TN urban Local body Elections 2022 | 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு.. தேர்தல் ஏற்பாடுகளை விளக்கிய மாநில தேர்தல் ஆணையர்
தமிழ்நாடு முழுவதும் நாளை ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் ஆகியவற்றிற்கு நாளை தேர்தல் நடைபெறுகிறது. மொத்தம் 1,374 மாநகராட்சி உறுப்பினர்கள், 3,843 நகராட்சி உறுப்பினர், 7,621 பேரூராட்சி உறுப்பினர் பதவிகள் என மொத்தமாக 12,838 பதவிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. இந்தப் பதவிகளுக்கு ஒரே கட்டமாக நாளை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தயாராகி இருந்தனர். நேற்று மாலை 6 மணியுடன் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான பிரச்சாரம் நிறைவு பெற்றது. இதைத் தொடர்ந்து உள்ளாட்சித் தேர்தலுக்கான பணிகளை மாநில தேர்தல் ஆணையம் தீவிரமாக செய்து வருகிறது.
இந்நிலையில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் ஏற்பாடுகளைக் குறித்து மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார். அதில், “வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிக்க ஏதுவாக பாதுகாப்பு பணிகள் விரிவாக செய்யப்பட்டுள்ளன.30,735 வாக்குச்சாவடிகள் தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ளன. சட்ட ஒழுங்கைப் பேணிக்காக்க சுமார் ஒரு லட்சம் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். தமிழ்நாட்டில் மொத்தமாக 295 இடங்களில் தேர்தல் நடைபெறவில்லை. அதாவது 218 இடங்களில் போட்டியின்றி வெற்றி மற்றும் ஒரு சில இடங்களில் வேட்பாளர்கள் மரணம் ஆகியவற்றால் அங்கு தேர்தல் நடைபெறவில்லை.
தமிழகம் முழுவதும், 5,960 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாக கண்டறியப்பட்டுள்ளன. சென்னையில் மூவர் உட்பட 38 மாவட்டங்களில் மொத்தம் 41 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கோவையில் மட்டும் 2 ஆயிரத்துக்கும் அதிகமான காவலர்கள் தேர்தல் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வாக்குப்பதிவு முடிந்த பிறகு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பத்திரமாக சீல் வைக்கப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்படும். அந்த அறைகள் அனைத்தும் சிசிடிவி கேமரா கண்காணிப்புடன் இருக்கும். மேலும் கூடுதலாக காவலர்களும் அந்தப் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். வரும் 22ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் 268 வாக்கு எண்ணும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன” எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மூன்று நாட்களுக்கு மதுபான கடைகள் மூடப்பட்டுள்ளன. மேலும் வாக்கு எண்ணிக்கை நாளான வரும் 22ஆம் தேதியும் மதுபான கடைகள் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் 218 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். எனவே நாளை நடைபெறும் தேர்தலில் மொத்தமாக 12,607 பதவியிடங்களுக்கு 57,778 பேர் போட்டியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைதள பக்கங்களிலும் பின் தொடரலாம்