ஆகாயத்தாமரையில் இருந்து வீட்டு உபயோக பொருட்கள் - தூத்துக்குடி மகளிர் குழுவின் சாதனை
ஆகாயத்தாமரையில் மதிப்பு கூட்டுப் பொருள்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் கண்காட்சி அமைக்கப்படும். பொருள்களை சந்தைப்படுத்தவும் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது
ஆகாயத்தாமரையில் மதிப்பு கூட்டுப் பொருள்கள் தயாரிக்கும் பணியை தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிப் பகுதிகளிலும் விரிவுபடுத்த ஆலோசிக்கப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியா் செந்தில் ராஜ் கூறியுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் மேலஆத்தூா் மற்றும் கொட்டாரக்குறிச்சி ஊராட்சிக்குள்பட்ட பகுதிகளில் தயாரிக்கப்படும் ஆகாயத்தாமரை மதிப்பு கூட்டுப் பொருள்களை மாவட்ட ஆட்சியா் செந்தில் ராஜ் ஆய்வு மேற்கொண்டார். பின்னா் செய்தியாளா்களிடம் கூறும்போது, கிராமப் புறங்களில் ஏழை, எளிய மகளிர் மற்றும் சுய உதவிக்குழுவினரின் குடும்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டும், நீா் ஆதாரத்திற்கு கேடு விளைவிக்கும் ஆகாயத் தாமரையினை அகற்றிடும் விதமாகவும் ஆகாயத் தாமரையில் இருந்து மதிப்பு கூட்டப்பட்ட பொருள்கள் தயாரிக்கும் பயிற்சியினை ஐதராபாத்தை சோ்ந்த கிரியேட்டிவ் பீ நிறுவனா் பீனா வாயிலாக ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றியம் மேலஆத்தூர் ஊராட்சி, வைகுண்டம் ஊராட்சி ஒன்றியம் கொட்டாரக்குறிச்சி ஊராட்சி லெட்சுமிபுரம் கிராமம் ஆகிய பகுதிகளில் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.
மேற்கண்ட இரு பகுதிகளில் உள்ள இசேவை மையத்தில் மகளிர் திட்டம் சார்பாக சுய உதவிக்குழு மகளிருக்கு ஆகாயத் தாமரையில் இருந்து மதிப்பு கூட்டப்பட்ட பொருள்கள் தயாரிக்கும் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. இப்பயிற்சியுடன் ஆங்கில பயிற்சியும் வழங்கப்படும். இப்பயிற்சிக்கு தேவையான ஆகாயத் தாமரைகள் ஊராட்சி மன்ற அலுவலகம் சார்பாக வழங்கப்பட்டு வருகிறது. ஆகாயத்தாமரையின் தண்டு பகுதியை நன்றாக கழுவி மூன்று நாட்கள் தண்ணீரில் ஊற வைத்து அடுத்த மூன்று நாட்கள் வெயிலில் காய வைக்கப்படுகிறது ஐந்து முதல் ஆறு நாட்கள் வரை நன்றாக காய்ந்து தண்டுகளில் இருந்து நார்கள் பிரித்தெடுக்கப்படுகிறது நாரிலிருந்து மணி பா்ஸ், கூடைகள், பைகள், அழகு பொருள்கள், சமையலறை பொருள்கள் வைப்பதற்கான உபகரணங்கள், டேபிள் மேட் உள்பட பல்வேறு பொருள்கள் தயாரிக்கப்படுகின்றன.
இப்பொருள்களை சந்தைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக அண்மையில் நெய்தல் திருவிழாவில் கண்காட்சி வைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டுள்ளது. மேலும் இக்கண்காட்சி விரிவடையும் விதமாக மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் கண்காட்சி அமைக்கப்படும். பொருள்களை சந்தைப்படுத்தவும் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இப்பயிற்சியில் இளம்பெண்கள் முதல் , 72 வயது மூதாட்டிவரை பயிற்சி பெற்று வருகின்றனா். இங்கு பயிற்சி பெறும் பெண்கள் மிக உற்சாகத்தோடும், ஆா்வத்தோடும் சுய சிந்தனையில் பல பொருள்களை தயாரித்து வருவது மிகவும் பாராட்டுக்குரியது. இங்கு பயிற்சி பெறும் பெண்கள் சுயமாக இதுபோன்ற தயாரிப்புகளை உருவாக்கும் முழு திறத்தோடும், தன்னால் பிறருக்கு பயிற்சி அளிக்க முடியும் என்ற நம்பிக்கையோடு இருக்கிறார்கள். இப்பயிற்சியானது தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிப் பகுதிகளிலும் விரிவுப்படுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது என்றார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்