தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல்: காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு... 26,921 வாக்காளர்கள், 1,330 பேர் பாதுகாப்பு!
புதுச்சேரி தட்டாஞ்சாவடி சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று (அக்டோபர் 6) காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது

புதுச்சேரி: புதுச்சேரி தட்டாஞ்சாவடி சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று (அக்டோபர் 6) காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தொகுதி முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 31 வாக்குச்சாவடிகளில் வாக்காளர்கள் ஆர்வத்துடன் வரிசையில் நின்று தங்களது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றி வருகின்றனர். வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறுகிறது.
புதுச்சேரியில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் முதல்வர் என்.ரங்கசாமி மங்கலம் மற்றும் தட்டாஞ்சாவடி ஆகிய இரு தொகுதிகளிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதில் தட்டாஞ்சாவடி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை அவர் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, அந்தத் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
11 வேட்பாளர்கள் போட்டி
தட்டாஞ்சாவடி தொகுதியில் அரசியல் கட்சிகள் சார்பில் 6 பேரும், சுயேச்சைகள் 5 பேரும் என மொத்தம் 11 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
முக்கிய வேட்பாளர்களாக என்.ஆர். காங்கிரஸ் சார்பில் ஆ. அசோக் ஆனந்த், திமுக சார்பில் கு. சேது என்கிற சேது செல்வம், காங்கிரஸ் சார்பில் இ. விநாயகம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அ.மு. சலீம் ஆகியோர் போட்டியிடுகின்றனர். நாம் தமிழர் கட்சி சார்பில் எஸ். கார்த்திகுமாரி மற்றும் இந்திய குடியரசுக் கட்சி சார்பில் ஏ. கலைவாணன் ஆகியோரும் போட்டியிடுகின்றனர்.
இந்தத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் விநாயகத்துக்கு தமிழக வெற்றிக் கழகம் ஆதரவு அளித்துள்ளது.
26,921 வாக்காளர்கள்
தட்டாஞ்சாவடி தொகுதியில் மொத்தம் 26,921 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண்கள் 12,575, பெண்கள் 14,341, மூன்றாம் பாலினத்தவர்கள் 5 பேர் ஆவர். இவர்களில் 350 மாற்றுத்திறனாளி வாக்காளர்களும், 3 வெளிநாடு வாழ் வாக்காளர்களும் அடங்குவர்.
தொகுதியில் புதிதாக சேர்க்கப்பட்ட மற்றும் விவரங்கள் திருத்தம் செய்யப்பட்ட 584 வாக்காளர்களுக்கு புகைப்பட வாக்காளர் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் 26,734 வாக்காளர்களுக்கு வாக்காளர் தகவல் சீட்டும் வழங்கப்பட்டுள்ளது.
31 வாக்குச்சாவடிகள்
தட்டாஞ்சாவடி தொகுதியில் மொத்தம் 31 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்குப்பதிவுக்குத் தேவையான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் VVPAT இயந்திரங்கள் முதல் நிலை பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தன.
மொத்தம் 46 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 46 கட்டுப்பாட்டு இயந்திரங்கள் மற்றும் 48 VVPAT இயந்திரங்கள் என 140 இயந்திரங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன. பின்னர் அவை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
23 நுண்பார்வையாளர்கள் கண்காணிப்பு
வாக்குப்பதிவு பணிக்காக அரசு மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 31 வாக்குச்சாவடிகளிலும் தலைமை வாக்குச்சாவடி அலுவலர் மற்றும் வாக்குச்சாவடி அலுவலர்கள் 1, 2, 3 ஆகியோர் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், வாக்குச்சாவடிகளின் நடவடிக்கைகளை கண்காணிக்க 23 நுண்பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 31 வாக்குச்சாவடிகளிலும் நேரலைக் கண்காணிப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
வீட்டிலிருந்தே வாக்களித்த மூத்த குடிமக்கள்
85 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் 40 சதவீதத்துக்கும் அதிகமான மாற்றுத்திறனாளி வாக்காளர்களின் சிரமத்தைப் போக்கும் வகையில் வீட்டிலிருந்தே வாக்களிக்கும் வசதி ஏற்பாடு செய்யப்பட்டது.
அதன்படி 85 வயதுக்கு மேற்பட்ட 67 பேரும், 40 சதவீதத்துக்கும் அதிகமான மாற்றுத்திறனாளிகள் 37 பேரும் வீட்டிலிருந்தபடியே தங்களது வாக்குகளைப் பதிவு செய்துள்ளனர்.
2 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை
தட்டாஞ்சாவடி தொகுதியில் உள்ள 31 வாக்குச்சாவடிகளில் 2 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
கவுண்டம்பாளையம் முத்து ரத்தின அரங்கம் மேல்நிலைப் பள்ளி வாக்குச்சாவடி மற்றும் வினோபாநகர் பொய்யாகுளம் சமுதாய நலக்கூடம் வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பெண்கள் நிர்வகிக்கும் பிங்க் பூத்
பெண்களே முழுமையாக நிர்வகிக்கும் சிறப்பு ‘பிங்க் பூத்’ குளூனி பள்ளியில் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும், பாக்குமுடையான்பட்டு அரசு தொடக்கப் பள்ளியில் இரண்டு வாக்குச்சாவடிகள் மாதிரி வாக்குச்சாவடிகளாகவும், வினோபாநகர் அம்பேத்கர் நடுநிலைப் பள்ளி வாக்குச்சாவடி இளையோர் நிர்வகிக்கும் வாக்குச்சாவடியாகவும் அமைக்கப்பட்டுள்ளது.
1,330 பேர் பாதுகாப்புப் பணி
தேர்தல் அமைதியாக நடைபெறுவதற்காக துப்பாக்கி ஏந்திய துணை ராணுவப் படையினர் மற்றும் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தட்டாஞ்சாவடி தொகுதியில் உள்ள 31 வாக்குச்சாவடிகளிலும் சேர்த்து சுமார் 1,330 பேர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தேர்தலை முன்னிட்டு தொகுதியில் உள்ள மதுபானக் கடைகள் இரண்டு நாட்கள் மூடப்பட்டுள்ளன. பள்ளிகளுக்கும் இரண்டு நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
குடிநீர், நிழற்குடை உள்ளிட்ட வசதிகள்
அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்காளர்களின் வசதிக்காக குடிநீர், கழிப்பறை, சாய்வுதளம், மின்சார வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
வெயிலில் வாக்காளர்கள் நீண்ட நேரம் நிற்க வேண்டிய நிலையைத் தவிர்க்க நிழற்குடைகள் அமைக்கப்பட்டுள்ளதுடன், வெயிலின் தாக்கத்தை சமாளிக்க ஓஆர்எஸ் கரைசல் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. வாக்காளர்கள் தங்களது வாக்குகளை தவறாமல் பதிவு செய்ய வேண்டும் என தேர்தல் துறை அறிவுறுத்தியுள்ளது.
வாக்குப்பதிவு நிறைவடைந்ததும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் உரிய பாதுகாப்பு நடைமுறைகளுடன் வாக்கு எண்ணும் மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட உள்ளன.
தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 9-ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ தேர்தல் அட்டவணையையும் புதுச்சேரி தலைமைத் தேர்தல் அதிகாரி அலுவலகம் உறுதி செய்துள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்



















