H.Vinoth: தமிழ் சினிமாவின் பொக்கிஷம்.. தீதின் வழி சென்று மக்களை எச்சரிக்கும் கில்லாடி எச்.வினோத்..!
தீதின் வழி சென்றே தீதை உரக்கச் சொன்னால்தான் சம காலத்தில் மக்களுக்கு புரியும் என்பதை எச்.வினோத் நன்றே அறிந்து வைத்திருக்கிறார்.
சதுரங்க வேட்டை படம் மூலமாக தமிழ் திரையுலகில் இயக்குனராக அறிமுகமாகியவர் எச்.வினோத். முதல் படத்திலேயே வித்தியாசமான கதைக்களம் மூலம் அடிமட்ட மக்கள் வரை சென்று சேர்ந்தவர். சதுரங்க வேட்டைக்கு பிறகு தீரன் அதிகாரம் ஒன்று, நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.
எச்.வினோத் இயக்கிய நேர்கொண்ட பார்வை இந்தி படமான பிங்க் திரைப்படத்தின் ரீமேக் ஆகும். தீரன் அதிகாரம் ஒன்று உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இயக்கப்பட்ட திரைப்படம் ஆகும். தமிழ் சினிமாவில் மக்களின் அடிப்படை பிரச்சினைகளை அறிந்து கொண்டு திரைப்படங்களை இயக்குபவர்களில் எச்.வினோத்தும் ஒருவர் ஆவார்.
அடிநாதமான பணம்:
அவர் இயக்கிய சதுரங்க வேட்டை, வலிமை மற்றும் சமீபத்தில் வெளியான துணிவு ஆகிய படங்கள் பணத்தை அடிப்படையாக கொண்ட திரைப்படம் ஆகும். அந்த படங்களின் அடிநாதம் பணமும், அந்த பணத்திற்காக மக்கள் ஏமாறும் விதமும், ஏமாற்றுக்காரர்களின் சூழ்ச்சியும் ஆகும்.
இன்றைய காலத்திலும், இனி வருங்காலங்களிலும் மனிதன் வாழ்வதற்கு பணம் என்பது மிகவும் அத்தியாவசிய தேவையான ஒன்று ஆகும். நாள் முழுவதும் உழைத்தும் உழைப்புக்கேற்ற ஊதியத்தை பெற முடியாமல் தவிக்கும் தொழிலாளர்கள் இன்னமும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள். அப்பேற்பட்ட மக்களின் பணங்களையும் வெவ்வேறு விதங்களில் சுரண்டும் கும்பல்களும் இருந்து கொண்டுதான் இருக்கின்றனர்.
தீமையின் வழியில் விழிப்புணர்வு:
இதைத்தான் எச்.வினோத் தான் இயக்கும் ஒவ்வொரு படங்களிலும் வித்தியாசமான கதைக்களம் மூலம் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றார். தீதின் வழி சென்றே தீதை உரக்கச் சொன்னால்தான் சம காலத்தில் மக்களுக்கு புரியும் என்பதை எச்.வினோத் நன்றே அறிந்து வைத்திருக்கிறார். இதன் காரணமாகவே அவர் இயக்கிய சதுரங்க வேட்டையில் கதையின் நாயகனை மோசடிகளில் இருந்து காப்பாற்றும் ஆபத்பாந்தவனாக சித்தரிக்காமல் அவனையே மோசடிக்காரனாக சித்தரிப்பார்.
வலிமை படத்தில் தொழில்நுட்பங்கள், போதைப்பொருட்களை பயன்படுத்தி பணம் சம்பாதிக்கும் வில்லனை எதிர்க்கும் நாயகனாக அஜித்தை காட்டியிருப்பார். ஆனால், வலிமை படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. ஆனால், ஒரு கேங்ஸ்டராக, கெட்டவனாக சர்வதேச போலீஸ் தேடும் குற்றவாளியை அஜித்தை துணிவு படத்தில் காட்டியிருப்பார். அவர் வழியே படத்தின் இரண்டாம் பாதியில் வங்கிகளில் நடக்கும் சம்பவங்களையும், மக்களின் பணம் பல்வேறு வகைகளில் சுரண்டப்படுவதையும் கேள்விகளாக முன்வைத்திருப்பார். இது மக்களை மிகவும் எளிதாக சென்றடைந்திருக்கிறது.
குறிப்பாக, குறைந்தபட்ச இருப்புத்தொகை எவ்வாறு சுரண்டப்படுகிறது என்பதற்கான விளக்கம் நாம் அனைவரும் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய ஒன்று ஆகும். மேலும், சுயநலமாக சிந்திப்பதால்தான் மனிதன் சுயநலவாதி என்ற அவர் எழுதிய வசனமும் நம்மை யோசிக்க வைக்கிறது.
கில்லாடி எச்.வினோத்
நன்மையின் வழி சென்று தீமையில் இருந்து எப்படி தப்பிப்பது என்று விழிப்புணர்வு செய்வதற்கு பதிலாக, தீமையின் வழி சென்று பாதுகாப்பாக இருப்பது எப்படி என்று மக்களை எச்சரிக்கை செய்வதில் எச்.வினோத் மிகப்பெரிய கில்லாடி என்பதற்கு சதுரங்க வேட்டைக்கு பிறகு துணிவு படம் மிகச்சிறந்த உதாரணம் ஆகும். இனி வருங்காலங்களிலும் அவரிடம் இதுபோன்ற ஏராளமான படைப்புகளை நாம் எதிர்பார்க்கலாம்.