30 வயதைக் கடந்த ஆண்களே உஷார்! திடீர் மாரடைப்பைத் தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?
30 வயதைக் கடந்த ஆண்கள் உடற்பயிற்சி, ஆரோக்கியமான உணவுப்பழக்கம், முறையான மருத்துவப் பரிசோதனைகள் மூலம் மாரடைப்பு அபாயத்தைக் குறைக்கலாம்.

சமீபகாலமாக இளம் வயதினரும் திடீர் மாரடைப்பால் உயிரிழக்கும் சம்பவங்கள் அதிக கவலையை ஏற்படுத்தி வருகின்றன. குறிப்பாக, 30 வயதைக் கடந்த ஆண்கள் தங்களது இதய ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தை இதுபோன்ற சம்பவங்கள் உணர்த்துகின்றன. புகைபிடித்தல், உடற்பயிற்சியின்மை, நீரிழிவு, அதிக கொழுப்பு உள்ளிட்ட பல்வேறு காரணிகள் இதய நோய்களுக்கான ஆபத்தை அதிகரிக்கின்றன.
சென்னையில் விமான நிலையத்தில் திடீரென மயங்கி விழுந்த செய்தியாளர் பாரத், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ள செய்தி ஊடகத் துறையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இத்தகைய சம்பவங்கள் இதயப் பாதிப்புகள் சில நேரங்களில் மிகக் குறுகிய காலத்தில் தீவிரமடையக்கூடும் என்பதை உணர்த்துகின்றன.
30 வயதைக் கடந்த ஆண்கள் என்ன செய்ய வேண்டும்?
இதய நோய்களுக்கான ஆபத்தைக் குறைக்க முதலில் புகைபிடிக்கும் பழக்கத்தைக் கைவிட வேண்டும். சிகரெட் புகைப்பது ரத்தக் குழாய்களைப் பாதிப்பதுடன், இதய நோய்களுக்கான வாய்ப்பையும் அதிகரிக்கிறது. புகையிலைப் பயன்பாட்டை முற்றிலும் நிறுத்துவது இதய ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதற்கான முக்கியமான நடவடிக்கையாகும்.
நடைபயிற்சி அவசியம்
அடுத்ததாக, உடல் செயல்பாடுகளை அதிகரிக்க வேண்டும். தினசரி நடைப்பயிற்சி, ஓட்டப்பயிற்சி, சைக்கிள் ஓட்டுதல் போன்ற உடற்பயிற்சிகளை மேற்கொள்ளலாம். வாரத்துக்கு குறைந்தது 150 நிமிடங்கள் மிதமான உடற்பயிற்சி அல்லது 75 நிமிடங்கள் தீவிர உடற்பயிற்சி செய்வது பரிந்துரைக்கப்படுகிறது. 5 கி.மீ., 10 கி.மீ. ஓட்டப்பந்தயங்களில் பங்கேற்க விரும்புவோர் தங்களது உடல் தகுதிக்கு ஏற்ப படிப்படியாகப் பயிற்சியை அதிகரிக்க வேண்டும். திடீரென தீவிர ஓட்டப்பயிற்சியில் ஈடுபடுவது தவிர்க்கப்பட வேண்டும்.
உடல் எடையை கட்டுப்பாட்டில் வைத்திருங்கள்
உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருப்பதும் அவசியம். குறிப்பாக, உடல் நிறை குறியீட்டெண் (BMI), இடுப்பளவு ஆகியவற்றைக் கண்காணிக்க வேண்டும். அதிக உடல் எடை, வயிற்றுப் பகுதியில் கொழுப்பு சேர்வது ஆகியவை நீரிழிவு மற்றும் உயர் ரத்த அழுத்தத்துடன் தொடர்புடையவை.
என்னென்ன மருத்துவப் பரிசோதனைகள் அவசியம்?
30 வயதைக் கடந்த ஆண்கள் தங்களது ரத்த அழுத்தம், ரத்தச் சர்க்கரை அளவு, கொழுப்புச் சத்து ஆகியவற்றைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். குறிப்பாக, HbA1c பரிசோதனை மூலம் கடந்த மூன்று மாதங்களுக்கான சராசரி ரத்தச் சர்க்கரை அளவை அறிந்துகொள்ளலாம். மொத்த கொழுப்புச் சத்து (Total Cholesterol), கெட்ட கொழுப்பு (LDL), நல்ல கொழுப்பு (HDL), டிரைகிளிசரைட்ஸ் ஆகியவற்றையும் பரிசோதிக்க வேண்டும். இவற்றை எவ்வளவு இடைவெளியில் மீண்டும் பரிசோதிக்க வேண்டும் என்பதை அவரவர் உடல்நிலை மற்றும் ஆபத்துக் காரணிகளைப் பொறுத்து மருத்துவர் தீர்மானிப்பார்.
இதய நிபுணரைச் சந்தித்து இதய ஆரோக்கியத்தை மதிப்பீடு செய்துகொள்வதும் முக்கியம். இசிஜி (ECG), எக்கோ (ECHO), டிரெட்மில் பரிசோதனை (TMT), HSCRP போன்ற பரிசோதனைகள் அனைவருக்கும் ஆண்டுதோறும் கட்டாயம் தேவையில்லை. அறிகுறிகள், குடும்பத்தில் இளம் வயதில் இதய நோய் ஏற்பட்ட வரலாறு மற்றும் தனிப்பட்ட ஆபத்துக் காரணிகளைப் பொறுத்து இதய நிபுணர் இவற்றைப் பரிந்துரைப்பார்.
அறிகுறிகளை அலட்சியப்படுத்த வேண்டாம்!
நெஞ்சு வலி அல்லது அழுத்தம், மூச்சுத்திணறல், அதிக வியர்வை, தலைசுற்றல், திடீர் மயக்கம் போன்ற அறிகுறிகள் ஏற்பட்டால் அவற்றை சாதாரண உடல் சோர்வாகக் கருதக்கூடாது. குறிப்பாக, நெஞ்சு அசௌகரியம் தொடர்ந்து இருந்தால் உடனடியாக அவசர மருத்துவ உதவியை நாட வேண்டும். மாரடைப்புக்கும் இதயச் செயலிழப்புக்கும் (Cardiac Arrest) மருத்துவ ரீதியாக வேறுபாடு உள்ளது. இதயச் செயலிழப்பு ஏற்பட்டால் உடனடியாக இதய நுரையீரல் மீட்பு சிகிச்சை (CPR) மற்றும் கிடைத்தால் தானியங்கி மின் அதிர்ச்சி கருவி (AED) பயன்படுத்துவது உயிரைக் காப்பாற்ற உதவும்.
30 வயதைக் கடந்துவிட்டால் இதய நோய் வராது என்றோ, உடல்நலக் குறைபாடு இல்லையென்றால் இதயம் ஆரோக்கியமாக இருக்கிறது என்றோ கருதக்கூடாது. புகைபிடித்தலைக் கைவிடுதல், முறையான உடற்பயிற்சி, ஆரோக்கியமான உணவுப்பழக்கம், தேவையான மருத்துவப் பரிசோதனைகள் ஆகியவற்றைத் தொடர்ந்து மேற்கொள்வதே இதய நோய்களின் ஆபத்தைக் குறைப்பதற்கான வழியாகும்.
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்






















