முதல்வர் மருந்தகம் தொடங்க ஆசையா? விண்ணப்பிப்பது எப்படி? முழு தகவலும் உள்ளே
தமிழக அரசின் முதல்வர் மருந்தகம் தொடங்க எப்படி விண்ணப்பிக்க வேண்டும்? என்னென்ன தகுதிகள்? என்பதை கீழே விரிவாக காணலாம்.
மருந்தகங்களின் தேவை பொதுமக்களின் அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாக உள்ளது. இதன் காரணமாகவே, நெருக்கடியான காலங்களிலும், கடையடைப்பு காலத்திலும் மெடிக்கல் ஷாப் எனப்படும் மருந்தகங்கள் திறக்கப்பட்டே இருக்கும்.
தமிழக அரசு சார்பில் முதல்வர் மருந்தகம் இயங்கி வருகிறது. மருந்தகங்கள் அமைக்க மருந்தாளுனர் படிப்பை அதாவது ( B Pharm/ D pharm) போன்ற படிப்பை முடித்திருக்க வேண்டும். தற்போது விழுப்புரம் மாவட்டத்தில் முதல்வர் மருந்தகம் அமைக்க விரும்பும் மருந்தாளுனர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
முதல்வர் மருந்தகம்:
விழுப்புரம் மண்டல கூட்டுறவு சங்க இணைப்பதிவாளர் பெரியசாமி இதுதொடர்பாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது, “ முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 15ம் தேதி சுதந்திர தின விழா உரையில் பொதுப்பயர் மருந்துகளையும், பிற மருந்துகளையும் குறைந்த விலையில் பொதுமக்களுக்கு கிடைக்கச் செய்யும் வகையில் முதற்கட்டமாக ஆயிரம் எண்ணிக்கையில் முதல்வர் மருந்தகங்கள் தொடங்கப்படும் என்று அறிவித்தார்.
இதன்படி, முதல்வர் மருந்தகம் அமைக்க விருப்பமுள்ள B.Pharm/ D.Pharm சான்றிதழ் பெற்றவர்கள் அல்லது அவர்களின் ஒப்புதலுடன் தமிழ்நாடு முழுவதும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் முதல்வர் மருந்தகம் அமைக்க www.mudhalvarmarundhagam.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
முதல்வர் மருந்தகம் அமைக்க விருப்பம் உள்ள விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த தொழில் முனைவோர் வரும் 20ம தேதி ( 20.11.2024) வரை இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். “ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிப்பது எப்படி?
- முதல்வர் மருந்தகம் அமைக்க விண்ணப்பிக்க விரும்புவர்களிடம் 110 சதுர அடிக்கு குறையாமல் சொந்த இடமோ அல்லது வாடகை இடமோ இருக்க வேண்டும்.
- சொந்த இடமாக இருந்தால் சொத்து வரி ரசீது, குடிநீர் ரசீது அல்லது மின் இணைப்பு ரசீது ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை விண்ணப்பத்துடன் சமர்ப்பிக்க வேண்டும்.
- வாடகை இடமாக இருந்தால் உரிமையாளரிடம் ஒப்பந்தப் பத்திரம் பெற்று விண்ணப்பத்துடன் இணைத்து விண்ணப்பிக்கலாம்.
மானியம் எப்படி வழங்கப்படும்?
முதல்வர் மருந்தகம் அமைக்க விரும்புபவர்களுக்கு அரசு ரூபாய் 3 லட்சத்தை மானியமாக வழங்கும். அதை ஒரு தவணையை பணமாகவும், மற்றொரு தவணையை மருந்தாகவும் அரசு இந்த மருந்தகம் அமைக்க கூடுதல் நிதி தேவைப்பட்டால் கூட்டுறவு வங்கிகள் மூலம் கடன் பெற்றுக் கொள்ளவும் ஏற்பாடு செய்து தரப்படும்.
முதல்வர் மருந்தகம் அமைக்க தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு முதற்கட்டமாக ரூபாய் 1.5 லட்சம் மானியம் உடனடியாக வழங்கப்படும். இதையடுத்து, மருந்தகம் அமைக்கத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளுக்கான ஏற்பாடை விண்ணப்பதாரர் செய்ய வேண்டும்.
பின்னர், இரண்டாவது கட்டமாக ரூபாய் 1.5 லட்சத்திற்கு மானியமாக மருந்துகள் வழங்கப்படும். விற்பனைக்கு ஏற்ப ஊக்கத்தொகையும் வழங்கப்படும்.