உங்கள் எண்ணத்தை மட்டுமல்ல வாழ்க்கையையே கூட இந்தத் தொடர் மாற்றலாம்.


குரூப் 4 பாடத்திட்டத்தின் பொதுத்தமிழ் இலக்கணத்தில் உள்ள முதல் 10 பகுதிகளைக் கடந்த அத்தியாயத்தில் பார்த்தோம். மீதமுள்ள 10 பகுதிகளே முழுமையான தமிழ் இலக்கணத்தைக் குறிப்பவை. அவற்றைப் படிப்பது எப்படி என்று இந்த அத்தியாயத்தில் விளக்குகிறார் தமிழினியன் பயிற்சி மையத்தின் நிறுவனர் நித்யா பிரபு.


11. வேர்ச்சொல்லைக்‌ கொடுத்து வினைமுற்று, வினையெச்சம்‌, வினையாலணையும்‌ பெயர்‌, தொழிற்‌ பெயரை உருவாக்கல்‌


இதற்கு வேர்ச்சொல் என்றால் என்ன என்பதை அறிய வேண்டும். இது ஒரு கட்டளைச் சொல். அல்லது வினைமுற்றின் பகுதியாக வருவது. வினை முற்றுப்பெற்றதைக் குறிப்பது வினைமுற்று. பாடினான் என்னும் வினைமுற்றின் கட்டளைச் சொல் ’பாடு’. இதுதான் வேர்ச்சொல். செய்தான் என்னும் வினைமுற்றின் வேர்ச் சொல் ’செய்’. 


தேர்வில் ஆடு என்றும் வேர்ச்சொல்லின் வினைமுற்று என்ன? என்று கேட்கலாம். இதன் பதில், ஆடினான்/ ஆடினாள் என்பதே.


வேர்ச்சொல்லைக்‌ கொடுத்து வினையெச்சம் எழுதுக


வினைமுற்றைக் கொண்டு முடியும் எச்சமே (முற்றுப்பெறாத வடிவம்) வினையெச்சம். ஆடினான் என்னும் சொல்லின் எச்சம் -ஆடி. வினையெச்சம் என்பது வினையைக் கொண்டு முடியும் எச்சம். உதாரணத்துக்கு, ஆடி வந்தான். 


வேர்ச்சொல்லைக்‌ கொடுத்து வினையாலணையும்‌ பெயர் எழுதுக


வினையாலணையும்‌ பெயர் என்பது ஒரு வினைமுற்று வினையைக் குறிக்காமல், வினை செய்தவரைக் குறிப்பது.


முருகன் பரிசு பெற்றான். - இதில் பெற்றான் என்பது வினைமுற்று. 
பரிசு பெற்றானைப் பாராட்டினர்- பெற்றானை (முருகன்)- வினையாலணையும் பெயர்.


வேர்ச்சொல்லைக்‌ கொடுத்து தொழிற்பெயர் எழுதுக


அல், தல், அம், ஐ உள்ளிட்ட 19 விகுதிகளைக்கொண்டு வருவதே தொழிற்பெயர். இது பழைய 9-ம் வகுப்புப் பாடப்புத்தகத்தில் உள்ளது.


எடுத்துக்காட்டுக்கு, வந்தான் என்பதன் தொழிற்பெயர்- வருதல்.


மேற்குறிப்பிட்டவற்றை ஒரே உதார்ணத்தில் முழுமையாக அறிந்துகொள்ள,


காண்- வேர்ச்சொல்
கண்டான் - வினைமுற்று
வந்து கண்டான் - வினையெச்சம்
கண்டவர் - வினையாலணையும் பெயர்.
வருதல் - தொழிற்பெயர்.




12. அகர வரிசைப்படி சொற்களைச்‌ சீர்‌ செய்தல்‌


தமிழின் 247 எழுத்துகளையும் வரிசை முறையில் அமைப்பதே அகர வரிசையில் அமைத்தல் ஆகும். 


முதல் 12 எழுத்துகள் - அ முதல் ஒள, 
13வது எழுத்து - ஃ, 
14-வது எழுத்து- க்
15-வது எழுத்து - க (கவனிக்கவும், ங் அல்ல)
16-வது எழுத்து- கா. இது அப்படியே நீண்டு கி, கீ, கு, கூ என்று 26வது எழுத்தாக கெள வரும். 


பின்பு, ங், ங என்று ஙெள என்று முடியும். 


அதேவரிசையில் 247ஆவது எழுத்தாக னெள வரும். 


எடுத்துக்காட்டுக்கு... 
இலை, அம்மா, அப்பா,  காடு என்ற வார்த்தைகளை அகரவரிசைப்படி எழுதுக..


விடை: 1.அப்பா, 2.அம்மா, 3.இலை, 4.காடு 


இதில் இருந்து, இரண்டு கட்டாயம் 2 கேள்விகள் வரும். 


13. சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குதல்‌


ஒரு வாக்கியத்தில் மாறி மாறிக் கொடுக்கப்பட்டிருக்கும் சொற்களை ஒழுங்குபடுத்தி, முற்றுப்பெற்ற வாக்கியமாக மாற்றுதல். 


ஒரு வாக்கியம் எழுவாய், செயப்படுபொருள், பயனிலை என்னும் வரிசையில் அமைவதே சரியான வாக்கியமாகும். 


எழுவாய் - ஒரு செயலைச் செய்பவர். 
யார், என்ன, எதற்கு, எப்படி, எங்கே, ஏன் என்னும் கேள்விகளுக்குப் பதிலாக அமைவதே செயப்படுபொருள். 


எடுத்துக்காட்டுக்கு, நான் பாடம் படித்தேன். 


நான் - பயனிலை. (Subject)


படித்தேன்- வினைமுற்று (Verb)


நான் எதைப் படித்தேன் - இதில், பாடம் என்பதே விடையாதலால், பாடம் - செயப்படுபொருள்.  (Object)


எடுத்துக்காட்டுக்கு... 1.நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம், 2.நோயற்ற செல்வம் குறைவற்ற வாழ்வு, 3.நோயற்ற குறைவற்ற வாழ்வு செல்வம்  4.குறைவற்ற வாழ்வு நோயற்ற செல்வம் என்பதில் எது சரி?


இதில், நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பதே சரியாக இருக்கும்.  


14. பெயர்ச்சொல்லின்‌ வகையறிதல்


மேலே நாம் பார்த்த வேர்ச் சொல், வினை முற்று, வினையெச்சம், வினையாலணையும் பெயர் ஆகியவற்றின் மூலம் சொல் இலக்கணத்தைக் கற்றுக்கொண்டோம்.


ஒரு பெயரைக் குறிக்கும் சொல்லே பெயர்ச்சொல். இதை 6 வகைகளாகப் பிரிக்கலாம். பொருட்பெயர், இடப்பெயர், காலப்பெயர், சினைப்பெயர், குணப்பெயர், தொழிற்பெயர். 


பொருட்பெயர் - எடுத்துக்காட்டுக்கு: கண்ணன் (உயிருள்ள பொருட்பெயர்), மரம் (உயிரற்ற பொருட்பெயர்)


இடப்பெயர்- சென்னை, டெல்லி.


காலப்பெயர் - கண்ணிமைக்கும் நொடி முதல் ஊழிக்காலம் (அழிவுக்காலம்) வரையிலான பெயர்கள். 
எடுத்துக்காட்டுக்கு: நொடி, கிழமைகள், மாதம்.


சினைப்பெயர் (உறுப்பு) - ஒரு முழுமையான பொருளின் பாகங்களைக் குறிப்பது.
எடுத்துக்காட்டுக்கு: கை, கால் (மனிதனுக்கு), கிளை, வேர் (மரத்துக்கு)


குணப்பெயர்- பண்பை, குணத்தைக் குறிப்பது. 
எடுத்துக்காட்டுக்கு.. நிறம் (வெண்மை), சுவை (புளிப்பு), அளவு (எண்ணல், நீட்டல் உள்ளிட்ட அளவைகள்), வடிவம் (வட்டம், செவ்வகம் உள்ளிட்டவை) ஆகியவற்றின் அடிப்படையில் அமைந்த பெயர்களே குணப்பெயர் அல்லது பண்புப்பெயர் என்று அழைக்கப்படுகிறது.


தொழிற்பெயர்- அல் விகுதியோடு முடிவது. எடுத்துக்காட்டுக்கு, வருதல், ஆடல், பாடல்.


மரத்தடி- இலக்கணக் குறிப்பு தருக என்பதுபோலக் கேள்விகள் கேட்கப்படலாம்.


விடை: இடப்பெயர். மரத்தின் அடிப்பகுதி என்னும் இடத்தைக் குறிப்பதால், மரத்தடி என்பது இடப்பெயர் ஆகும்.



 
15. இலக்கணக்‌ குறிப்பறிதல்‌


இதில் எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என இலக்கணப் பகுதிகள் அனைத்தும் உள்ளடங்கி விடும். இதற்கு 6 முதல் 10-ஆம் வகுப்பு பள்ளி பாடப்புத்தகத்தில் உள்ள இலக்கணக் குறிப்புகளைத் தெளிவாகப் படிக்க வேண்டும். 


இலக்கணக்‌ குறிப்பறிதலில் முழு மதிப்பெண்கள் பெற பெயரெச்சம், முற்றெச்சம், தொகைநிலை (இது உம்மைத்தொகை, உவமைத்தொகை, வேற்றுமைத்தொகை, வினைத்தொகை, பண்புத்தொகை, அன்மொழித்தொகை என ஆறு பிரிவுகளாக உள்ளது), உருவகம், ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம், அடுக்குத்தொடர், இரட்டைக் கிளவி, உரிச்சொல், இடைச்சொல் ஆகிய பகுதிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்துப் படிக்க வேண்டும். 


எடுத்துக்காட்டுக்கு:  வருக வருக - அடுக்குத்தொடர், மளமள- இரட்டைக் கிளவி,


16. விடைக்கேற்ற வினாவைத்‌ தேர்ந்தெடுத்தல்‌


10-ம் வகுப்பு புதிய பாடப் புத்தகத்தில் வினா வகைகள், விடை வகைகள் என்ற பகுதிகளில் இதைப் படிக்கலாம். வினா வகைகள், அறிவினா, அறியா வினா, ஐய வினா, கொளல் வினா, கொடை வினா, ஏவல் வினா என 6 வகைப்படும். விடை வகைகள், சுட்டு விடை, மறை விடை, நேர் விடை, ஏவல் விடை, வினா எதிர் வினாதல்விடை, உற்றதுரைத்தல் விடை, உறுவது கூறல் விடை, இன மொழி விடை என 8 வகைப்படும். 


எடுத்துக்காட்டுக்கு,
திருக்குறளை எழுதியவர் யார் என்று ஆசிரியர் மாணவர்களைப் பார்த்துக் கேட்கும் வினா என்ன வினா?- அறி வினா (தெரிந்துகொண்டே கேட்பது). மாணவர் ஆசிரியரைப் பார்த்து வினவும் வினா அறியா வினா (தெரிந்துகொள்ளக் கேட்பது).


செய்வாயா என்று ஒருவர் கேட்டால், செய்கிறேன் என்றால் அது நேர் விடை (உடன்பட்டுக் கூறுவது). செய்ய மாட்டேன் என்றால் அது மறை விடை (எதிர்மறுத்துக் கூறுவது).


17. எவ்வகை வாக்கியம்‌ எனக்‌ கண்டெழுதுதல்‌


சொற்களின் வாயிலாக ஒரு குறிப்பிட்ட கருத்தைத் தரும் எழுத்து வடிவமே வாக்கியம். கருத்தின் அடிப்படையிலும் அமைப்பின் அடிப்படையிலும் வாக்கியங்களை 4 வகைகளாகப் பிரிக்கலாம்.


கருத்தின் அடிப்படையில், செய்தி வாக்கியம், கட்டளை வாக்கியம், வினா வாக்கியம், உணர்ச்சி வாக்கியம் என 4 வகைகள் உள்ளன.   எடுத்துக்காட்டுக்கு,
ராணி புத்தகம் படித்தாள் - இது செய்தி வாக்கியம். 
இளமையில் கல், இங்கு வா - கட்டளை வாக்கியம்.
நீங்கள் என்ன செய்கிறீர்கள்?- வினா வாக்கியம்.
ஆ, கல்லணை என்ன அழகு! - உணர்ச்சி வாக்கியம். (வெறுப்பு, அச்சம், வெகுளி உள்ளிட்ட பல)


அமைப்பின் அடிப்படையில், தனி வாக்கியம், தொடர் வாக்கியம், வினா வாக்கியம், கலவை வாக்கியம் என 4 வகைகள் உள்ளன. 


மணியும் சோமுவும் வந்தனர். - பல எழுவாய், ஒரே பயனிலையைக் கொண்டு முடிவதே தனி வாக்கியம். 


மோகன் போட்டியில் பங்கேற்றான்; வெற்றி பெற்றான்; பரிசு பெற்றான். - ஒரு எழுவாய் பல பயனிலைக் கொண்டு முடிவது தொடர் வாக்கியம். 


ரம்யா போட்டியில் பங்கேற்று வெற்றிபெற்று பரிசு பெற்றாள். - ஒரு முதன்மை வாக்கியத்துடன் பல சார்பு வாக்கியங்கள் இணைந்து வருவது கலவை வாக்கியம்.


எவ்வகை வாக்கியம்‌ எனக்‌ கண்டெழுதும் பகுதியில் இருந்து, தேர்வில் நிச்சயம் கேள்விகள் வரும். பழைய 10-ம் வகுப்புப் பாடப்புத்தகத்தில் இதுகுறித்து விரிவாக உள்ளது.


18. தன்வினை, பிறவினை, செய்வினை, செயப்பாட்டு வினை வாக்கியங்களைக்‌ கண்டெழுதுதல்‌


ஒரு எழுவாய் தானே ஒரு செயலைச் செய்வது- தன்வினை எனப்படும். 
எடுத்துக்காட்டுக்கு,
அதிதி பாடம் பயின்றாள் - தன் வினை.


ஒரு எழுவாய் ஒரு செயலைப் பிறரைக் கொண்டு செய்ய வைப்பதே பிறவினை. 
அதிதி பாடம் பயிற்றுவித்தாள் - பிற வினை.


எழுவாய், செயப்படுபொருள், பயனிலை வரிசையில் அமையும் வாக்கியத்தில் 'ஐ' என்னும் 2-ம் வேற்றுமை உருபு சேர்ந்து வருவது செய்வினை.
அசோக் மாலையைத் தொடுத்தான் - செய் வினை.


எழுவாய், செயப்படுபொருள், பயனிலை வரிசையில் அமையும் வாக்கியத்தில் 'ஆல்' என்னும் 3-ம் வேற்றுமை உருபும் 'படு', 'பட்டது' என்னும் சொல் உருபும் சேர்ந்து வருவது செயப்பாட்டுவினை.
மாலை அசோக்கால் தொடுக்கப்பட்டது - செயப்பாட்டு வினை.


இதுவும் பழைய 10-ம் வகுப்புப் பாடப்புத்தகத்தில் முதல் பாடத்தில் உள்ளது. 




19. உவமையால்‌ விளக்கப்பெறும்‌ பொருத்தமான பொருளைத்‌ தேர்ந்தெழுதுதல்‌


இது 7, 8-ம் வகுப்புப் புத்தகத்தில் சில பாடங்களில் மொழித்திறன் வளர் பயிற்சியில் கொடுக்கப்பட்டுள்ளது. நாம் அன்றாடம் பயன்படுத்தும் பழமொழி அல்லது உவமை கொடுக்கப்பட்டு, அதற்கான பொருளை தரப்பட்டுள்ள விடைகளில் இருந்து தேர்வு செய்தல். 


எடுத்துக்காட்டுக்கு, 


* கீழ்க்கண்டவற்றில் உவமையால்‌ விளக்கப்பெறும்‌ பொருத்தமான பொருளைத்‌ தேர்ந்தெடுத்து எழுதுக. - தாமரை இலை தண்ணீர் போல. 


1.ஒற்றுமை 2.பட்டும் படாமல் இருத்தல் 3.சண்டை 4.அழுத்தம்


விடை: பட்டும் படாமல் இருத்தல்


* சிட்டாய்ப் பறந்தான் - விரைவு என்னும் விடை சரியாக இருக்கும். 
* உள்ளங்கை நெல்லிக்கனி - தெளிவு
* கிணற்றுத் தவளைபோல - உலக நிலைகளை அறியாமல் இருத்தல் (2016 குரூப் 4 கேள்வி)


இந்தப் பகுதியில் அணி இலக்கணமும் வந்துவிடும். 


20. எதுகை, மோனை, இயைபு இவற்றுள்‌ ஏதேனும்‌ ஒன்றைத்‌ தேர்ந்தெழுதுதல்‌


யாப்பு இலக்கணத்தை முழுமையாகப் படித்தால், எதுகை, மோனை, இயைபு ஆகியவற்றுக்கு எளிமையாக விடையளிக்கலாம். 


செய்யுளில் 2-ம் எழுத்து ஒன்றி வருவதே எதுகை. இதில் அடி எதுகை, சீர் எதுகை உண்டு. 


னிய உளவாக இன்னாத கூறல் 
னிஇருப்பக் காய்கவர்ந் தற்று- இதில் இனிய- கனி என்னும் இரண்டு அடிகளில் இரண்டாவது எழுத்து ஒன்றி வந்துள்ளது. (அடி எதுகை)


மோனை


வரிகளில் முதல் எழுத்து ஒன்றிவரத் தொடுப்பதே மோனை.


துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத் 
துப்பாய தூஉம் மழை- இந்தக் குறளில் அடிகள் மற்றும் சீர்களுக்கு இடையேயான முதல் எழுத்து ஒன்றி வந்துள்ளது. 


துப்பார்க்குத், துப்பாய - அடி மோனை, 
துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்கு- சீர் மோனை


சீர் எதுகையும் இதில் உள்ளது.  
துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்கு- சீர் எதுகை.


இயைபு
சீர்களில் இறுதி அடி (ஒரே ஒலிச் சொற்கள்) அல்லது இறுதி எழுத்து ஒன்றிவரத் தொடுப்பது இயைபு எனப்படும். 


கொண்டல் கோபுரம் அண்டையில் கூடும்
கொடிகள் வானம் படிதர மூடும்.


இதில் கூடும்; மூடும் என்பதே அடி இயைபு.


புயலே குழலே மயிலே இயலே - இது சீர் இயைபு அல்லது முற்று இயைபு எனப்படுகிறது.


இலக்கணத்தில் உள்ள 20 பகுதிகளைக் கசடறக் கற்பது குறித்துப் பார்த்தோம். தமிழ் இலக்கியப் பகுதிகளைப் படித்து முழு மதிப்பெண்களைப் பெறுவது?


- பார்க்கலாம்.


முந்தைய அத்தியாயங்களையும் வாசிக்கலாம்..


TNPSC Group 4 Preparation | உள்ளங்கையில் அரசுப் பணி 4: மதிப்பெண்களை அள்ள முத்தான பத்து- பொதுத்தமிழ் இலக்கணம் ஒரு பார்வை


TNPSC Preparation | உள்ளங்கையில் அரசுப்பணி 3: பொதுத்தமிழில் 100-க்கு 100 பெறுவது எப்படி?


TNPSC Exam Preparation | உள்ளங்கையில் அரசுப் பணி 2: முதல் முயற்சியிலேயே வெல்வது எப்படி?


TNPSC Govt Jobs | உள்ளங்கையில் அரசுப் பணி 1: இன்னும் ஏன் இந்த தாமதம்?


- க.சே.ரமணி பிரபா தேவி | தொடர்புக்கு: ramanip@abpnetwork.com