உங்கள் எண்ணத்தை மட்டுமல்ல வாழ்க்கையையே கூட இந்தத் தொடர் மாற்றலாம்.
அரசு அதிகாரிகள் உட்பட எந்தவொரு நபருக்கும் புவியியல் குறித்த அடிப்படை அறிவு தேவை. புவி அமைவிடங்கள், இயற்கை உருவாக்கங்கள், அவை உருவான விதம், வாழ்வியலில் ஏற்படுத்திய தாக்கம் ஆகியவற்றை அறிந்துகொள்வதன் மூலமே, ஒருவர் நிர்வாகப் பணியில் சிறப்பாக ஈடுபட முடியும்.
குரூப் 4 தேர்வுக்குத் தயாராக புவியியல் பாடத்தை எப்படிப் படிக்கலாம்? என்பது பற்றி ஆட்சிக் கல்வி ஐஏஎஸ் அகாடமியைச் சேர்ந்த செல்வ ராம ரத்னம் கூறியதாவது:
புவியியல் பாடத்திட்டம்
1. புவி அமைவிடம் - இயற்கை அமைவுகள் - பருவ மழை, மழைப் பொழிவு, வானிலை மற்றும் காலநிலை - நீர் வளங்கள் - ஆறுகள்- மண், கனிம வளங்கள் மற்றும் இயற்கை வளங்கள் - காடு மற்றும் வன உயிரினங்கள் - வேளாண் முறைகள்.
2. போக்குவரத்து - தகவல் தொடர்பு.
3. தமிழ்நாடு மற்றும் இந்தியாவில் மக்கள் தொகை அடர்த்தி மற்றும் பரவல்.
4. பேரிடர் - பேரிடர் மேலாண்மை - சுற்றுச்சூழல் - பருவநிலை மாற்றம்.
புவி அமைவிடம்
ஒட்டுமொத்த புவியியல் தொடர்பான பாடங்களையும் ஒன்றையொன்று தொடர்புபடுத்திப் படிக்க வேண்டும். இந்த பிரபஞ்சத்தில் பூமி எங்கு, எப்படி உள்ளது? சோலார் அமைவிடம், பால்வெளி அண்டம், அதன் அமைவிடம், நட்சத்திரங்கள் என்ற கோணங்களில் படிக்க வேண்டும். அதேபோலக் கோள்கள், அவற்றின் அடர்த்தி, அவை நகரும் கோணம், கோள்களில் வாழும் சூழல் உள்ளதா, சூரியனில் இருந்து, பூமியில் இருந்து கோள்கள் எவ்வளவு தொலைவில் உள்ளன?, கோள்கள் சுற்றும் திசை ஆகியவற்றில் இருந்து கேள்விகள் கேட்கப்படும்.
சூரியனின் அடுக்குகள் உள்ளிட்ட அமைவிடம், சூரியப் புள்ளிகள், வெப்பநிலை, சூரியனில் உள்ள வாயுக்கள், ஒளி பூமிக்கு வரும் கால அளவு, அங்கு அனுப்பப்பட உள்ள செயற்கைக்கோள்கள் குறித்தும் படிக்க வேண்டும். இந்தப் பகுதியில் இருந்து நடப்பு நிகழ்வுகள் சார்ந்தும் வேதியியல் சார்ந்தும் கேள்விகள் கேட்கப்படும். உதாரணத்துக்கு கருந்துளை மாதிரியான தகவல்களைத் தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும்.
பூமியைப் பற்றிய கேள்விகள் பெரும்பாலும் கருத்துருக்கள் (Concept) சார்ந்து கேட்கப்படும். பூமி 17 மடங்கு வேகத்தில் சுற்றினால், முழுமையாகச் சுற்றி முடிக்க எவ்வளவு நாட்கள் ஆகும்?, சுழற்சியை முடிக்க ஆகும் காலம் எவ்வளவு? என்பது மாதிரியான இயற்பியல் மற்றும் கணிதம் சார்ந்த கேள்விகளாக அமையும். அடுத்ததாக புவி, கோள்களின் சிறப்புப் பெயர்கள், நாசா அனுப்பியுள்ள செயற்கைக்கோள்கள் உள்ளிட்டவை சார்ந்து படிக்க வேண்டும்.
இயற்கை அமைவுகள்
ஆறுகள், மலைகள், குன்றுகள், பாறைகள், மண், கடல்கள் உள்ளிட்ட அனைத்தும் இயற்கை அமைவுகளே. பருவ மழை, மழைப் பொழிவு, வானிலை மற்றும் காலநிலை ஆகிய அனைத்தும் ஒரே தலைப்புக்குக் கீழ் வருபவை ஆகும். இவற்றைக் காலநிலை என்ற பிரிவின்கீழ் படிக்க வேண்டும். இதை உலகம், இந்தியா, தமிழகத்தில் நிலவும் காலநிலை என்று பிரித்துப் படிக்க வேண்டும். குரூப் 4 தேர்வுக்கு உலகக் காலநிலைக்கு அதிக கவனம் கொடுக்கத் தேவையில்லை.
இந்திய அளவில் பருவ மழை எப்படி உருவாகிறது? தென்மேற்குப் பருவ மழை, வடகிழக்குப் பருவ மழை, மத்தியத் தரைக்கடல் பகுதியில் இருந்து காற்று வருவது, மழைப்பொழிவு நிலை ஆகியவற்றைப் படிப்போம். தமிழ்நாட்டு அளவில் என்னென்ன பருவ நிலைகள் உள்ளன? என்பதைப் படிக்க வேண்டும்.
ஒவ்வொரு பருவ நிலைக்கும் ஏற்றவாறு காடுகள் இருக்கும். பசுமை மரக்காடுகள் (Shola forest), மிதவெப்ப மண்டலக் காடுகள் உள்ளிட்ட காடுகளின் வகைமைகள் குறித்தும் அங்குள்ள மர வகைகள், விலங்குகள், மழைப்பொழிவு பற்றிப் படிக்க வேண்டும். உதாரணத்துக்குக் கேரளா, வட கிழக்கு இந்தியா, அந்தமான் பகுதிகளில் 200 செ.மீ.-க்கும் அதிகமாக மழைப்பொழிவு இருக்கும்.
பனி, காற்று வகைகள் (local wind -குறிப்பிட்ட பகுதியில் வீசும் காற்று, hot wind, cool wind, Loo wind - கோடை காலத்தில் பாலைவனப் பகுதிகளில் வீசும் காற்று) குறித்தும் படிக்க வேண்டும்.
இத்துடன் காலநிலை மாற்றம் மற்றும் அதனால் ஏற்படும் விளைவுகளைக் கட்டாயம் படிக்க வேண்டும். சமகால நிகழ்வான இந்தப் பகுதியில் இருந்தும் கட்டாயம் கேள்விகள் இருக்கும்.
நீர் வளங்கள் சார்ந்து படிக்கும்போது, கடல் சார்ந்த விஷயங்களையும் (Oceanography) பெருங்கடல் சார்ந்தும் படிக்க வேண்டும். கடலின் உப்பு அளவு, கடல் ஓதங்கள் சார்ந்து படிக்க வேண்டும். கடல் நீரோட்டங்கள் (ocean currents), அதன் வகைகள், எல் நினோ, லா நினோ சார்ந்து படிக்க வேண்டும். அதேபோல உலகின் நீண்ட கடற்கரையைக் கொண்ட நாடு உள்ளிட்ட பொது அறிவுத்தகவல் சார்ந்தும் வரைபடம் (Map) சார்ந்தும் படிக்க வேண்டும்.
பனிப் பிரதேசம், கடலின் அடியில் உள்ள நீர் வகை, நிலத்தடி நீர் உள்ளிட்ட நீர் ஆதாரங்கள் சார்ந்து படிப்பது அவசியம். அடுத்ததாக ஏரிகள் சார்ந்தும் அவை அமைந்துள்ள இடங்கள் குறித்தும் தெரிந்துகொள்ள வேண்டும்.
ஆறுகள்
ஆறுகள் உற்பத்தி ஆகும் இடங்கள், எந்தெந்த மாநிலங்கள் வழியாகப் பாய்கின்றன? வடக்கில் இருந்து தெற்கு, தெற்கில் இருந்து மேற்கு நோக்கி வரிசைப்படுத்துதல், மேற்கு நோக்கிப் பாயும் ஆறுகள், கிழக்கு நோக்கிப் பாயும் ஆறுகள், கிளை ஆறுகள், அதில் அமைந்திருக்கும் முக்கிய வழிபாட்டுத் தலங்கள், அங்கு அமைந்திருக்கும் நகரங்கள், அணைகள், அரசு கொண்டு வந்துள்ள திட்டங்கள் குறித்துப் படிக்க வேண்டும்.
நதிநீர் இணைப்பு, இரண்டு மாநிலங்களுக்கு இடையில் இருக்கும் நீர்ப்பங்கீட்டுப் பிரச்சினை குறித்தும் படிக்க வேண்டும். புவியியல் பாடத்தில், ஆறுகள் சார்ந்த பகுதிக்குக் கூடுதல் முக்கியத்துவம் கொடுத்துப் படிக்க வேண்டும்.
மண்
மண் வகைகள், அவற்றில் உள்ள கனிமங்கள், மண்ணில் விளையும் பயிர்கள், மண் அரிப்பு குறித்துப் படிக்க வேண்டும். மண் குறித்துப் படிக்கும்போதே பாறைகள் குறித்தும் அவற்றின் வகைகளையும் (தீப்பாறைகள், படிவுப் பாறைகள், உருமாறிய பாறைகள்) படிக்க வேண்டும்.
கனிம வளங்கள் மற்றும் இயற்கை வளங்கள்
கனிம வளங்கள் குறித்துப் படிக்கும்போது முதலில் நிலக்கரி குறித்துப் படிக்க வேண்டும். நிலக்கரி வகைகள், ஏற்றுமதி, இறக்குமதி, சமகாலத்தில் நிலவும் தட்டுப்பாடு ஆகியவை பற்றிப் படிக்க வேண்டும். இரும்புத் தாதுக்கள், யுரேனியம், தோரியம், மீத்தேன் உள்ளிட்ட இயற்கை வாயுகள் தொடர்பாகவும் தெரிந்துகொள்ள வேண்டும்.
காடு மற்றும் வன உயிரினங்கள் - வேளாண் முறைகள்
காலநிலை மாற்றத்தைப் படிக்கும்போதே காடு வகைகள் குறித்தும் படிக்க வேண்டும். விலங்குகள் குறித்துப் படிக்கும்போது தேசிய விலங்கு, தேசியப் பறவை, மாநில விலங்குகள் உள்ளிட்டவை சார்ந்தும் படிக்க வேண்டும்.
வன உயிரினங்கள்
இந்தியாவில் வன விலங்குகள் சரணாலயங்கள், புலிகள், பறவைகள் சரணாலயங்கள் எந்தெந்த மாநிலங்களில் உள்ளன என்று படித்தால் போதும்.
அழியும் வகையில் உள்ள விலங்கினங்கள், அருகி வரும் உயிரினங்கள் குறித்துப் படிக்கும்போது, ஐயுசிஎன் எனப்படும் பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு சங்கம் (International Union for Conservation of Nature) வெளியிடும் பட்டியலையும் படிக்க வேண்டும். இந்தப் பகுதியை மேலோட்டமாகப் படித்தால் போதுமானது.
வேளாண் முறைகள்
என்னென்ன மாநிலங்களில் எந்தெந்த மாதிரியான வேளாண் முறைகள் கடைப்பிடிக்கப்படுகின்றன என்று படிக்க வேண்டும். இதில் மறுசுழற்சி வேளாண் முறை (Shifting Cultivation) முக்கியமானது. பயிர் சாகுபடி, அவற்றின் வகைகள் (சம்பா, குறுவை சாகுபடி), சாகுபடி மாதங்கள், நெல், கரும்பு, சோளம் விளையும் முறை, அவற்றுக்குத் தேவையான வெப்பநிலை குறித்துப் படிக்க வேண்டும். சமையல் எண்ணெய், பொருட்கள் உற்பத்தியில் எந்தெந்த மாநிலங்கள் சிறந்து விளங்குகின்றன? ஆகியவை பற்றியும் தெரிந்துகொள்ள வேண்டும்.
நீர்ப் பாசன முறைகள், குறைந்தபட்ச ஆதார விலை, உணவுப் பாதுகாப்புச் சட்டம் உள்ளிட்ட வேளாண் சட்டங்கள் பற்றிய அறிவும் அவசியம். மின் ஆளுகை முறை, திட்டம் கொண்டு வரப்பட்டது, வேளாண்மை சார்ந்த மத்திய அரசுத் திட்டங்கள் சார்ந்தும் படிக்க வேண்டும்.’’.
இவ்வாறு செல்வ ராம ரத்னம் தெரிவித்தார்.
அடுத்த அத்தியாயத்தில் போக்குவரத்து, தகவல் தொடர்பு, பேரிடர் மேலாண்மையை எப்படிப் படித்தால் மதிப்பெண்களை அள்ளலாம் என்று பார்க்கலாம்.
முந்தைய அத்தியாயங்களையும் வாசிக்கலாம்..
TNPSC Exam Preparation: உள்ளங்கையில் அரசுப்பணி 13 : சிப்பாய்க் கலகம் முதல் திராவிட இயக்கங்கள் வரை!
TNPSC Exam Preparation: உள்ளங்கையில் அரசுப்பணி 10: அதிக மதிப்பெண்களை அள்ளித்தரும் அறிஞர்கள் பகுதி..
TNPSC Exam Preparation: உள்ளங்கையில் அரசுப் பணி 7: தமிழ் இலக்கியத்தில் 100 மதிப்பெண்கள் சாத்தியமே!
TNPSC Group 4 Preparation | உள்ளங்கையில் அரசுப் பணி 5: தமிழ் இலக்கணம் இனி எளிது... இனிது..!
TNPSC Preparation | உள்ளங்கையில் அரசுப்பணி 3: பொதுத்தமிழில் 100-க்கு 100 பெறுவது எப்படி?
TNPSC Exam Preparation | உள்ளங்கையில் அரசுப் பணி 2: முதல் முயற்சியிலேயே வெல்வது எப்படி?
TNPSC Govt Jobs | உள்ளங்கையில் அரசுப் பணி 1: இன்னும் ஏன் இந்த தாமதம்?
- க.சே.ரமணி பிரபா தேவி | தொடர்புக்கு: ramanip@abpnetwork.com