டிஎன்பிஎஸ்சி தேர்வைப் பொறுத்தவரை பொதுத் தமிழ் பகுதி மிகவும் முக்கியம். இதில் 100-க்கு 98, 99 மதிப்பெண்களைப் பெற்றுவிட்டால், பொது அறிவு பகுதியை நினைத்து அதிகம் கவலைப்படத் தேவையில்லை. வெவ்வேறு 10 பாடங்களைப் படித்துப் பெறும் 100 மதிப்பெண்களைத் தமிழ் என்னும் ஒரே பாடத்தில் இருந்து பெறலாம். அதை நினைவில் வைத்துக்கொண்டு, தமிழுக்குக் கூடுதல் முக்கியத்துவம் அளிக்க வேண்டியது அவசியம்.
குரூப் 4 பாடத்திட்டத்தின் பொதுத்தமிழ் தமிழ் அறிஞர்களும், தமிழ்த் தொண்டும் பகுதியில் முதல் 15 பகுதிகளை எவ்வாறு படிக்க வேண்டும் என்று பார்த்தோம். கடைசி 5 பகுதிகளைப் படிப்பது எவ்வாறு என்று இந்த அத்தியாயத்தில் பார்க்கலாம்.
இதுகுறித்து விளக்குகிறார் தமிழினியன் பயிற்சி மையத்தின் நிறுவனர் நித்யா பிரபு.
16. தமிழ் மொழியின் அறிவியல் சிந்தனைகள் தொடர்பான செய்திகள்.
மிக மிக முக்கியமான இந்தப் பகுதி 6ஆம் வகுப்பு முதல் பருவத்திலும் 8ஆம் வகுப்பு 3ஆம் பருவத்திலும் 9ஆம் வகுப்பிலும் வருகிறது. அதேபோல பழைய 10ஆம் வகுப்புப் புத்தகத்திலும் தமிழ் மொழியின் அறிவியல் சிந்தனைகள் குறித்த குறிப்புகள் உள்ளன. திருவாசகத்தில் அறிவியல் பற்றிய குறிப்புகள் உள்ளன. அண்டம் எப்படிப் பரந்து விரிந்துள்ளது என்பதை 1000 ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் கூறியுள்ளனர்.
அறுவை மருத்துவம், வானியல் அறிவு, உழுதல் வேளாண்மை உள்ளிட்ட பல்வேறு குறிப்புகள் சங்க காலத்திலேயே குறிப்பிடப்பட்டுள்ளன. சீவகசிந்தாமணியில் விமானம் பறப்பது பற்றிய குறிப்புகள் உள்ளன.
17. தமிழ் மகளிரின் சிறப்பு - மூவலூர் ராமாமிர்தம்மாள், டாக்டர் முத்துலட்சுமி அம்மையார், வேலு நாச்சியார் மற்றும் சாதனை மகளிர் - விடுதலைப் போராட்டத்தில் மகளிர் பங்கு - தில்லையாடி வள்ளியம்மை, ராணி மங்கம்மாள், அன்னி பெசன்ட் அம்மையார்.
டிஎன்பிஎஸ்சியைப் பொறுத்தவரை மகளிர் மற்றும் குழந்தைகள் குறித்து, பாடத்திட்டத்தில் எங்கு கூறப்பட்டிருந்தாலும் அதைத் தெளிவாக, முழுமையாகப் படிக்க வேண்டும். அதில் இருந்து கட்டாயம் கேள்விகள் கேட்கப்படும். தமிழ் மகளிரின் சிறப்பு பாடம் 6ஆம் வகுப்பு 2ஆம் பருவத்தில் உள்ளது.
மூவலூர் ராமாமிர்தம்மாள், டாக்டர் முத்துலட்சுமி அம்மையார்
இவர்கள் குறித்த குறிப்புகள் புதிய 9ஆம் வகுப்புப் புத்தகத்தில் உள்ளன. இருவரும் பொது அறிவு பாடத்திட்டத்திலும் உள்ளனர். மூவலூர் ராமாமிர்தம் இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களில் முக்கியமானவர். தேவதாசி முறையை ஒழிக்கப் பாடுபட்டவரில் முதன்மையானவர். பழைய 7ஆம் வகுப்புப் புத்தகத்திலும் இவர் குறித்த குறிப்புகள் உள்ளன. இவர் பெயரில் திருமண உதவித்தொகைத் திட்டமும் வழங்கப்படுகிறது.
டாக்டர் முத்துலட்சுமி இந்தியாவின் முதல் பெண் மருத்துவர், இந்திய சட்டமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்மணி என்பது உள்ளிட்ட பல்வேறு பெருமைகளுக்குச் சொந்தக்காரர்.
வேலு நாச்சியார்
வேலு நாச்சியாருக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துப் படிக்க வேண்டும். அலங்கார ஊர்திகள் புறக்கணிப்பு குறித்துக்கூட அண்மையில் செய்திகள் வெளியானது நினைவிருக்கலாம். 6ஆம் வகுப்பு 3ஆம் பருவத்திலும் பழைய 8ஆம் வகுப்பிலும் வேலு நாச்சியார் வருகிறார். இதைத் தெளிவாகப் படித்தால்போதும்.
சாதனை மகளிர்
சாதனை மகளிர் பற்றிய குறிப்புகள் 10ஆம் வகுப்பில் வருகின்றன. இசைப் பேரரசி எஸ்.எஸ்.சுப்புலட்சுமி, நடனத்தில் சிறந்து விளங்கிய பால சரஸ்வதி, நேருக்கு நேர் என்ற புதினத்துக்காக சாகித்திய அகாடமி விருது பெற்ற ராஜம் கிருஷ்ணன், மகளிர் சுய உதவிக்குழு ஆரம்பித்து முன்னாள் பிரதமர் வாஜ்பாயிடம் விருதுபெற்ற சின்னப்பிள்ளை உள்ளிட்ட 6 பேர் குறித்துத் தெளிவாகப் படிக்க வேண்டும்.
விடுதலைப் போராட்டத்தில் மகளிர் பங்கு - தில்லையாடி வள்ளியம்மை, ராணி மங்கம்மாள், அன்னி பெசன்ட் அம்மையார்.
விடுதலைப் போராட்டத்தில் மகளிரின் பங்கு குறித்து புதிய 9ஆம் வகுப்புப் புத்தகத்தில் வருகிறது. தில்லையாடி வள்ளியம்மை பற்றியும் ராணி மங்கம்மாள் குறித்தும் பழைய 9ஆம் வகுப்பில் படிக்கலாம். 10ஆம் வகுப்பு சமூக அறிவியல் புத்தத்தில் அன்னி பெசன்ட் அம்மையார் குறித்துக் கூறப்பட்டிருக்கும். பொது அறிவுப் பாடப்புத்தகத்திலும் இவர் குறித்துப் படிக்கலாம்.
18. தமிழர் வணிகம் - தொல்லியல் ஆய்வுகள் - கடல் பயணங்கள் - தொடர்பான செய்திகள்.
தமிழர்கள் எப்படிக் கடல் வணிகம் மேற்கொண்டனர்? அவர்களின் கடற்பயணங்கள் குறித்த குறிப்புகள், பண்டைய மன்னர்கள், சங்ககால மக்கள் எப்படி இருந்தனர் என்பது குறித்துப் படிக்க வேண்டும். தற்காலத்தில் கோவை, திருப்பூர், திண்டுக்கல், சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் வணிகம் எப்படி உள்ளது? அங்கு சிறந்து விளங்கும் தொழில்கள் என்னென்ன? என்பதும் முக்கியம். இவை குறித்த செய்திகள் புதிய 6ஆம் வகுப்பு 2ஆம் பருவத்திலும் 8ஆம் வகுப்பு 2ஆம் பருவத்திலும் பழைய 9ஆம் வகுப்பிலும் வருகின்றன. புத்தகத்தில் இருக்கும் தகவல்களைப் படித்தால் போதும்.
தொல்லியல் ஆய்வுகள் குறித்த குறிப்புகள் புதிய 9, 11ஆம் வகுப்புப் புத்தகத்திலும் பழைய 10ஆம் வகுப்புப் புத்தகத்திலும் உள்ளன. கடல் பயணங்கள் பற்றிய குறிப்புகள் புதிய 7ஆம் வகுப்பு 2ஆம் பருவத்திலும் பழைய 9ஆம் வகுப்புப் புத்தகத்திலும் வருகின்றன. புறநானூறு கடல் பயணம் குறித்து என்ன சொல்கிறது? கடல் பயணத்தைக் கூறும் நூல்கள் என்னென? கலங்கரை விளக்கம் எதற்காக?, நெய்தல் நில மக்களின் பணி என்ன உள்ளிட்ட கேள்விகள் இதில் இருந்து கேட்கப்படலாம்.
19. உணவே மருந்து - நோய் தீர்க்கும் மூலிகைகள் தொடர்பான செய்திகள்.
இதுபற்றிய பாடங்கள் புதிய 8ஆம் வகுப்பு 1ஆம் பருவத்திலும் பழைய 9ஆம் வகுப்புப் புத்தகத்திலும் உள்ளன. மஞ்சள் காமாலைக்கு என்ன மூலிகையை உட்கொள்ள வேண்டும்? கரிசலாங்கண்ணியின் வேறு பெயர், பயன்கள் என்ன? ஞான பச்சிலை என்பது எது? என்பது மாதிரியான பள்ளி பாடப்புத்தகத்தில் உள்ள தகவல்களை கேள்வி கேட்கப்படும் நோக்கில் படித்தால் போதும்.
20. சமயப் பொதுமை உணர்த்திய தாயுமானவர், இராமலிங்க அடிகளார், திரு.வி.கல்யாண சுந்தரனார் தொடர்பான செய்திகள் - மேற்கோள்கள்.
6ஆம் வகுப்பு 3ஆம் பருவத்திலும் பழைய 8ஆம் வகுப்புப் புத்தகத்திலும் தாயுமானவர் வந்துள்ளார். பராபரமே பராபரமே என்று பாடல் வரிகளில் வந்தாலே பெரும்பாலும் தாயுமானவரும் குணங்குடி மஸ்தான் சாகிபுமே எழுதி இருப்பர்.
இராமலிங்க அடிகளார் பற்றிய கேள்விகள் அடிக்கடி தேர்வில் கேட்கப்படுகின்றன. 9 வயதிலேயே பாடல்கள் இயற்றும் திறமை பெற்றிருந்தார். இவர் வள்ளலார் என்றும் அழைக்கப்படுகிறார். அவர் பற்றிய குறிப்புகள் புதிய 11, 12ஆம் வகுப்புப் புத்தகத்திலும் பழைய 10ஆம் வகுப்புப் புத்தகத்திலும் இடம்பெற்றுள்ளன.
திரு.வி.கல்யாண சுந்தரனார்
தமிழ்த் தென்றல் என்று அழைக்கப்படும் திருவிக, தனித்தமிழ் இயக்கத்துக்கு வித்திட்டவர். தமிழறிஞர், சிறந்த மேடைப் பேச்சாளர். இவர் பற்றிய பழைய 7, 9ஆம் வகுப்புப் புத்தகங்களில் உரைநடை வடிவில் கொடுக்கப்பட்டிருக்கும். முருகன் அல்லது அழகு மாதிரியான சமய நூல்கள், அரசியல் நூல்கள், வாழ்க்கை வரலாறு, பாடல்கள், பொதுவுடைமை தொடர்பான கட்டுரைகள் என ஏராளமான நூல்களை திருவிக எழுதி உள்ளார். இவர் குறித்து அவசியம் கேள்விகள் கேட்கப்படும்.
21. நூலகம் பற்றிய செய்திகள்.
தமிழை வளர்க்கவும் தமிழ் நூல்களைப் பாதுகாக்கவுமே நூலகங்கள் பயன்படுகின்றன. மதுரைத் தமிழ் நூலகம், அண்ணா நூற்றாண்டு நூலகம், சரஸ்வதி நூலகம், கன்னிமாரா உள்ளிட்ட ஏராளமான நூலகங்கள் தமிழ்நாட்டில் உள்ளன. இந்த நூலகங்கள் எப்போது தொடங்கப்பட்டன? குறிப்பிட்ட நூலகங்களின் சிறப்புகள் என்ன? எத்தனை தளங்கள் உள்ளன? இந்த நூலகங்களைத் தொடங்கி வைத்தவர் யார் என்பது பற்றிக் கேள்விகள் வரலாம். இவை குறித்த குறிப்புகள் 6ஆம் வகுப்பு 2ஆம் பருவத்தில் வருகின்றன.
பொதுத் தமிழ் பகுதியைப் படிப்பது எப்படி? கூடுதல் மதிப்பெண்கள் பெற என்ன செய்ய வேண்டும்? என்பதுகுறித்துக் கடந்த அத்தியாயங்களில் விரிவாகப் பார்த்தோம். பொது அறிவு பாடப் பகுதியை எப்படிப் படித்தால் மதிப்பெண்களை அள்ளலாம்?
- பார்க்கலாம்...
முந்தைய அத்தியாயங்களையும் வாசிக்கலாம்..
TNPSC Exam Preparation: உள்ளங்கையில் அரசுப் பணி 7: தமிழ் இலக்கியத்தில் 100 மதிப்பெண்கள் சாத்தியமே!
TNPSC Group 4 Preparation | உள்ளங்கையில் அரசுப் பணி 5: தமிழ் இலக்கணம் இனி எளிது... இனிது..!
TNPSC Preparation | உள்ளங்கையில் அரசுப்பணி 3: பொதுத்தமிழில் 100-க்கு 100 பெறுவது எப்படி?
TNPSC Exam Preparation | உள்ளங்கையில் அரசுப் பணி 2: முதல் முயற்சியிலேயே வெல்வது எப்படி?
TNPSC Govt Jobs | உள்ளங்கையில் அரசுப் பணி 1: இன்னும் ஏன் இந்த தாமதம்?
- க.சே.ரமணி பிரபா தேவி | தொடர்புக்கு: ramanip@abpnetwork.com