(Source: ECI/ABP News/ABP Majha)
Vaiko: அண்ணாமலை பேசுகிற பேச்சு பண்பாடற்ற பேச்சு! இந்த தேர்தல் முடிவு மோடிக்கு ஏமாற்றமாகவும், தோல்வியாகவும் முடியும் - வைகோ
இந்திய அளவில் பா.ஜ.க தனியாட்சி பெறுவதற்கு வாய்ப்பில்லை. இந்தியா கூட்டணி மற்றும் அதனை சார்ந்து அனுசரித்து போகின்ற கட்சிகள் சேர்ந்து அமைக்கின்ற கூட்டணி ஆட்சிதான் அமையும்.
தமிழகத்தில் மக்களவை தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், தென்காசி மாவட்டம் கலிங்கப்பட்டியில் ம.தி.மு.க தலைவர் வைகோ தனது ஜனநாயக கடமையாற்றினார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த வைகோ கூறியதாவது,"பிரதமர் மோடி தமிழுக்கும் எதிரி. ஆனால் அவர் மக்களை ஏமாற்றுவதற்காக தமிழகம் வந்து திருக்குறளை பேசுகிறார். பாரதியாரை பாடுகிறார். தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய தமிழ் மொழியின் வளம் எப்படிப்பட்டது என்று பேசுகிறார். இதெல்லாம் முன்பு அவருக்கு தெரியவில்லையா? 9 முறை இந்த தேர்தலுக்காக வந்தாரே புயல், மழை வெள்ளம் என லட்சக்கணக்கானோர் தவித்த போது எண்ணற்றோர் மடிந்த போது 10 நிமிடம் ஹெலிஹாப்டரில் ஒதுக்கி பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்க்க பிரதமருக்கு மனமில்லையே?
அவர் தமிழையும், தமிழ்நாட்டையும் இவ்வளவு நேசிக்கிறார் என்றால் அப்போது அல்லவா வந்திருக்க வேண்டும். கொரோனா தாக்கிய போது வந்திருக்க வேண்டும், வரவில்லையே? இப்போது ஏன் வருகிறார். தமிழ்நாட்டில் திராவிட முன்னேற்றக் கழகத்தையும், அதன் தலைமையிலான கூட்டணியையும் வீழ்த்துவது எளிதான காரியம் அல்ல என்பதனை புரிந்து கொண்ட மோடி, தமிழ் இலக்கியங்களை பற்றி பேசினால் வாக்குகள் கிடைக்கும் என்று எண்ணி 9-முறை தமிழகம் வந்துள்ளார். ஆனால் மீண்டும் திராவிட முன்னேற்றக்கழகத்தின் கூட்டணி தான் இந்த தேர்தலில் பெரும்பான்மையான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறும். அதே போல இந்திய அளவில் பா.ஜ.க தனியாட்சி பெறுவதற்கு வாய்ப்பில்லை. இந்தியா கூட்டணி மற்றும் அதனை சார்ந்த அனுசரித்து போகின்ற கட்சிகள் சேர்ந்து அமைக்கின்ற கூட்டணி ஆட்சிதான் அமையும். கூட்டாட்சி தத்துவத்தை காப்பாற்ற வேண்டும். இந்தியா ஒற்றையாட்சியை பின்பற்றி கொண்டிருக்கிறது. வரப்போகும் தேர்தல் முடிவுகள் நரேந்திர மோடி நினைப்பதை போல வெற்றியை அவருக்கு தராது. தமிழ் நாட்டில் அபிரிவிதமான வெற்றியை இந்தியா கூட்டணி பெறும் என நம்பிக்கை வைத்துள்ளேன். இந்த தேர்தல் முடிவுக்கு மோடிக்கு ஏமாற்றமாகவும், தோல்வியாகவும் முடியும்.
ஸ்டாலின் தலைமையிலான இந்தியா கூட்டணி மாபெரும் வெற்றியை பெறும். இந்த தேர்தல் முடிவுக்கு பிறகு தான் யார் பிரதமர் என்பதை எல்லோரும் கூடி கலந்து இந்தியா கூட்டணி அமைக்க எல்லாரும் ஒன்றுபட்டு இருந்தது போல ஒரு முடிவு வரும். பாஜக இல்லாத அதிகாரத்தை, செல்வாக்கை இருப்பதாக காட்டி செயல்பட்டு கொண்டிருக்கின்றனர். பாஜகவின் தமிழக தலைவர் பேசுகிற பேச்சு பண்பாடற்ற பேச்சு. பிரதமரே இப்படி பேசும் பொழுது நாம் ஏன் பேசக்கூடாது என பேசி வருகிறார். ஒரு அரசியல் இயக்கத்தை அழிப்பது என்று சொல்வது ஜனநாயகமா? இதுவரை எந்த பிரதமரும் அப்படி சொன்னதில்லை என்றார். தொடர்ந்து செய்தியாளர்கள் கேள்விக்கு, கோவையில் தேர்தல் ஆணையம் பா.ஜ.க அரசிற்கு சாதகமாகவே செயல்பட்டு வருகிறது" என்று தெரிவித்தார்.