Jaya Sudha on Kangana; ‘கங்கனாவுக்கு பத்ம ஸ்ரீ விருது அப்ப எங்களுக்கு’ - மத்திய அரசை சாடிய மணிரத்னம் பட நடிகை!
“பத்து படங்களில் நடித்த பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்திற்கு பத்மா ஸ்ரீ வழங்கப்பட்டுள்ளது. பல படங்களை நடித்து வரும் எனக்கு ஒரு அங்கீகாரமும் கிடைக்கவில்லை.” - ஜெயசுதா
பத்ம ஸ்ரீ விருதை பெற்ற கங்கனா ரனாவத் குறித்து நடிகை ஜெயசுதா பேசியுள்ளார்.
முதலில் இந்திய சினிமா என்று ஒற்றுமையாக இருந்த திரையுலகத்தில், தற்போது தென்னிந்திய சினிமா மற்றும் பாலிவுட் சினிமா என்ற பிரிவிணை ஏற்பட்டுள்ளது. சினிமா ரசிகர்கள் சிலர், பாலிவுட் சினிமாவை விட தென்னிந்திய சினிமா மக்களுக்கு நல்ல படங்களை கொடுத்து வருகிறது என கூறி வருகின்றனர்; மற்றொரு பக்கம், இருவரும் ஒற்றுமையாக இருந்தால் இந்திய சினிமாவை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்லலாம் என்ற கருத்தும் முன்வைக்கப்பட்டு வருகிறது;
View this post on Instagram
சூழ்நிலை இப்படி இருக்கும் நிலையில், நந்தமுரி பாலாகிருஷ்ணா தொகுத்து வழங்கும், “அன் ஸ்டாப்பபுள்” என்ற டாக் ஷோவில் ஜெய சுதா கலந்து கொண்டார். நடிகையாக இருந்து அரசியல் களத்தில் இறங்கிய ஜெயசுதா அந்நிகழ்ச்சியில் இது குறித்தான அவரது ஆதங்கத்தை கொட்டி தீர்த்தார்.
அதில் பேசிய அவர், “ பத்து படங்களில் நடித்த பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்திற்கு பத்ம ஸ்ரீ வழங்கப்பட்டுள்ளது. ஆனால், நான் சினிமா துறையில் பல ஆண்டுகளாக நடித்து வருகிறேன். என் திறமைக்கு இன்று வரை ஒரு அங்கீகாரமும் கிடைக்கவில்லை. இதில் பாதிக்கப்பட்டது நான் மட்டுமில்லை, என்னை போன்ற பல தென்னிந்திய நடிகர்களும்தான்.
கங்கனா ஒரு நல்ல நடிகை. அவருக்கு விருது வழங்கப்பட்டுள்ளது. அதில் எனக்கு எந்தவொரு ஆட்சேபனையும் இல்லை. ஆனால், அவர் பத்து படங்களில் நடித்து விருதை பெற்றுள்ளார். தெலுங்கு சினிமாவில் 44 படங்களை இயக்கிய டைரக்டர் விஜய நிர்மலா, 2002 ஆம் ஆண்டில் கின்னஸ் சாதனையில் இடம்பெற்றார். அவருக்கு அரசாங்கத்திடமிருந்து அங்கீகாரம் கிடைக்கவில்லை. தென்னிந்திய சினிமா நிராகரிக்கப்பட்டுவருகிறது என்பது வருத்தத்தை அளிக்கிறது.” என்று கூறினார்.
ஜெயசுதாவுடன் இருந்த நடிகை ஜெயபிரதா, “ எங்கள் திறமைக்காக, விருதுகளை அவர்கள் வழங்க வேண்டும். அதை நாங்கள் கேட்டு வாங்கும் அளவிற்கு நிலைமை மோசமாக உள்ளது. நான் எம்.பி யாக இருந்தபோது, நடிகர் என்.டி.ஆர் அவர்களுக்கு பாரத் ரத்னா வழங்க கோரிக்கை வைத்தேன். இப்போது வரை அதற்காக நான் மெனகெட்டு வருகிறேன்.” என்று கூறினார். இவர்கள் சொல்வதை கேட்டு கொண்டிருந்த நந்தமுரி பாலாகிருஷ்ணா அவர்களின் கருத்தை ஒப்புக்கொண்டார்.