பொறியியல் பட்டதாரியா நீங்கள்? ரூ.30 ஆயிரம் மாத உதவித்தொகையுடன் படிப்பு- உடனடி வேலை- விவரம்
பொறியியல் இசிஇ, இஇஇ, மெக்கானிக்கல், சிவில் ஆகிய படிப்புகளை முடித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
பி.இ./ பி.டெக். முடித்த மாணவர்கள் ஐஐடி சென்னையில், முதுகலை டிப்ளமோ படிப்பை மாதாமாதம் ரூ.30 ஆயிரம் உதவித்தொகையுடன் படிக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான அறிவிப்பை சென்னை மெட்ரோ ரயில் அறிவித்துள்ளது.
இதன்படி பொறியியல் இசிஇ, இஇஇ, மெக்கானிக்கல், சிவில் ஆகிய படிப்புகளை முடித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். இதில் சிவில் பிரிவில் 3 காலி இடங்களும் இசிஇ பிரிவில் 5 இடங்களும் உள்ளன. அதேபோல இஇஇ பிரிவில் 6 இடங்களும் மெக்கானிக்கல் பிரிவில் 4 இடங்களும் உள்ளன.
வயது வரம்பு
பொறியியல் படிப்பை தற்போது முடித்தவர்கள் மட்டுமே இதற்கு விண்ணப்பிக்க முடியும். குறிப்பாக, ஜூன் 9 அன்று 28 வயது பூர்த்தி ஆகியிருக்கக் கூடாது.
கல்வித் தகுதி
70 சதவீத சிஜிபிஏ-ல் தேர்வான இசிஇ, இஇஇ, மெக்கானிக்கல், சிவில் பட்டதாரிகள் இதற்கு விண்ணப்பிக்கலாம். எனினும் அவர்கள் கேட் தேர்வு எழுதி நல்ல மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டும். இறுதி ஆண்டு பொறியியல் மாணவர்களும் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பக் கட்டணம்
பொதுப் பிரிவு மாணவர்களுக்கு ரூ.500 கட்டணம் செலுத்தப்பட வேண்டும். இதுவே எஸ்சி/ எஸ்டி பிரிவு மாணவர்களுக்கு ரூ.100 விண்ணப்பக் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனினும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு எந்தக் கட்டணமும் இல்லை. இந்த கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு முறை
* கேட் மதிப்பெண்,
* நேர்காணல்,
* இறுதியாக உடல் தகுதி.
பட்டதாரிகள் தேர்வு செய்யப்பட்ட பிறகு மாதம் ரூ.30 ஆயிரம் உதவித் தொகையில், ஓராண்டுக்கு Executive Trainee ஆகப் படிக்க அனுப்பப்படுவர். METRO RAIL TECHNOLOGY AND MANAGEMENT என்ற பெயரில் முதுகலை டிப்ளமோ படிப்பு ஓராண்டுக்குக் கற்பிக்கப்படும். ஐஐடி சென்னையில் படிப்பதற்கு ஆகும் கல்விக் கட்டணத்தை சென்னை மெட்ரோ நிறுவனம் பார்த்துக்கொள்ளும்.
வெற்றிகரமாகப் படித்து முடித்தபிறகு, 5 ஆண்டுகளுக்கு ஒப்பந்த முறையில் உதவி மேலாளராகச் சென்னை மெட்ரோவில் பணியாற்றலாம். இவர்களுக்கு மாதம் ரூ.62 ஆயிரம் ஊதியம் வழங்கப்படும்.
விண்ணப்பிப்பது எப்படி?
ஆர்வமும் தகுதியும் கொண்டவர்கள், https://careers.chennaimetrorail.org/sign_in.php என்ற இணைப்பை க்ளிக் செய்து, முதுகலை டிப்ளமோ படிப்புக்கு விண்ணப்பிக்கலாம். முதல்முறை விண்ணப்பிப்பவர்கள், அதற்கு முன்பதிவு செய்துகொண்டு விண்ணப்பிக்க வேண்டும்.
கூடுதல் விவரங்களுக்கு: https://careers.chennaimetrorail.org/ref_pdf.php?id=27 என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.