TNSET 2024: மாநில ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிப்பது எப்படி? தகுதி என்ன? முக்கியத் தகவல்கள்!
மாநில ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் முறை, கட்டணம் உள்ளிட்டவை குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகம் சார்பில், இந்த ஆண்டுக்கான மாநில ஆசிரியர் தகுதித் தேர்வு நடைபெற உள்ளது. இதற்கு விண்ணப்பிக்கும் முறை, கட்டணம் உள்ளிட்டவை குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
செட் தேர்வு
பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் உதவிப் பேராசிரியராகப் பணியில் சேர நாடு முழுவதும் தகுதித் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. மத்திய, மாநில அரசுகள் தனித்தனியாக இந்தத் தேர்வை நடத்துகின்றன. ஆண்டுதோறும் 2 முறை யுஜிசியால் நெட் எனப்படும் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படுகிறது. சில ஆண்டுகளுக்கு ஒருமுறை செட் என்ற பெயரில் மாநில அரசு சார்பில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் தமிழ்நாடு அரசு சார்பில், மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகம் இந்த ஆண்டுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வை நடத்த உள்ளது. இதற்கான விண்ணப்பப் பதிவு ஏப். 1ஆம் தேதி முதல் தொடங்கி உள்ளது. இதற்கு ஏப்ரல் 30ஆம் தேதி வரை தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்த மே 2 கடைசித் தேதி ஆகும். விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்ள மே 3, 4 ஆகிய தேதிகளில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தேர்வு மையங்கள், ஹால் டிக்கெட் உள்ளிட்டவை குறித்த விவரங்கள் பின்னர் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு தேதி
ஜூன் 3 முதல் 25ஆம் தேதிக்குள் மாநில தகுதித் தேர்வு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 3 மணி நேரத்துக்குத் தேர்வு நடைபெறும்.
விண்ணப்பக் கட்டணம் எவ்வளவு?
கடந்த ஆண்டுகளைக் காட்டிலும் இந்த முறை தகுதித் தேர்வுக்கான கட்டணம் சுமார் 60 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது பொதுப் பிரிவினருக்கான கட்டணம் ரூ.1500-ல் இருந்து ரூ.2500 ஆகவும், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான கட்டணம் ரூ.1250-ல் இருந்து ரூ.2,000 ஆகவும், பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினருக்கான கட்டணம் ரூ.500-ல் ருந்து ரூ.800 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. எனினும் மூன்றாம் பாலினத்தவருக்கு எந்த கட்டணமும் இல்லை.
என்ன தகுதி?
அனைத்துத் தேர்வர்களும் முதுகலை படிப்பில் குறைந்தபட்சம் 55 சதவீத மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத் திறனாளிகள் / மூன்றாம் பாலினத்தவர்கள் 50 சதவீத மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வுக்கு விண்ணப்பிக்க வயது வரம்பு எதுவும் இல்லை. 58 வயது வரை தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிப்பது எப்படி?
* தேர்வர்கள் https://app.msutnset.com/#/ என்ற இணைப்பை க்ளிக் செய்ய வேண்டும்.
* அதில் முன்பதிவு செய்துகொள்ள வேண்டும். விண்ணப்ப எண் மற்றும் கடவுச் சொல் ஆகியவற்றைப் பதிவு செய்துகொண்டு விண்ணப்பிக்கலாம்.
* தேர்வு குறித்த விரிவான அறிவிக்கையைக் காண: https://msutnset.com/TNSET2024_Notifications.pdf என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
கூடுதல் தகவல்களுக்கு: https://msutnset.com/