக்கள் சில காட்சிப்படுத்தும் அப்படியான ஒரு ப்ரெஞ்ச் படம் தான் 'இன்செண்டீஸ்'. 'இன்செண்டீஸ்' என்றால் நெருப்பு என்று பொருள். இந்தப் படத்தின் க்ளைமேக்ஸை உங்களால் உடனே நம்பிவிட முடியாது. இப்படியுமா நடக்கும்? என்று தோன்றலாம். ஆனால் அந்த முடிவு சாத்தியமில்லாத ஒன்றல்ல. அதற்கான வாய்ப்புகள் உண்டு என்பதே ரியாலிட்டி. அந்த மிகப்பெரிய க்ளைமேக்ஸ் ட்விஸ்டுக்காகத்தான் முழு படமுமே பயணிக்கும். இந்தப்படத்தை இயக்கியவர் டெனீஷ் விலியூனிவ். கனேடிய எழுத்தாளர் 'வஜ்டி மெளவாட்' எழுதிய 'இன்செண்டீஸ்' நாவலை படமாக எடுத்தார் இயக்குநர்.
ஆஸ்திரேலியா, அமெரிக்கா என பல நாடுகளில் பல விருதுகளை வாங்கிக்குவித்துள்ளது இந்தப்படம். வெளிநாட்டு திரைப்பட பிரிவில் போட்டியிட்டு பல விருதுகளை சொந்தமாக்கியுள்ளது.
இப்போது படத்தின் ஒருவரிக்கதைக்கு போவோம். இறந்துபோன ஒரு தாய் தன் மகனுக்கும், மகளுக்கும் ஒரு உயில் எழுதிக்கொடுத்துள்ளார். அதில் இருவருக்குமே தனித்தனி கடிதம் உள்ளது. ஒவ்வொரு கடிதத்திலும் இருவருக்கும் ஒரு டாஸ்க் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த டாஸ்கை முடித்துவிட்டால் மூன்றாவதாக ஒரு கடிதம் உங்களிடம் வரும் என சொல்லப்படுகிறது. மகனும், மகளும் அம்மா கூறிய டாஸ்கை முடிப்பதற்காக பல இடங்களுக்கு பயணம் செய்கிறார்கள். அந்த பயணத்தில் அவர்களின் அம்மாவின் இளமைக்காலம் குறித்து பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவருகிறது. நீண்ட தேடுதலுக்கு பிறகு அந்த டாஸ்கை அவர்கள் முடிக்கும் போது அவர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துவிடுகின்றனர். மிகப்பெரிய ஒரு ட்விஸ்டை டாஸ்கின் முடிவாக முடிக்கிறார் இயக்குநர்.
அம்மாவாக நடித்துள்ள லுப்னா அழபால் சரியான தேர்வு. கண்ணில் சோகத்தையும், வலியையும் படம் முழுக்க கடத்தியிருப்பார். மகளாக நடித்திருக்கும் மெலிசா படத்தின் இரண்டாம் நாயகி என்றே சொல்லலாம். அம்மாவுக்கு பின்னால் என்னதான் இருக்கிறது என அவர் கதையை தேடி எதிர்பார்ப்புடன் அலையும் பாசக்கார மகளாகவே அவர் வாழ்ந்திருப்பார். டாஸ்கை தேடி மகள் செல்லும் நிகழ்காலம், அம்மாவின் இறந்தகாலம் என படம் இருவேறு கட்டங்களாக மாறி மாறி வருகிறது. மகளின் தேடலுக்கான விடை பார்ப்பவர்களின் கண்களுக்கு காட்சியாக விரிகிறது.
2010ம் ஆண்டு வெளியான 'இன்செண்டீஸ்' திரைப்படத்தில் பல முக்கியமான விஷயங்கள் கடந்து போகின்றன. மதச்சண்டைகள், கோபம், சிறைச்சாலை கொடுமைகள், காதல் எதிர்ப்பு என பல விஷயங்களை பேசி தன்னுடைய போக்கில் சரியாக பயணிக்கிறது படம். அடுத்து என்ன? அடுத்த என்ன? என்ற எதிர்பார்ப்புதான் படத்தின் வெற்றி. அம்மா கொடுத்த டாஸ்கை முடிக்க மகளோடும், மகனோடும் சேர்ந்து நாமும் பயணிப்பதை போன்ற உணர்வு ஏற்படுவதை தவிர்க்க முடியாது. டாஸ்கின் முடிவு இப்படியாகத்தான் முடிய வேண்டுமா என்று நம்மை சில நிமிடங்கள் அமைதியாக யோசிக்க வைக்கும் க்ளைமேக்ஸோடு முடிந்துவிடுகிறது படம்.
கோபம் ஏற்படுத்தும் சிக்கல்கள் குறித்தும், சில நிமிட கோபத்தின் முடிவுக்கு எவ்வளவு பெரிய விலை கொடுக்க வேண்டிவரும்? என்று அழுத்தமாக பதிவு செய்கிறது 'இன்செண்டீஸ்'. பரபரப்பான தேடல் சினிமாவை ரசிக்கும் ரசிகர்களுக்கு 'இன்செண்டீஸ்' ஒரு நல்ல தேர்வு. இந்தப்படத்தின் க்ளைமேக்ஸ் ட்விஸ்ட் நிச்சயம் நீங்கள் எதிர்பார்க்காத ஒன்றாகவே இருக்கும், அதற்கு நாங்கள் கியாரண்டி. 'இன்செண்டீஸ்' பார்க்க வேண்டுமென்றால், அமேசான் ப்ரைம் செல்லுங்கள்.
மனதைப் பிளக்கும் 'கேபெர்னம்' - தவறவிடவேகூடாத ஒரு உலக சினிமா!