உங்கள் எண்ணத்தை மட்டுமல்ல வாழ்க்கையையே கூட இந்தத் தொடர் மாற்றலாம்.


''இந்தக் காலத்துல யாருங்க கவர்ன்மென்ட் வேலையை எல்லாம் விரும்புறா... கவர்ன்மென்ட் வேலையை விட அதிக சம்பளம், வேகமான வளர்ச்சி என்று எல்லா இளைஞர்களும் தனியார் வேலைக்குதான் ஓடுறாங்க...!'' என்று நினைப்பவரா நீங்கள்...? 


73.6 லட்சம் - இது என்ன எண் தெரியுமா? அரசாங்க வேலைக்காக விண்ணப்பித்துவிட்டுக் காத்திருப்போரின் எண்ணிக்கை. இவர்களில் முதுகலை பொறியியல், மருத்துவம், சட்டம் முடித்தோரும் உண்டு.


கிராமங்களில் இன்னும் வழக்கொழிந்து போகாத ஒரு சொலவடை உண்டு. அது, 'கால் காசுன்னாலும் அது கவர்மென்ட்டு காசு!'. ஒருவர் அரசு அலுவலகங்களில் உதவியாளராகக் கடைநிலைப் பணியில் இருந்தாலும், அரசு ஊழியர் என்பதால் அவருக்குத் தனி மரியாதை கிடைக்கும். பணி உத்தரவாதமே இதற்கான முக்கியக் காரணம். 


தனியார் துறைகளில் உச்சப் பதவியில் இருப்பவர்கள்கூட எந்தத் தருணத்திலும் தூக்கி எறியப்படக்கூடிய அபாயத்தில் இருக்கும்போது, அரசு வேலைகளின் பாதுகாப்பான பணி சூழலும், பொருளாதார மீட்பும் மக்களை ஈர்க்கும் அம்சங்களாக உள்ளன. 




'தமிழக வேலை தமிழர்களுக்கே'


அரசுப் பணி என்பதை இன்னொரு கோணத்திலும் பார்க்கலாம். அது அதிகாரத்தை நோக்கிய பயணம். அதனால்தான் 'தமிழ்நாடு அரசு வேலை தமிழர்களுக்கே' என்ற முழக்கம் வலியுறுத்தப்பட்டு வருகிறது. பல்வேறு அரசியல் தலைவர்களும் இதை முன்னிறுத்தி வருகின்றனர். 


தமிழ்நாட்டில் பெரும்பாலான அரசுத் துறைகளுக்கான வேலைவாய்ப்புகள் டிஎன்பிஎஸ்சி எனப்படும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நிரப்பப்பட்டு வருகின்றன. இந்தத் தேர்வுகளில் வெற்றி பெறுவது கடினம் என்ற மனப்பான்மையே பெரும்பாலும் இருக்கிறது. 


பொதுவாக ஒவ்வோர் ஆண்டும் குரூப் 4 தேர்வை சுமார் 15- 20 லட்சம் பேர் எழுதுகின்றனர். இதில் பாதிக்கும் மேற்பட்டோர் படிக்காமல் வெறுமனே வந்து எழுதுகின்றனர். 10 லட்சம் பேரில், 3 லட்சம் பேர் அடிப்படையை மட்டுமே படித்துவிட்டு வந்து தேர்வெழுதுவர். 4 லட்சம் பேர் மட்டுமே உண்மையான போட்டியாளர்கள் என்பதால் பயம் தேவையில்லை. துணிந்து தேர்வு எழுதலாம். 


உள்ளங்கை நெல்லிக்கனி


திட்டமிடல், சாதுர்யமான உழைப்பு, தொடர் முயற்சி, சரியான வழிகாட்டல் இருந்தால் போதும்.. எவர் ஒருவருக்கும் அரசுப் பணி என்பது, உள்ளங்கை நெல்லிக்கனி போல் உறுதி. அதற்கு இந்தத் தொடர் வழிகாட்டும் என்று நம்புகிறேன். 


தற்போது டிஎன்பிஎஸ்சி (TNPSC) சார்பில், பல்வேறு துறைகளுக்கான குரூப் 2, 2ஏ பதவிகளுக்காக 5,831 காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதேபோல, குரூப் 4 பதவிகளுக்காக 2020- 21ஆம் ஆண்டில் 5,255 காலி இடங்களும் 2021- 22ஆம் ஆண்டில் 3,000 பணி இடங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. 


பொதுவாக ஒவ்வொரு முறையும் குரூப் 4 பதவிகள் என்று பொதுமைப்படுத்திச் சொல்கிறோம். இதில் என்னென்ன அரசுப் பதவிகள் உள்ளன என்பதையும் அவர்களுக்கான ஊதியம் குறித்தும் முதலில் தெரிந்துகொள்ளலாம்.



கீழ்க்கண்ட குரூப் 4 பதவிகள் நடைமுறையில் உள்ளன. 


1.கிராம நிர்வாக அலுவலர் (Village Administrative Officer)
2.இளநிலை உதவியாளர் (Junior Assistant)
3.நில அளவையர் (Surveyer)
4.வரைவாளர் (Draftman)
5.வரி தண்டலர் (Bill Collector)
6.தட்டச்சர் (Typist)
7. சுருக்கெழுத்து தட்டச்சர் (Steno Typist). 


இவர்களுக்கான அடிப்படைத் தகுதி 10-ம் வகுப்புத் தேர்ச்சி. எனினும் தட்டச்சர் பணிக்கு தட்டச்சுப் படிப்பையும், சுருக்கெழுத்து தட்டச்சர் பணிக்கு சுருக்கெழுத்து, தட்டச்சர் என இரண்டு படிப்புகளையும் படித்திருக்க வேண்டும். தட்டச்சர் பணியில், தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் லோயர், ஹையர் என 4 தட்டச்சுப் படிப்பையும் முடித்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். இதனால் இந்த இரண்டு படிப்புகளுக்குப் போட்டி குறைவாக இருக்கிறது. 


அதேபோல நில அளவையர் பதவிக்குக் கூடுதலாக அந்த வேலைசார்ந்த தொழில்நுட்பப் படிப்பை முடித்திருக்க வேண்டும். மற்றவர்களுக்குத் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் அரசுப் பணி வழங்கப்படுகிறது. 


குரூப் 4 பதவிகளுக்கான ஊதியம் எப்படி?


இதில், சுருக்கெழுத்து தட்டச்சர் பதவிக்கு அடிப்படை ஊதியமாக ரூ.20,600 வழங்கப்படுகிறது. பிற பதவிகளுக்கு ரூ.19,500 மாதச் சம்பளம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 



அத்துடன்,


31 சதவீத அகவிலைப் படி (ரூ.6,000), 
வீட்டு வாடகைப் படி (ரூ.1,800), 
பயணப் படி (ரூ.300), 
மருத்துவப் படி (ரூ.300) 
உள்ளிட்டவை அடங்கும். 


இத்துடன் பண்டிகை காலத்தில் அதிகபட்சமாக ரூ.10 ஆயிரம் வரை வட்டியில்லாமல் முன்கடன் பெறலாம்.  


குரூப் 4 பதவிகள் குறித்தும் அவற்றுக்கான ஊதியம் குறித்தும் பார்த்தோம்... இந்தத் தேர்வுகளுக்கு எப்படித் தயாராவது?


பார்க்கலாம்...


-க.சே.ரமணி பிரபா தேவி, தொடர்புக்கு: ramanip@abpnetwork.com