(Source: ECI/ABP News/ABP Majha)
Lok Sabha Election 2024: இரவோடு இரவாக வாக்கு இயந்திரங்களை மாற்றும் பாஜக - மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு
WB CM Mamata Banerjee: வாக்குப்பதிவு இயந்திரங்களை கண்காணிக்க வேண்டும் என, எதிர்க்கட்சிகளுக்கு மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
WB CM Mamata Banerjee: வாக்குப்பதிவு சதவிகித விவரங்கள் தொடர்பாக, தேர்தல் ஆணையத்தை மம்தா பானர்ஜி சாடியுள்ளார்.
மம்தா பானர்ஜி அடுக்கும் குற்றச்சாட்டுகள்:
மக்களவை தேர்தலின் இரண்டு கட்ட வாக்குப்பதிவில், இறுதி வாக்குப்பதிவு சதவிகிதத்தை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டது தொடர்பாக தேர்தல் ஆணையத்தை மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி விமர்சித்தார். வாக்குப்பதிவு இயந்திரங்களை கண்காணிக்குமாறு எதிர்க்கட்சிகளை கேட்டுக் கொள்வதாகவும் தெரிவித்துள்ளார். முர்ஷிதாபாத்தின் ஃபராக்காவில் நடந்த பேரணியில் பேசிய பானர்ஜி, பாரதிய ஜனதா கட்சி ஈவிஎம் இயந்திரங்களை மாற்றுவதாக குற்றம் சாட்டினார். இரவு நேரங்களில் இவிஎம் இயந்திரங்கள் மாற்றப்பட்டு, பாஜகவுக்கு வாக்களிக்கப்பட்ட இயந்திரங்கள் வைக்கப்படுவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
வாக்குப்பதிவு சதவிகிதத்தில் சந்தேகம்:
பேரணியில் பேசிய மம்தா பானர்ஜி, “எனக்கு ஒரு சந்தேகம். தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதுகிறோம், வாக்குப்பதிவு சதவிகிதம் எப்படி அதிகரிக்கும் என்று தேர்தல் ஆணையத்திடம் கேட்பேன். அனைத்து எதிர்க்கட்சிகளும் தேர்தல் ஆணையத்தை சந்தித்து முறையிட வேண்டும். EVM மற்றும் அதன் சிப் மீது ஒரு கண் வைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இரவு நேரத்தில், இவர்கள் சென்று பூட்டை உடைத்து இயந்திரத்தை மாற்றுகிறார்கள், பாஜகவுக்கு வாக்களித்த இயந்திரத்தை அவர்கள் வைக்கிறார்கள். தேர்தல் ஆணையம் முதலில் வெளியிட்டதை விட திடீரென 5.75 சதவீதம் வாக்குப்பதிவு அதிகரித்திருப்பது கவலையளிக்கிறது. நீண்ட காலமாக பல மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் காணாமல் போனதால் பாஜகவிற்கு சாதகமான முடிவுகளுக்கான மோசடி நடைபெற்று உள்ளது. தேர்தலில் வெற்றி பெற பாஜக எந்த செயலையும் மேற்கொள்ளும் என்பதால், EVM தயாரிப்பாளர்களின் விவரங்களை தேர்தல் ஆணையம் பகிரங்கப்படுத்த வேண்டும்” என மம்தா பானர்ஜி பேசியுள்ளார்.
வாக்குப்பதிவு சதவிகிதம்:
நாடாளுமன்ற மக்களவை தேர்தல் வாக்குப்பதிவை மொத்தம் 7 கட்டங்களாக நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. அதன்படி, முதற்கட்டமாக கடந்த 19ம் தேதி 102 மக்களவை தொகுதிகளிலும், 26ம் தேதி 88 மக்களவை தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடைபெற்றது. ஆனால், இந்த இரண்டு கட்ட தேர்தல்களின் பதிவான வாக்குப்பதிவு சதவிகிதம் தொடர்பான, தேர்தல் ஆணையத்தின் அறிவிப்புகள் முன்னுக்கு பின் முரணாக இருந்தன. தமிழக வாக்குப்பதிவு விவரங்கள் மட்டும் சுமார் 3 முறை திருத்தி அறிவிக்கப்பட்டன. இறுதியாக, நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் முதல்கட்ட வாக்குப்பதிவில் 66.14 சதவீதமும், இரண்டாம் கட்ட வாக்குப்பதிவில் 66.71 சதவீதமும் வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. இப்படி, வாக்குப்பதிவு சதவிகிதம் தொடர்பாக முன்னுக்கு பின் முரணான தகவல்களை வெளியிட்டது தொடர்பாக தான், தேர்தல் ஆணையம் மீது மம்தா பானர்ஜி பல குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
இதைதொடர்ந்து வரும் மே மாதம் 7ம் தேதி 10 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த 94 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது